திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா: பக்தர்களை அனுமதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் எடுத்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அனைத்து தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பக்தர்களை அனுமதிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநள்ளாரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் அன்று முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரை சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்த காரைக்கால் மாவட்ட ஆட்சியரும், கோயில் செயல் அலுவலரும் முடிவெடுத்தனர்.

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் கோயிலுக்குள் மட்டும் பக்தர்களை அனுமதிப்பது என்றும், நள தீர்த்ததில் நீராட அனுமதிப்பதில்லை என்றும் முடிவெடுத்து, புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சனிப்பெயர்ச்சி திருவிழாவின்போது பக்தர்களை அனுமதிக்கும் முடிவை கைவிடக்கோரி கோயிலின் ஸ்தானிகர்கள் சங்க தலைவரான எஸ்.பி.எஸ். நாதன் என்பவர் புதுச்சேரி அரசு, காரைக்கால் ஆட்சியர், கோயில் செயல் அலுவலர், துணைநிலை ஆளுநர் ஆகியோருக்கு நவம்பர் 27-ம் தேதி மனு கொடுத்தார்.

அதன்பின்னர் நடவடிக்கை இல்லாததால் பக்தர்களை அனுமதிக்கும் அரசின் முடிவிற்கு தடை விதிக்கக்கோரி நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மற்றும் சனீஸ்வர பகவான் கோயில் தனி அதிகாரி அர்ஜுன் சர்மா தாக்கல் செய்த பதில் மனுவில், “சனிப்பெயர்ச்சி தினமான 27-ம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம் போன்ற தீர்த்தங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயர்ச்சி தினத்தை தவிர்த்து மீதமுள்ள 48 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னதானம் கோயிலுக்கு வெளியில் வழங்கப்படும்.

தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள வரிசை மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் கிருமிநாசினி பயன்படுத்துவது மற்றும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பக்தர்களை கண்காணிக்க 140 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள நிலையில் கோயிலை மூட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், மத உணர்வுடைய பக்தர்களின் வழிபடும் உரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், சனிப்பெயர்ச்சி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும்”. என தெரிவிக்கப்பட்டது.

இந்த 48 நாட்களில் தரிசனத்துக்காக 60,000 மின்னணு அனுமதி சீட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ள போதிலும் தரிசன நாளில் நாளொன்றுக்கு எத்தனை பேரை அனுமதிப்பார்கள் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி அனிதா சுமந்து, அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும், கரோனா தடுப்பு விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுத்தவிர, சனிப்பெயர்ச்சி திருவிழா நடத்துவது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர், காரைக்கால் மாவட்ட ஆட்சியர், புதுச்சேரி இந்து சமய அறநிலையத் துறைச் செயலாளர், கோவில் செயல் அலுவலர், மனுதார் மற்றும் தேவைப்படும் நபர்கள் அடங்கிய கூட்டத்தை இன்று நண்பகல் 12 மணிக்கு கூட்டி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் திருவிழாவை நடத்திக் கொள்ளலாம் என அனுமதித்து வழக்கை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்