அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல திமுக: திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

By செய்திப்பிரிவு

அதிகாரப் பூச்சாண்டிக்கு அஞ்சும் இயக்கமல்ல திமுக, திட்டமிட்டபடி மக்கள் சபைக் கூட்டங்கள் தொடர்ந்து நடக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 25) திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:

"அனைத்துக் கிராமங்களில் உள்ள அன்புக்கினிய தமிழ் மக்களைத் தேடி ஓடிவந்து 16 ஆயிரத்து 500 ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்துகிறது திமுக. திமுக அழைப்பதால் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். வாஞ்சை பொங்க வரவேற்பு வழங்குகிறார்கள். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவுக்குப் பேராதரவளித்து, ஆட்சி மாற்றத்தை உறுதியாக ஏற்படுத்துவோம் என்று உலகறியச் சொல்கிறார்கள். 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்கிற தீர்மானத்திற்கு ஊராட்சிகளில் நூறு, ஆயிரமென உவகையுடன் கையெழுத்திட்டு மாநில அளவில் பல லட்சக்கணக்கில் என எண்ணிக்கையை உணர்த்துகிறார்கள்.

டிசம்பர் 23 அன்று 1,100 என்ற அளவில் நடந்த கிராம வார்டு சபைக் கூட்டங்கள், 24 அன்று 1,600-க்கும் அதிகமாக நடந்துள்ளன. எல்லா இடங்களிலும் மக்கள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர் வந்து கூடுகிறார்கள். ஆட்சியின் அவலத்தைப் பற்றிக் குமுறுகிறார்கள்; கொந்தளிக்கிறார்கள். முதல் இரண்டு நாட்களிலேயே இத்தனை வரவேற்பு என்றால், இன்னும் ஜனவரி 10 வரை இந்த ஊராட்சிக் கூட்டங்கள் நீடித்தால், மக்கள் ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணி நோக்கியே சென்றுவிடக்கூடும் என்ற அச்சம், அதிமுக ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது.

200 தொகுதிகளுக்குத் துளியும் குறையாமல் வெற்றி என்பது முதல் இலக்கு. ஊழலில் திளைத்திடும் அனைத்து அமைச்சர்களில் ஒருவரும் வெற்றிபெறக்கூடாது என்பது திமுகவின் இரண்டாவது இலக்கு. இரண்டும் நிறைவேறிவிடும் என்பதை உளவுத் துறையினர் கொடுத்த அறிக்கைகளும், மக்கள் காட்டும் ஆர்வமும் ஆள்வோரின் தூக்கத்தைக் கெடுத்துவிட்டது. அரசியல் விபத்தில் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரே நாளில் உறக்கம் நிரந்தரமாகக் கலைந்து விட்டது.

பத்தாண்டுகளாக நடைபெறும் அதிமுக ஆட்சியில், மக்களுக்குப் பயன் தரும் சாதனைகள் என்ன என்பதை எடுத்தியம்பிட எதுவும் இல்லை என்பதால், திமுக நடத்தும் மக்களுடனான மகத்தான சந்திப்பை, அரசாங்க அதிகாரத்தைக் கொண்டு முடக்கும் முனை முறிந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். அவரது உத்தரவின் பேரில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் உள்ள ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராமசபை என்ற பெயரைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளும் தனியாரும் கூட்டம் நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என டிசம்பர் 24-ம் தேதியன்று பொழுது சாய்ந்தபிறகு அறிக்கை வெளியாகிறது.

இரண்டே நாட்களில் இத்தனை பயம் வந்து இதயத்தில் கூடு கட்டிக் கொண்டதா? அரசு சார்பில், முழுமையான அளவில், எல்லா அமைப்புகளுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் திராணியின்றி, தேர்தல் நடைபெற்ற ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்களை நடத்த வழியின்றிப் போன ஆட்சியாளர்கள், திமுகவினர் மக்களைச் சந்தித்தால், அனைத்துக் கிராமங்களிலும் அதற்குப் பேராதரவு பெருகினால், தொடை நடுங்கி, தடை போடுவதா?

அதிமுக அரசின் இந்த அராஜகப் போக்கினைக் கண்டித்து நேற்று (டிச. 24) இரவு 9 மணியளவில் உங்களில் ஒருவனான நான் பதிலறிக்கை வெளியிட்டேன். திமுகவினர் கூட்டம் நடத்தி, மக்களிடம் குறைகளைக் கேட்டு, ஆட்சியாளர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துகிறார்கள் என்றால், அதிமுக சார்பில் அதே போல ஊராட்சிகள் தோறும், வார்டுகள் வாரியாகவும் கூட கூட்டம் நடத்தி, கடந்த பத்தாண்டுகளாக நடந்த சாதனைகள் என்ன என்பதை எடுத்துரைக்கலாமே? குறிப்பாக, உலகமகா 'ராஜதந்திரி' எடப்பாடி பழனிசாமி கடந்த 4 ஆண்டுகளாக, ஜெயலலிதாவையே மிஞ்சக் கூடிய வகையில் நடத்தும் ஆட்சியின் சாதனைகள் என்னவென்று சொல்லலாமே? ஆட்சியர்களும், காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்புக்குப் புடைசூழ நிற்க, தோள் தட்டிச் சொல்லலாமே?

அதைச் செய்யும் நெஞ்ச உரமின்றி, நேர்மைத் திறனின்றி திமுக நடத்தும் கிராமசபைக் கூட்டங்களைத் தடுக்க நினைப்பது, அதிமுக அரசின் பயத்தையும் படு பலவீனத்தையுமே காட்டுகிறது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணத்தை நிறுத்தி விட முடியுமா? கிராமசபை என்ற பெயரைத்தானே கூட்டத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்கிறீர்கள்?

இத்தகைய அடக்குமுறைகளை, எத்தனையோ காலமாகச் சந்தித்துத்தான் திமுக இன்றும் வலிவுடனும் பொலிவுடனும் மக்களின் பேரியக்கமாகத் திகழ்கிறது. 'நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்' என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் முழங்கினார் அண்ணா. அதற்காகவே திமுகவைத் தடை செய்யும் நோக்குடன் 1963 இல் பிரிவினைத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சாதுரியமாகத் தனிநாடு கோரிக்கையை திமுக கைவிட்டது. 'பிரிவினையைக் கைவிட்டாலும் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன' என்பதை ஏற்கத்தக்க வகையில் திமுகவினருக்கும் மக்களுக்கும் விளக்கினார் அண்ணா. அதன் விளைவு, அடுத்து நடந்த 1967 பொதுத்தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என்றாக்கி, டெல்லிக்கு ஏற்ற பதிலடி தந்த அண்ணாவின் இயக்கம் இது.

அந்த அண்ணனின் தம்பியான கருணாநிதி, 'காஞ்சித் தலைவன்' என்ற படத்தில் 'வெல்க காஞ்சி... வெல்க காஞ்சி' என்ற பாடல் எழுதினார். காஞ்சி என்பது அண்ணா பிறந்த ஊர் என்பதால் அவரைத்தான் அது குறிக்கிறது என்ற குதர்க்கமான அரசியல் காரணத்தை முன்வைத்து, திரைப்படத் தணிக்கைத் துறையினர் அதனை நீக்கச் சொன்னார்கள்; தலைவர் கருணாநிதி மறுப்பு தெரிவிக்கவில்லை; 'வெல்க காஞ்சி' என்பதை 'வெல்க நாடு.. வெல்க நாடு' என்று மாற்றி அமைத்தார். காஞ்சியில் வெற்றி என்றிருந்த பாடல், தணிக்கைத்துறையின் நெருக்கடிக்குப் பிறகு, நாடெங்கும் வெற்றி என்பதாக எதிரொலித்தது. அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவர் தலைவர் கருணாநிதி. ஓய்வறியா சூரியனாம் கருணாநிதியிடமிருந்து, உழைப்பைத் தானமாகப் பெற்றிருப்பவன் உங்களில் ஒருவனான நான். அதனால், தடைகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அடக்குமுறைகளுக்கும், பயந்து ஒதுங்கும் வழக்கம் என்பது என்னிடம் எப்போதும் கிடையாது. அண்ணாவும் கருணாநிதியும் கட்டிக்காத்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பைச் சுமந்திருக்கும் நிலையில் இப்போதும் கிடையாது.

எப்படி, 'வெல்க காஞ்சி' என்பது 'வெல்க நாடு' என வெற்றியின் பரிமாணங்களை விரிவாக்கியதோ அதுபோல, கிராம சபைக் கூட்டம் என்பது இனி, மக்கள் சபைக் கூட்டம் என்ற பெயருடன் தொடர்ந்து நடைபெறும் என்பதை அறிவித்திருக்கிறேன். அறிவிப்போடு நின்றுவிடவில்லை. இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் வார்டுசபைக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களைச் சந்தித்து, அவர்களின் அன்பான வரவேற்பினை ஏற்று, அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைந்த கருத்துகளைக் கேட்டறிந்தேன்.

கிழக்குக் கடற்கரையை ஒட்டிய மரக்காணம் பகுதியில் உள்ள உப்பளத் தொழில், விவசாயம், வணிகம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அனைத்தும் எந்த அளவு அதிமுக ஆட்சியில் சீரழிந்து கிடக்கின்றன என்பதை மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆண்களும் பெண்களும் வேதனையோடு எடுத்துச் சொன்னார்கள்.

அதிலும், தேவி என்ற பெண்மணி, கிராமத்தினருக்கே உரிய ஒளிவுமறைவற்ற வார்த்தைகளால் அரசியல்வாதிகள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதற்கு ஆட்சியாளர்கள் நடந்துகொள்ளும் முறையையும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை அவர்களின் குடும்பங்களுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள் என்பதையும் விளக்கமாகச் சொன்னார்.

அவரிடம், 'எல்லா அரசியல்வாதிகளையும் அப்படி நினைத்துவிடாதீர்கள். பத்து ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாத திமுகதான் கரோனா பேரிடர் காலத்தில், 'ஒன்றிணைவோம் வா' செயல்பாட்டின் அடிப்படையில் ஓடோடி வந்து உதவியது' என்பதை நினைவூட்டினேன். 'அதனால்தான் நம்பிக்கையுடன் இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்' என்ற மரக்காணம் பேரூராட்சி மக்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாகத் தன் கருத்துகளைத் தெரிவித்தார்.

உங்களில் ஒருவனான என்னைப் போலவே திமுக முன்னோடிகளும், மாவட்டச் செயலாளர்களும் தமிழகம் முழுவதும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் வாயிலாக இன்றும் மக்களைச் சந்தித்தார்கள்; நாளையும் சந்திப்பார்கள்.

திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி சற்றே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால், கிராமசபைக் கூட்டங்களை நடத்தும் முன்னோடிகளின் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. ஆனாலும், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் கிராமசபைக் கூட்டங்கள் தொடங்கப்பட்ட டிசம்பர் 23-ம் தேதியன்றே ஆறு ஊராட்சிகளிலும், நேற்று 6 ஊராட்சிகளிலும் மக்கள் கிராமசபைக் கூட்டங்களை ஐ.பெரியசாமி எழுச்சியுடன் நடத்தியுள்ளார்.

தொடர்ந்து இன்றும் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி மக்களைச் சந்தித்துள்ளார். மக்களைச் சந்திப்பதில் திமுகவினர் எத்தனை ஆர்வத்துடன் செயல்படக் கூடியவர்கள் என்பதற்கு இதுவே சான்று! இதே எழுச்சியுடன் ஜனவரி 10 வரை, 16 ஆயிரத்து 500 ஊராட்சிக் கூட்டங்களை நடத்தி நிறைவேற்றும்வரை இது நிச்சயமாகத் தொடரும்.

அதனை அதிகார அத்துமீறல்களால் தடுக்க முடியாது என்பதை விளக்கும் வகையில், திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி ஹன்ஸ்ராஜ் வர்மா-வுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விளக்கியிருப்பதுடன், ஊடகத்தினரிடமும் அதனைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

திமுக ஆட்சிக் காலத்தில் 1998-ல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ், தமிழக கிராமசபைக் கூட்டங்கள் நடத்துவதற்கான விதிமுறைகள் எப்படி வகுக்கப்பட்டுள்ளன என்பதை வரிசைப்படுத்தியுள்ளார். அரசு அங்கீகாரத்துடன் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டம் என்பது என்ன, அதனை எந்தெந்த விதிமுறைகளுடன் நடத்த வேண்டும் என்பதையும், அத்தகைய முறையில் நடத்தப்படாத கூட்டங்களை, கிராமசபைக் கூட்டங்கள் என்ற பெயரில் இருந்தாலும் அதை அரசின் கிராமசபைக் கூட்டங்களாகக் கருத முடியாது என்று தெளிவுபடுத்தப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றம் என்பது அரசியலமைப்புச் சாசனம் உருவாக்கியுள்ள மாண்புமிகு அவை. அதேநேரத்தில், மாதிரி நாடாளுமன்றம் என்ற பெயரில் கருத்துகளை வெளிப்படுத்தும் அறிவுசார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் நாடாளுமன்றம் என்ற அமைப்புகள், குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்காக, நாடு முழுவதும் இயங்குகின்றன. அதுபோலத்தான், திமுக நடத்துவதும் மாதிரி கிராமசபைக் கூட்டங்கள். உண்மையாக நடத்த வேண்டியவர்கள், உரிய காலத்தில் உரிய முறையில், நடத்தத் தவறிய காரணத்தால், மக்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளப் பயப்படுவதால், மாதிரி கிராமசபைகளை திமுக நடத்துகிறது. அது தற்போது, மக்கள் கிராமசபையாக, மக்கள் வார்டு சபையாக உருவெடுத்திருக்கிறது. கிராமங்கள், நகரங்கள், மாநகரங்கள் என எங்கெங்கும் மக்கள் திரண்டு வந்து பங்கேற்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்குத் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன். அதிகாரத்தையும், சட்டத்தையும் காட்டி திமுகவை ஒருபோதும் அடக்கி ஒடுக்கிவிட முடியாது. நாங்களும் அதிகாரத்தில் இருந்தவர்கள்; நாளை இருக்கப் போகிறவர்கள். சட்டத்தை அறிந்தவர்கள்; அதனைப் பெரிதும் மதிப்பவர்கள். பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளால் திமுகவை சீண்டிப் பார்க்க வேண்டாம்.

'உலை வாயை மூடினாலும், ஊர் வாயை மூட முடியாது' எனக் கிராமப்புறங்களில் சொல்வார்கள். அந்தக் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் உங்கள் ஆட்சிக்கு எதிராகக் குமுறத் தொடங்கிவிட்டனர்; எரிமலையாய்க் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களின் வாயை மூடலாம் என நினைத்து, திமுகவின் கூட்டங்களுக்குத் தடை போட நினைத்தால், அதற்கான பதிலடியை ஜனநாயகமுறையில் நீங்கள் எதிர்கொண்டாக வேண்டும். அதிகார மிரட்டல்களுக்கு அணுவளவும் அஞ்சாமல், திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டங்கள் திட்டமிட்டபடி, ஜனவரி 10 வரை தொடரும்; இது உறுதி!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்