போதிய சீருடை, காலணிகள் இல்லை; 'ரிஸ்க் அலவன்ஸ்' குறைவு; இழப்பீடு உயர்த்தப்படுமா? - வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் எதிர்பார்ப்பு

By க.சக்திவேல்

அதிக ஆபத்து இருந்தும் குறைவாக வழங்கப்படும் 'அலவன்ஸ்’, உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என வனக்காப்பாளர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட சிங்கமலை வனப்பகுதியில் கடந்த 17-ம் தேதி கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் பொன் கணேசனை திடீரென ஒரு யானை தாக்கியது. அப்போது, அவரைக் காப்பாற்ற முயன்ற வனக்காவலர் சதீஷ் (21), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தன்னார்வலர் பிரபாகர சேரபாண்டியன் (27) ஆகியோரை யானை தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இவ்வாறு எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, பணியாற்றும்போது வழங்கப்படும் 'ரிஸ்க் அலவன்ஸ்' ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும் என வனப்பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வனக்காப்பாளர், வனக்காவலர்கள் சிலர் கூறும்போது, "உயிரைப் பணையம் வைத்துதான் தினந்தோறும் காட்டுக்குள் நடந்து சென்று பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு 'ரிஸ்க் அலவன்ஸ்' ஆக மாதம் ரூ.800 அளிக்கின்றனர்.

நக்சல் ஒழிப்புப் பணிகளுக்காக காடுகளுக்குள் ரோந்து செல்லும் சிறப்பு இலக்கு படை (எஸ்டிஎஃப்) போலீஸாருக்கு மாதம் ரூ.8,000 'ரிஸ்க் அலவன்ஸ்' அளிக்கின்றனர். அதோடு, நவீன ஆயுதங்கள், சீருடைகள், காலணிகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

நாங்கள் பணிக்காலம் முழுவதும் காடுகளுக்குள் சென்று அதே ஆபத்துடன்தான் பணியாற்ற வேண்டும். ஆனால், எங்களுக்கு அதுபோன்ற சீருடைகள், அலவன்ஸ் இல்லை. வனக்காப்பாளர், வனக்காவலர் ஆகியோரின் ஊதியமும் குறைவுதான்.

எனவே, அலவன்ஸை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். எடை குறைவாக உள்ள துப்பாக்கிகளை வழங்க வேண்டும். யானைகள் அடிக்கடி வந்து செல்லும் இடங்களில் அவற்றின் இருப்பிடத்தை அறிய ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டும். பணியின்போது உயிரிழந்தால் ரூ.10 லட்சம் இழப்பீடு அளிக்கின்றனர். அதை உயர்த்தி வழங்க வேண்டும். யானைகளின் இனப்பெருக்க காலத்தில் கணக்கெடுப்புப் பணிகளை நடத்தாமல் தவிர்க்கலாம்" என்றனர்.

பரிதாப நிலையில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

தமிழகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் சிலர் கூறும்போது, "சீருடைப் பணியாளர்களைவிட எங்களுக்குதான் கூடுதல் பணிகள். உயிரிழந்த யானையை உடற்கூறாய்வு செய்ய வேண்டுமென்றால்கூட மருத்துவருக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள்தான் செய்கின்றனர். ஆனால், அரசு சார்பில் முறையாக சீருடை, காலணிகள் வழங்கப்படுவதில்லை. பணியின்போது சீருடைப் பணியாளர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்க மட்டுமே அரசாணை உள்ளது. ஆனால், அதே பணியை மேற்கொள்ளும் எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாணை இல்லை" என்றனர்.

தற்காப்புக்காக நடைபெறும் தாக்குதல்

வன கால்நடை மருத்துவர்கள் கூறும்போது, "புலி, சிறுத்தை போன்ற மாமிச உண்ணிகள் மனிதர்களைத் தாக்கினால், இரைக்காக அவை தாக்குகின்றன எனலாம். ஆனால், யானைகள் தற்காப்புக்காக மட்டுமே மனிதர்களைத் தாக்குகின்றன. அதுவும் திடீரென நேருக்கு நேர் எதிர்படும் சூழலில் அவ்வாறு நிகழ்கிறது. பட்டாசு வெடித்தும், ஒலி எழுப்பியும் மனிதர்கள் காடுகளை விட்டு வெளியேறும் யானைகளை விரட்டும்போது தொடக்கத்தில் அவை பயப்படும். பின்னர், அதுவே பழக்கமாகிவிடுகிறது. இதனால், காடுகளுக்குள் செல்லும்போது அவற்றின்போக்கு மாறுபடுகிறது.

வனத்துக்குள் எதிர்பாராத சூழலில் யானை துரத்தினால் அனுபவசாலிகள்கூட அதில் இருந்து தப்பிப்பது கடினம். அடர்ந்த காடுகளுக்குள் செல்லும்போது யானை நம்மை முதலில் பார்க்கிறதா, நாம் முதலில் யானையைப் பார்க்கிறோமா என்பது முக்கியம். மனிதர்களின் வாடையை வைத்தே அவை நம்மைக் கண்டுபிடித்துவிடும். அதன் தற்காப்பு எல்லைக்குள் நாம் இருக்கும்போது தாக்கும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்