தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினி வரும் ஜனவரி 19-ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் இன்று சம்மன் அனுப்பியது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த ஒருநபர் ஆணையம் இதுவரை 23 கட்ட விசாரணையை முடித்துள்ளது.
» வரத்து குறைவால் சாதாரண நாளிலும் விலை உயர்ந்த மல்லிகைப்பூ: கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தகவல் அறிந்தவர்கள், பத்திரிக்கையாளர்கள், தீயணைப்பு துறையினர், காவலர் குடியிருப்புகளில் வசிப்போர், பொதுமக்கள் என இதுவரை மொத்தம் 586 பேர் ஆணையம் முன்பு ஆஜராகி நேரில் சாட்சியம் அளித்துள்ளனர். மேலும், 775 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரஜினிக்கு சம்மன்:
'தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். எனவே, அவரிடமும் விசாரிக்க வேண்டும்' என ஆணையத்தின் முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட சிலர் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று நடிகர் ரஜினி கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என ஒருநபர் ஆணையம் அவருக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், அன்றைய தினம் ரஜினி நேரில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகி, ரஜினி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார். இதனை ஏற்று அன்றைய தேதிக்கு மட்டும் அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
அதேநேரத்தில் ஆணையத்தின் முன்பு ரஜினி நேரில் ஆஜராவதில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படவில்லை. அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர், நடிகர் ரஜினியிடம் ஜனவரி மாதத்தில் விசாரணை நடத்த வாய்ப்புள்ளது. இது தொடர்பாக அவருக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என தெரிவித்தார்.
ஜன.19-ல் ஆஜராக சம்மன்:
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வரும் ஜனவரி 19-ம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க ரஜினிக்கு ஒருநபர் ஆணையம் இன்று சம்மன் அனுப்பியது.
தபால் மூலம் அனுப்பப்பட்ட அந்த சம்மனில், 'நீங்கள் 19.01.2021 அன்று ஒருநபர் ஆணையத்தின் தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடைபெறம் விசாரணைக்கு ஆஜராகி இந்த விசாரணை சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்குமாறு கோரப்படுகிறீர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவங்களில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை கடந்த 2018 மே மாதம் 30-ம் தேதி ரஜினி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். இது தொடர்பாக சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் என ரஜினி கூறியிருந்தார். எனவே அவரிடம் விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே சாட்சியம் அளித்த சிலர் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் தான் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறை ரஜினி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பாரா அல்லது கடந்த முறையை போல விலக்கு கோருவாரா என்பது வரும் நாட்களில் தான் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago