திருப்பத்தூர் அருகே கி.பி.751-ம் ஆண்டைச் சேர்ந்த பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டெடுப்பு

By ந. சரவணன்

திருப்பத்தூர் அருகே கி.பி 751-ம் ஆண்டைச் சேர்ந்த பள்ளிச்சந்தம் வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர், ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் திருப்பத்தூர் மாவட்டம், குண்டு ரெட்டியூர் மலைச்சரிவில் கள ஆய்வு நடத்தியபோது சுமார் 1,270 ஆண்டுகள் முந்தைய, பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டைக் கண்டெடுத்துள்ளனர்.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:

‘‘கடந்த 2016-ம் ஆண்டு முதல் திருப்பத்தூர் அடுத்த குண்டு ரெட்டியூரில் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வரலாற்றுத் தடயங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளோம். குண்டு ரெட்டியூரில் கற்காலம் முதல் சங்க காலம், பல்லவர் காலம் வரை பல வரலாற்றுத் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதில், ஆயுதங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்ட ஓடுகள், சுடுமண் ஊது குழாய்கள், தக்களிகள், கல்மணிகள், உடைந்த வளையல்கள் உள்ளிட்ட தொல்பொருட்கள் சேரிக்கப்பட்டு தூய நெஞ்சக்கல்லூரி நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குண்டு ரெட்டியூரில் முறையாக அகழாய்வு நடத்தவும் அரசுக்கு ஆய்வறிக்கை அனுப்பியுள்ளோம்.

இந்நிலையில், குண்டு ரெட்டியூரில் சமீபத்தில் கள ஆய்வு நடத்தியபோது, மலைச்சரிவில் அடர்ந்து புதர்களுக்கு இடையே பாறைக்குன்றின் பக்கவாட்டில் ‘பள்ளிச்சந்தம் வட்டெழுத்து’ கல்வெட்டு கண்டெடுத்தோம். இந்தக் கல்வெட்டு, தூய தமிழ் வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. புடைப்பு விளிம்புடன் கூடிய கட்டத்தில் 9 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

இக்கல்வெட்டானது, சமணப் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட ‘பள்ளிச்சந்தம்’ என்பதைக் குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக்கிறது. அக்காலத்தில் பள்ளிச்சந்தம் என்பது, பிரமதேயம், தேவதானம் போல சமண சமயத்தார்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையைக் குறிப்பதாகும்.

ஸ்ரீ புருஷ வர்மன் என்ற மேலைக்கங்க மரபைச் சார்ந்த மன்னனின் 25-ம் ஆட்சிக் காலத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகும். ஸ்ரீ புருஷவர்மன் மன்னன் தெற்கு கர்நாடகம் மற்றும் வட தமிழகத்தை ஆட்சி செய்தவர். இவரது காலம் கி.பி.726 முதல் கி.பி.788 வரையாகும். இக்கல்வெட்டு கி.பி 751-ல் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,270 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

ஸ்ரீ புருஷ வர்மனின் நடுகற்கள் தருமபுரி மாவட்டம், பாலவாடி மற்றும் இண்டூர் பகுதிகளில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கி.பி. 736 மற்றும் 747 ஆகிய ஆண்டுகளைச் சேர்ந்தவையாகும். குண்டு ரெட்டியூரில் நிலக்கொடைக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் பள்ளிச்சந்தையை ‘மிறை அடக்கியார்’ என்ற சிற்றரசனின் மகன் ‘கடுகட்டியார்’ வழங்கியுள்ளார். இவர் ஸ்ரீ புருஷ வர்மனின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளான ‘கோவூர்நாடு’ ‘எயின்நாடு’ ஆகியவற்றை ஆட்சி செய்தவர். கடுகட்டியார் வழங்கிய பள்ளிச் சந்தத்தின் 4 எல்லைகளை விளக்கி அந்நிலத்தின் விளைச்சல் பாதுகாக்கப்பட்டு, சமணப் பள்ளிகளுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்பதை இக்கல்வெட்டு விளக்குகிறது.

இக்கல்வெட்டில் உள்ள வட்டெழுத்துகள் தூய தமிழ் நடையினைக் கையாண்டு எழுதப்பட்டுள்ளன. ‘ஸ்வஸ்திஸ்ரீ’ என்ற சொல்லை ‘சுவத்திரிசிரி’ என்றும் புருஷவர்மன் என்பதை ‘புருசவிக்கிரமபருமர்’ என்றும் தமிழ்ப்படுத்திக் குறிப்பிட்டுள்ளனர். கங்க மன்னர்கள் சிறந்த சமணப் பற்றாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு சிறந்த சான்றாகும்.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இக்கல்வெட்டானது சமய நல்லிணக்கத்தினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையினை எடுத்துரைக்கும் இக்கல்வெட்டினை முறையாகப் பாதுகாக்க தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும்’’.

இவ்வாறு ஆ.பிரபு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்