தமிழ்நாட்டில் டிச.27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: மோட்டார் வாகன உரிமையாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு

By ஜெ.ஞானசேகர்

தமிழ்நாட்டில் டிச.27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும், மாநில அரசு தங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என்றும் தென் மண்டல மோட்டார் வாகன உரிமையாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில் இன்று தென் மண்டல மோட்டார் வாகன உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அமைப்பின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’கடந்த பல மாதங்களாக தமிழ்நாடு அரசிடம் 9 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அதில் ஒரு கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டுள்ளது. எஞ்சிய 8 கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பு நேரிட வாய்ப்பு இல்லாத நிலையில், நிறைவேற்றாததற்கான காரணம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.

80 கி.மீ. வேகத்துக்கு மிகாமல் இயங்கும் வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்த வேண்டிய அவசியம் இல்லை. அண்டை மாநிலங்களில் இவ்வாறு உள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் இதை அமல்படுத்த வேண்டும். குறிப்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியைப் பொருத்த வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 20,000 வாகனங்கள் வந்து செல்கின்றன. இதில், பெரும்பாலான வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவியோ, பிரதிபலிக்கும் ஸ்டிக்கரோ இல்லை. மேலும், அதிக பாரம் ஏற்றி வரும் வெளிமாநில லாரிகளுக்குத் தமிழ்நாட்டில் அபராதம் விதிக்கப்படுவதில்லை. வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதுபோன்ற வாகனங்களை அனுமதிக்கின்றனர்.

குறிப்பிட்ட நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் ஜிபிஎஸ் கருவிகளை மட்டும் பொருத்தக் கட்டாயப்படுத்தாமல், ஏஐஎஸ் 140 ஒப்புதல் பெற்ற அனைத்து நிறுவனங்களின் ஜிபிஎஸ் கருவிகளையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எஃப்சி எடுக்க 4 நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால், கர்நாடகத்தில் 4 மணி நேரத்தில் அளிக்கின்றனர். இதனால், தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் அங்கு சென்று லாரிகளுக்கு எஃப்சி எடுக்கின்றனர். இதனால், தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடுகிறது.

இந்தியாவிலேயே பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் டீசல் விலை அதிகம். எனவே, டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அரசு நடவடிக்கை எடுக்காததால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.

வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு இனங்கள் மூலமாக லாரி உரிமையாளர்களிடம் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு ரூ.4,000 கோடி முதல் ரூ.5,000 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. ஆனால், அரசு எங்களை மதிப்பதில்லை. நாங்கள் போராட்ட அறிவிப்பு வெளியிடுவதற்கு மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர்தான் காரணம். இதுவரை அரசு எங்களை அழைத்துப் பேசாதது வேதனையாக உள்ளது.

தமிழ்நாடு அரசு எங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டில் டிச.27-ம் தேதி முதல் 4 லட்சம் லாரிகள் இயங்காது. பிற மாநிலங்களில் இருந்து லாரிகள் உட்பட 12 லட்சம் மோட்டார் வாகனங்களும் தமிழ்நாட்டுக்கு வராது’’.

இவ்வாறு ஜி.ஆர்.சண்முகப்பா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE