தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 30-ம் தேதி மக்கள்திரள் போராட்டம் அமைவதை அனைத்து நிலை நிர்வாகிகளும் உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்பாக அறவழிப் போராட்டம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன் மக்கள்திரள் போராட்டம், பேரூராட்சி அலுவலகங்கள் முன் அறப்போராட்டம் ஆகிய 3 நிலைப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள நாம், அடுத்தக்கட்டமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன் பெருந்திரள் போராட்டங்களை நடத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அரசுக்கு மனு கொடுக்கும் நிகழ்வுக்கு ஆயத்தமாகி வருகிறோம்.
டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் போராட்டம். ஆனாலும் எந்த சோர்வுமின்றி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகும் உற்சாகம். இது தான் நமது வலிமை. நம்மைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் இந்த வலிமை கிடையாது. காரணம். நமது கட்சியே போராட்டக் களத்தில் பிறந்தது தான். அதையும் கடந்து நமது போராட்டம் சமூகநீதியை வலியுறுத்தும் போராட்டமாகும்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயம் வன்னியர்கள் தான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தான் பாட்டாளிகள் உழைக்கிறார்கள்; பாடுபடுகிறார்கள். ஆனால், ஏணிகளையும், தோணிகளையும் போல நம்மால் தமிழகமும் முன்னேறுகிறது; தமிழகத்தில் உள்ள மக்களும் முன்னேறுகிறார்கள்.
ஆனால், நாம் இருந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் நாம் மட்டும் ஏன் புறக்கணிக்கப்படுகிறோம்? தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காவும் உழைக்கும் நம்மை புறக்கணித்து விட்டு இந்த தமிழகம் எவ்வாறு முன்னேறும்? இந்த நிலையை மாற்றி பாட்டாளிகளும் முன்னேற வேண்டும் என்பதற்காகத் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
சமூகத்தின் அடித்தட்டில் உள்ள ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக 20% இட ஒதுக்கீடு வழங்குங்கள் என்று கோரிக்கை வைத்தால், அதை நிறைவேற்றுவது தானே அரசின் முதல் கடமையாக இருக்க வேண்டும். தமிழக மக்கள்தொகையில் 25% மக்களின் நலனைப் புறக்கணித்து விட்டு, யாருடைய நலனுக்காக இந்த அரசு செயல்பட வேண்டும்? நியாயமான கோரிக்கைகளுக்காக 40% ஆண்டுகள் போராடியும் பயன் கிடைக்காத நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் போராடிக் கொண்டிருக்க முடியும்? இந்த நிலை இப்படியே நீடிப்பதை அனுமதிக்க முடியாது; சகித்துக் கொள்ள முடியாது.
நமது நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். நமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாம் ஓயப்போவதில்லை. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தொடர் போராட்டங்களின் அடுத்தக்கட்டமாக வரும் 30-ம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன் மக்கள்திரள் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்களை விட இந்தப் போராட்டம் நமது முழுமையான வலிமையை காட்டும் வகையில் அமைய வேண்டும். அதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும்.
இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் 50 இரு சக்கர ஊர்திகள் மற்றும் 100 இளைஞர்களைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள கிராமங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு நாளைக்கு 6 கிராமங்கள் முதல் 15 கிராமங்கள் வரை பயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றவுடன், அந்த கிராமத்தில் உள்ள இளைஞர்களுடன் இணைந்து வீடு வீடாகச் சென்று வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நடத்தப்பட இருக்கும் போராட்டம் குறித்த துண்டறிக்கைகளை வழங்க வேண்டும்.
அதிக குடும்பங்கள் வாழும் கிராமங்களில் குழுவினர் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து மக்களை சந்தித்து நமது போராட்டம் பற்றியும், அதன் தேவை குறித்தும் விளக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமின்றி, அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வன்னியர் சொந்தங்கள், வன்னியர் அல்லாத சகோதர சமுதாயங்கள் உள்ளிட்ட அனைவரையும் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டும்; வன்னியர்களுக்கு சமூகநீதி கிடைக்க போராட்டக் களத்திற்கு வரும்படி அழைப்பு விடுக்க வேண்டும். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் கையெழுத்துகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
30-ம் தேதி போராட்டத்திற்கு மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கான இந்தப் பரப்புரை உடனடியாகத் தொடங்கப்பட்டு 3 நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதிக கிராமங்களைக் கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியங்களில் இரு சக்கர ஊர்திப் பயணம் மற்றும் பரப்புரையில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். இந்த பரப்புரை பயணத்திட்டம் குறித்த நேரம் வாரியான விபரங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை தயாரித்து முன்கூட்டியே கிராமங்களுக்கு வழங்கி விட வேண்டும்.
நமது போராட்டத்தின் நோக்கம் குறித்த துண்டறிக்கைகள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இவர்கள் தவிர உள்ளூர் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறையாவது சென்று போராட்டத்தில் பங்கேற்க வரும்படி மக்களை அன்புடன் அழைக்க வேண்டும்.
பரப்புரை பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாநில, மாவட்ட பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் 3 பேரைக் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும். இரு சக்கர ஊர்திகளில் பயணிக்கும் இளைஞர்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் செல்ல வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிய வேண்டும். நமது கோரிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் விட உங்களின் பாதுகாப்பும், எதிர்காலமும் மிகவும் முக்கியம்.
இறுதிகட்டப் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன் இதுபோன்றதொரு பிரமாண்டமான போராட்டம் இதுவரை நடத்தப்பட்டதில்லை என்று போற்றும் அளவுக்கு 30-ம் தேதி மக்கள்திரள் போராட்டம் அமைவதை அனைத்து நிலை நிர்வாகிகளும் உறுதி செய்ய வேண்டும். நமது போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு முன்னோட்டமாக நமது இளைஞர்கள் நடத்தவுள்ள இரு சக்கர ஊர்தி பரப்புரை பயணம் அமைய வேண்டும், அதற்காக அனைவருக்கும் வாழ்த்துகள்”.
இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago