பொருட்களை எடுக்க இளையராஜாவை அனுமதிக்க முடியாது: பிரசாத் ஸ்டுடியோ தரப்பு உயர் நீதிமன்றத்தில் பதில்

By செய்திப்பிரிவு

பொருட்களை எடுக்க இசையமைப்பாளர் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என்றும், அவரது பிரதிநிதிகளை அனுமதிப்பதாகவும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கப் போவதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில் இருந்து இளையராஜா வெளியேற வேண்டும் என ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இடத்தைக் காலி செய்வது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையேயான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள, தானே எழுதிய இசைக் கோர்ப்புகள், தனக்குச் சொந்தமான இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் இளையராஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 40 ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த இடத்தில் இளையராஜாவை ஒரு நாள் அனுமதிக்க முடியுமா எனப் பதிலளிக்க பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிக அளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது என்றும், அவர் பிரதிநிதிகள் வந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்றும் பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள், இருதரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என்றும் யோசனை தெரிவித்ததுடன், இதுகுறித்து இரு தரப்பும் நாளை விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளார்.

அவ்வாறு அனுமதிக்கும் பட்சத்தில் இழப்பீடு கோரிக்கையை வலியுறுத்த வேண்டாமென இளையராஜாவிற்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE