வீடியோவில் ஒரு நாள் திருக்குறள் வாசிக்கிறார் திருவள்ளுவர். ஆத்திச்சூடி சொல்கிறார் ஒளவையார். இன்னொரு வீடியோவில் ரெளத்திரமாய் மீசையை முறுக்குகிறார் பாரதியார். வேறொரு நாளில் விவசாயி ஒருவர், வேளாண்மை குறித்துப் பேசுகிறார். சோளக்காட்டுப் பொம்மை ஒன்று, கைகளை நீட்டி அசையாமல் அப்படியே நிற்கிறது.
அடுத்தடுத்த நாட்களில் அனுப்பப்படும் வீடியோவில் என்னென்ன வேடங்கள் என்று குழந்தைகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். குறிப்பிட்ட வேடங்களில் கேட்கும் கேள்விக்கு, குழந்தைகளும் அதே வேடம் தரித்துப் பதில் வீடியோ அனுப்புகின்றனர். கரோனா காலகட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் இந்தச் சங்கிலி நிகழ்வைத் தொடர்ச்சியாக நடத்தி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் வாசுகி. அவரே திருவள்ளுவர், ஔவையார், பாரதியார் வேடங்களுக்கு மாறி, பாடம் நடத்துகிறார்.
யார் இந்த ஆசிரியர் வாசுகி?
ஈரோடு மாவட்டம், பவானி ஒன்றியத்தில் உள்ள கே.ராமநாதபுரம் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாகத் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் ஆசிரியர் வாசுகி.
குழந்தைகளோடு குழந்தையாகவே மாறி, 7 ஆண்டுகளாக அரசுப் பள்ளிச் சீருடையையே சேலையாகத் தைத்து அணிந்து வரும் ஆசிரியர் வாசுகி, ஆடிப் பாடிப் பாடம் நடத்துவதையே தனக்கான அடையாளமாக வைத்திருக்கிறார். கரோனா காலகட்டத்திலும் அதையே பின்பற்ற முடிவெடுத்தார். வீட்டின் அறையையே வகுப்பறையாக மாற்றியவர், அங்கேயே பாடம் நடத்தி, மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்ப ஆரம்பித்தார்.
கரோனா காலத்துக் கற்பித்தல் குறித்து அவர் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''பொதுமுடக்க விடுமுறைக்கு முன்னதாகவே 'சிங்காரப் பள்ளி' என்னும் வாட்ஸ் அப் குழுவைத் தொடங்கி, பள்ளியின் செயல்பாடுகளைப் பகிர்ந்து வந்தோம். வாட்ஸ் அப் கொண்ட போன் வைத்திருக்கும் பெற்றோர்களுக்காகவும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக் குழுவினருக்காகவும் இதைச் செயல்படுத்தி வந்தோம்.
மேலும் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை, மாணவர்களின் சாதனை ஆகியவை குறித்தும் குழுவில் பகிர்ந்து கொள்வோம். கரோனா காலகட்டத்தில் நோய் விழிப்புணர்வு குறித்த தகவல்களையும் பகிர்ந்தோம். அதேபோல சொந்தமாகவே பாடம் நடத்தி, அதை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப் வழியாக மாணவர்களுக்கு அனுப்ப ஆரம்பித்தோம்.
குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், பாடங்களுடன் பாடல்களையும் பாடி அனுப்ப ஆரம்பித்தேன். அப்போதுதான் ஏன் அவற்றுக்கான வேடம் போட்டு, பாடி அனுப்பக் கூடாது என்று தோன்றியது. உடனே அதைச் செயல்படுத்தினேன்.
இதுவரை பாரதியார், ஔவையார், விவசாயி, பிச்சைக்காரன், சோளக்காட்டுப் பொம்மை, கோமாளி, பூக்காரி, யானை முகமூடி உள்ளிட்ட பல்வேறு வேடங்களைப் போட்டிருக்கிறேன். அதே வேடத்தில், பாட்டுப் பாடியோ, பாடம் கற்பித்தோ வீடியோ அனுப்பி இருக்கிறேன். இதனால் மாணவர்கள் முன்பை விட ஆர்வத்துடன் பாடங்களைக் கற்கின்றனர்.
பழங்காலப் பாடல்கள், மழைப் பாடல்களை நானே உரிய அசைவுகள், ராகத்தோடு பாடி அனுப்புவேன். வீடியோ இருதரப்புக்குமானதாக இருக்க வேண்டும் என்பதால் அதிலேயே சின்னச் சின்னக் கேள்விகளும் கேட்பதுண்டு. ஆர்வமுள்ள மாணவர்கள் அதே வேடம் தரித்து, பதில் கூறி வீடியோ எடுத்து அனுப்புவர். அதேபோல பெற்றோர்களும் ஒன்றுகூடி மாணவர்களைக் கொண்டு நாடகங்கள் நடத்தி, பாட்டுப் பாடி, வீடியோ எடுத்து அனுப்புகின்றனர். வாட்ஸ் அப் இல்லாத மாணவர்கள், அருகில் வாட்ஸ் அப் வைத்திருக்கும் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று படிக்கின்றனர்.
இப்போதைய கல்வித் திட்டத்தில் 1-ம் வகுப்பில் வரும் தாவரம் உள்ளிட்ட பாடங்களின் தொடர்ச்சிதான் 5-ம் வகுப்பு வரை வரும். இதனாலும் பொதுவான மொழிப் பாடல்களையும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அனுப்புகிறேன். நேரம் கிடைக்கும்போது என் மகனும் முன்னாள் மாணவர்கள் மூவரும் வீடியோவை எடுக்க உதவுவர். பெரும்பாலான வீடியோக்களை மகனே எடிட் செய்து தருவார்.
பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்பவர்கள் என்பதால், மாலை நேரத்தில்தான் வீடியோக்களை அனுப்புவேன்.
‘இன்னிக்கு டீச்சர் என்ன வேஷம் போட்டு அனுப்புவாங்க’ என்று மாணவர்கள் தினந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகப் பெற்றோர்கள் சொல்வது மகிழ்ச்சி அளிக்கிறது. நேரம் கிடைக்கும்போது தினந்தோறும் வீடியோ அனுப்புவேன். 68 பாடல்களைப் பாடி வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன்.
வீடியோக்களை எங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கும் பெற்றோர்கள், அவர்களின் உறவினர்களுக்கும் அனுப்பி வைப்பதாகச் சொல்கின்றனர். இத்தகைய விமர்சனங்கள் இன்னும் கூடுதலாகச் செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கின்றன. எப்போதும் தனித்தன்மை கொண்ட, சொந்தப் படைப்புகளை மட்டுமே மாணவர்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறேன்'' என்று புன்னகைக்கிறார் 2017 ஆம் ஆண்டு தேசிய நல்லாரிசிரியர் விருது பெற்ற ஆசிரியர் வாசுகி.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago