நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் அறிவித்து, அதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் இங்கு பேசிட, விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில்தான் அந்த மாற்றம் நிகழும் என்று ஸ்டாலின் பேசினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பிறந்த நாள் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
“பொதுவுடைமை இயக்கத் தலைவர்களில் ஒரு மாபெரும் தலைவராக - நாடு போற்றக்கூடிய தலைவராக, வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய அய்யா நல்லகண்ணுவுக்கு இன்று 96-வது பிறந்த நாள்.
» நல்லகண்ணுவின் 96-வது பிறந்த நாள்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து
» கிராம சபைக் கூட்டம்; சட்ட விரோதமான, தவறான உத்தரவைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்
இந்தப் பிறந்தநாள் விழாவில் திமுக சார்பில் வாழ்த்த வேண்டும் என்று நானும், நம்முடைய பொதுச் செயலாளரும், அமைப்புச் செயலாளரும் இங்கே வருகை தந்து, அவரை வாழ்த்தி அவருடைய அன்பை, அவருடைய வாழ்த்துகளைப் பெற்றிருக்கிறோம்.
வாழ்த்துச் சொல்ல வந்த எங்களை, இங்கே சில கருத்துகளைச் சொல்ல வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் பணித்து என்னைப் பேச வைத்திருக்கிறார். அதற்காக நான் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அய்யா நல்லகண்ணுவைப் பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், ஒரே வரியில் சொல்லவேண்டும்.
இந்த நாட்டில் இருக்கக்கூடிய இன்றைய தலைவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்கக் கூடியவர்தான் நம்முடைய அய்யா நல்லகண்ணு.
ஒருமுறை தலைவர் கருணாநிதி, அய்யா நல்லகண்ணுவைப் பாராட்டிப் பேசுகிறபோது, ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். “என்னை விட வயதில் இளையவர்தான். ஆனால் தன்னுடைய தொண்டால், என்னைவிட மிக உயர்ந்தவராக இருக்கக் கூடியவர் தோழர் நல்லகண்ணு” என்று மனதாரப் பாராட்டினார்.
இந்த நேரத்தில் திமுக சார்பில் அதை நினைவுபடுத்தி, அவரை வணங்கி, வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். இங்கே இந்த நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார்.
நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று சிலர் அறிவித்து, அதற்கான முயற்சியில் ஈடுபடப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் இங்கு பேசிட, விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், நிச்சயமாகத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள், திமுக தலைமையிலான நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வெற்றியை உருவாக்கி, தமிழ்நாட்டில் நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கத்தான் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
அதற்கான பணிகளை, அதற்கான பிரச்சாரங்களை, பிரச்சார வியூகங்களை அமைத்து நம்முடைய அணியின் சார்பில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ போராட்டங்கள், எத்தனையோ உண்ணாவிரதங்கள், எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், எத்தனையோ மறியல்கள், எத்தனையோ சிறை வாசங்கள். இப்படிப் பல களங்களில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டு, அதில் வெற்றியும் கண்டு கொண்டிருக்கிறோம்.
அதில் ஒரு கட்டமாகத்தான், திமுக சார்பில் பிரச்சார வியூகங்களைப் பல்வேறு கோணங்களில் அமைத்து, அதில் ஒன்றாக கிராம சபைக் கூட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்திட வேண்டும் என்று முடிவு செய்தோம்.
ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து ஊராட்சிகளிலும் - ஏறக்குறைய 12,600-க்கும் மேல் இருக்கக் கூடிய ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி, அந்த ஊராட்சிப் பகுதியில் மக்களின் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளைக் களைவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவோம் என்று உறுதி தந்து, அந்த உறுதியை மக்களும் ஏற்றுக்கொண்டு நம் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரிய வெற்றியை நமக்குத் தேடித் தந்தார்கள்.
இப்போது மக்கள் கிராம சபைக் கூட்டம், கடந்த 23-ம் தேதி தொடங்கித் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவ்வாறு நடைபெறக்கூடிய அந்தக் கூட்டங்களில், நம்முடைய முத்தரசன் சொன்னது போல, ஆண்கள், பெண்கள் ஆயிரக்கணக்கில், பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்ளக்கூடிய காட்சிகளை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கூட்டம் கூடுவது என்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால், கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், கடைசிவரை இருந்து கேள்விகளைக் கேட்டு நம்மிடத்தில் பதிலை எதிர்நோக்கி, சிறு சலசலப்பு கூட இல்லாமல், ஒருவர் கூட எழுந்து செல்லாமல் அப்படியே கட்டுப்பாடாக இருந்து அந்தக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய காட்சிகளைப் பார்த்து நாம் பெருமைப்படுகிறோம், பூரிப்படைகிறோம்.
இதனைப் பார்த்து ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு கூட்டம் கூடுகிறது, இப்படிக் கட்டுப்பாடாக இருக்கிறார்களே, இத்தோடு நமது கட்சி முடிந்துவிடும் எனும் அந்த ஆத்திரம், இன்றைக்கு அவர்கள் கண்ணை மூடி இருக்கிறது.
அதனால்தான் நேற்று முன்தினம் திடீரென்று கிராம சபைக் கூட்டங்களை நடத்தக்கூடாது என்று ஒரு அரசாணையை அதிமுக அரசு பிறப்பித்தது. ‘கிராம சபை’ எனும் பெயரைப் போட்டு நடத்தக் கூடாது என்று எந்த விதிமுறைகளும் கிடையாது.
ஏற்கனவே ஊராட்சி சபைக் கூட்டத்தை நாம் நடத்தி இருக்கிறோம். இந்த அரசைப் பொறுத்தவரை, கிராம சபைக் கூட்டங்களை, அவர்கள் ஒழுங்காக நடத்திக் கொண்டிருந்தால், இதை நாம் நடத்த வேண்டிய தேவையே இல்லை. எனவேதான் இப்போது நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
அதை நாங்கள் நடத்துகிறோம். அரசு அதிகாரிகளை வைத்து நடத்தவில்லை. ஊராட்சித் தலைவர்களை வைத்துத் தீர்மானம் போட்டு, மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று நடத்தவில்லை. அப்படி நடத்தினால், அதை அவர்கள் தடுக்கலாம்.
கிராம சபைக் கூட்டம் என்ற பெயரை நாம் பயன்படுத்தக் கூடாதாம். அப்படி என்றால், எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்குப் போகும்போது, அவர் முதல்வர் என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு நீங்கள் தயாரா? என்ற கேள்வியை நான் திருப்பிக் கேட்க முடியும்.
ஆனால், நம்முடைய பணி நடக்க வேண்டும், பிரச்சாரம் நடக்க வேண்டும், அதற்கு எந்தத் தடையும் வந்துவிடக்கூடாது. மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தினால்தான், “துஷ்டனைக் கண்டால் தூர விலகி விட வேண்டும்” என்று சொல்வார்கள் அல்லவா, அதுபோலத்தான் நாமாக விலகிக் கொண்டு அந்தப் பெயரைக் கூட மாற்றி ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்‘ என்ற பெயரில் நாங்கள் நடத்துவோம் என்று கட்சித் தலைமை சார்பில் அறிவித்து, அது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆகவே, நான் உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது என்னவென்றால், வரவிருக்கக் கூடிய தேர்தல் என்பது, ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் உருவாக்கக்கூடிய வகையில் அது நிச்சயம் பயன்படப் போகிறது. அதற்கு அய்யா நல்லகண்ணு நமக்கெல்லாம் வழிகாட்டியாக நிச்சயமாக இருக்கப் போகிறார்.
எனவே அவர் காட்டக்கூடிய அந்த வழியில் நின்று, நாம் நம்முடைய கடமை ஆற்ற உறுதிமொழி எடுக்கக்கூடிய நிகழ்ச்சியாக அவரது பிறந்த நாள் நிகழ்ச்சியை நாம் பயன்படுத்திக் கொள்வோம். வாழ்க அய்யா நல்லகண்ணு”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago