சென்னையும் குடிநீர் தட்டுப்பாடும் பிரிக்கமுடியாதவை. நீர் நிலை கள் பற்றிய சமூக-பொருளியல் ஆய்வுகளை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருபவர் சென்னை வளர்ச்சி மையத் தின் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன். தமிழக, கர்நாடக மாநிலங்களில் காவிரி பாசன வசதி பெறும் விவசாயிக ளிடையே பலமுறை கலந்துரையாடலுக்கு துணை நின்று, இரு மாநில விவசாயிகளும் பரஸ்பரம் பிரச்சினைகளை புரிந்து கொள்ள உதவியுள்ளார். சமீபத்தில் மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சக நிதியுதவியுடன் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நீர் நிலைகள் பற்றிய ஒரு நீண்ட ஆய்வினை செய்து முடித்துள்ளார். இவரிடம் சென்னையின் குடிநீர் பிரச்சினை பற்றி சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் இராம.சீனுவாசன் நடத்திய உரையாடலின் தொகுப்பு இங்கே:
போதுமான மழை நீர் இல்லாத தால்தான் சென்னையும் புறநகர் பகுதி களும் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கின்றன என்பது சரியா?
அது தவறு. சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளின் ஆண்டு மழை அளவு சுமார் 1250 மில்லிமீட்டர். தமிழகத்தின் சராசரி ஆண்டு மழை அளவு 971 மி.மீ. மட்டுமே. 1965 முதல் 2012 வரை யான 48 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டில் தான் சென்னையில் 700 மி.மீ.யை விட குறைவாக மழை பெய்துள்ளது. 38 ஆண்டுகளில் 1000 மி.மீ.க்கு அதிகமாக பெய்துள்ளது. இந்த 38 ஆண்டுகளில்கூட 1200 மி.மீ.க்கும் அதிகமான மழை 27 ஆண்டுகளில் பெய்திருக்கிறது. தமிழகம் மற்றும் இந்தியாவின் சராசரியைவிட சென்னை சுற்றுப்பகுதிகளில் மழை அதிகமாகவே பெய்கிறது.
சென்னையில் அபரிமிதமான மழை நீர் கிடைக்கிறது என்பதே பலருக்கு ஆச்சரியமான செய்தி. ஆனால் நகர மயமாவது ஒரு பிரச்சினைதானே?
நகரமயமாகும் வேகத்தை பார்த் தால், அடுத்த 10 ஆண்டுகளில் காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவ தும் சென்னை பெருநகரின் அங்கமாக மாறிவிடும். இவ்வாறு நகரம் விரிவடைவ தால் முதலாவதாக, விவசாயம் குறுகிப் போகும். இந்த இரு மாவட்டங்களிலும் பாசன பயன்பாட்டில் உள்ள 3600 ஏரிகள் தொடர்ந்து விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை தரவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், இந்த நீர் நிலைகளை அழியாமல் பாதுகாத்தால் நமது குடிநீர் பிரச்சினையை தீர்க்கமுடியும்.
பாசன நீருக்கான தேவையும் குறையும் போது, இந்த நீர்நிலைகள் குடியிருப்பு பகுதிகளாக மாறுவதும், மற்ற நகர்ப்புற தேவைக்காக பயன் படுத்துவதும்தான் வழக்கமாகி வருகிறது. இதற்கு என்ன தீர்வு?
நகரமயமாதலால் நாம் இழந்த ஏரிகள் அதிகம். இன்னும் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். சிறுவயது முதல் பார்த்த வில்லிவாக்கம் ஏரி இன்று இல்லை. சிப்காட் தொழிற்பேட்டை, வீட்டு வசதி வாரியத்தின் தொகுப்பு வீடுகள், மாநகர பேருந்து நிலையம் ஆகியவைதான் தற்போது அங்கு உள்ளன. வேளச்சேரி ஏரி, ஆதம் பாக்கம் ஏரி, நங்கநல்லூர் ஏரி, மடிப்பாக்கம் ஏரி, சோழிங்கநல்லூர் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, பாழாகிப்போன திருநீர்மலை ஏரி என இன்னும் பல ஏரிகளை அழித்துக்கொண்டிருக்கிறோம். இதே நிலை தொடர்ந்தால், அவற்றையும் விரைவில் முழுவதாக இழந்துவிடுவோம்.
தொடர்ந்து தவறு செய்யாமல் இருப்பது, செய்த தவறுகளை ஓரளவு திருத்த முயற்சிப்பதுதான் நம்மால் செய் யக்கூடியவை. எல்லாவித ஆக்கிரமிப்பு களில் இருந்தும் ஏரிகளை காப்பாற்றுவது நம் முதல் வேலையாக இருக்கவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவது அரசி யல் ரீதியாக கடினமாக இருக்கும். ஆனால் இதுவரை ஆக்கிரமிக்கப்படாத ஏரிகளை யாவது காப்பாற்றலாம். வேளச்சேரி ஏரியில் ஐந்தில் ஒரு பகுதியை இன்னமும் விட்டுவைத்திருக்கிறார்கள். அதையாவது காப்பாற்றலாமே.
வற்றிப்போன நீர் நிலைகளை மீண்டும் மீட்டெடுப்பது சாத்தியமா?
நீர்நிலைகளை சீரமைப்பது என்பதில் தூர்வாருவது, கரைகளை செப்பனிடுவது, நீர்வரத்துக் கால்வாய்களை செப்பனிடு வது, நீர்ப் பிடிப்பு பகுதிகளில் உள்ள கால்வாய்களை செப்பனிடுவது, இவை அனைத்திலும் உள்ள நில ஆக்கிரமிப்பு களை அகற்றுவது என பல படிகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக ஏரி, குளம், குட்டைகள்தான் மழை நீர் சேகரிப்பு அமைப்புகளாக இருந்துவந்துள்ளன. இப்போது முடியாதா?
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் எவ்வாறு உள்ளது? நீர் மட்டத்தை உயர்த்த என்ன செய்யவேண்டும்?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. சென் னையில், குறிப்பாக கிழக்கு கடலோரப் பகுதியில் நிலத்தடி நீர் நன்றாக உள்ளது. கடலோரம் உள்ள Freshwater Aquifers இதற்கு காரணம். Aquifer என்பவை, கற் களாலான படிமங்கள். இவை மழை நீரைத் தேக்கி பூமிக்கு அடியில் வேகமாக பெரிய அளவுகளில் எடுத்து செல்லக் கூடியவை. இவைதான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், அந்த நீர் உப்பு, அமிலத் தன்மைகள் பெறாமல் இருக்கவும் உதவுகின்றன. இந்த படிமங்களை நாம் இப்போது சேதப்படுத்திய பின்பு நிலத்தடி நீர் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் சில மீட் டர்கள் குறைகின்றன. நிலத்தடி நீரில் உப்பு, அமிலத் தன்மையும் அதிகரிக் கின்றன.
சென்னையில் உள்ள பெரிய மருத்துவ மனைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதி கள், தொழிற்சாலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நிலத்தடி நீரை எடுத்துவந்து பயன்படுத்துகின்றன. இவற்றில் பல நிறுவனங்கள் இதற்கென வாகனங்களை, நிலங்களை சொந்தமாக வாங்கியுள்ளன. இது மட்டுமல்லாமல், நிலத்தடி நீரை உறிஞ்சி சென்னைக்கு எடுத்துவர தனியார் நிறுவனங்களும் பல இடங்களில் உருவாகியுள்ளன.
விவசாயத்துக்கு பயன்பட்டுவந்த ஆழ் துளை கிணறுகள் குடிநீர் வியாபாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத் துக்கு பயன்படுத்துவதைவிட குடிநீருக்கு விற்பது லாபகரமானது என்று விவசாயி களும் நினைக்கின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுப்பது அதிகரிக்கிறது, ஆனால், aquifer மூலம் நிலத்தடிக்கு அனுப்பும் நீரின் அளவு குறைந் துள்ளது. இந்நிலையில் ஏரிகள், குளம் குட்டைகள் மூலம் நிலத்தடி நீர்மட் டத்தை அதிகரிக்க வேண் டிய கட்டாயத்தில் உள் ளோம்.
இந்த 3 மாவட்டங் களில் உள்ள நீர் நிலை களைப் பற்றி பல வருடங் களாக ஆராய்ச்சி செய் துள்ளீர்கள். இந்த இயற்கை செல்வங்களை நாம் எந்த அளவுக்கு இழந்துள்ளோம்?
சமீபத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுத வியுடன் நான் மேற் கொண்ட ஒரு ஆய் வில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்களின் நீர்நிலைகளை கணக்கெடுத்து, GIS என்ற கணினி தொழில்நுட்பத்தை பயன் படுத்தி, ஒவ்வொரு ஏரியின் நீளம், அகலம், ஆழம் போன்ற விவரங்களை வரைபடத்தில் குறித்தோம். அரசின் பல்வேறு துறைகள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் பார்த்தால், காஞ்சிபுரத்தில் 1942 நீர்நிலைகள், திரு வள்ளூரில் 1646 நீர்நிலைகள் என மொத்தம் 3600 நீர்நிலைகள் இருந்துள் ளன. அதில் 1000 நீர்நிலைகளை இது வரை இழந்திருப்போம். 2600 நீர்நிலை களையாவது காப்பாற்ற வேண்டாமா?
ஒருபுறம் மழைநீரை தேக்கி பயன் படுத்தமுடியவில்லை. மற்றொரு புறம், சிறிய மழைக்குகூட சென்னை வெள்ளக்காடாகிவிடுகிறது. இது எதனால்?
எனது ஆய்வுக்காக 1971ல் எடுக்கப்பட்ட topo-sheet படத்தின் அடிப்படையில் கணினி தொழில்நுட்பத்தில் மாற்றியமைக் கப்பட வரைபடம் அருகே கொடுக்கப் பட்டுள்ளது. 3 மாவட்டங்களிலும் நதிகள், ஓடைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது இதில் தெரியும். இவை மழை நீர் வடிகால்கள்.
இந்த மழை நீர் வடிகால் அமைப்பின் குறுக்கே குடியிருப்பு பகுதிகள், சாலைகள், மற்ற கட்டிடங்களை கட்டுவதால், மழைக் காலத்தில் மழை நீர் வெளியேற வழியின்றி ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.
இன்று பக்கிங்காம் கால்வாய், கூவம், அடையாறு நதிகளை தவிர வேறு எந்த மழை நீர் வடிகால்களும் சென்னையில் இல்லை இவற்றை யும் ஆக்கிரமித்துள்ளோம். தொடர்ச் சியாக மாசுபடுத்தி நகரத்தின் திடக்கழிவு சாக்கடைகளாக மாற்றியுள்ளோம்.
ஆய்வுகள் 3 மாவட்டங்களை அடிப் படையாகக் கொண்டதே தவிர, பிரச்சினையும் தீர்வுகளும் தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் பொதுவானதே. அதிக மாகவே மழை பெய்கிறது. அவற்றை தேக்கி வைக்கவும் போதுமான நீர்த்தேக் கங்கள் உள்ளன, எஞ்சிய நீரை வெளியேற்ற வடிகால்கள் இருக்கின் றன. இவற்றை பாதுகாத்து பராமரித்தால் போதும், குடி நீர் பிரச்சினை, வெள்ளப் பெருக்கு இரண்டையும் ஒருசேர தீர்க்கமுடியும்
பேட்டியாளரைத் தொடர்புகொள்ள: seenu242@gmail.com
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago