தஞ்சாவூரில் 'விவசாயிகளின் நண்பன் மோடி' என்ற தலைப்பில் பாஜக சார்பில், வேளாண்மை சட்டங்களை விளக்கும் கலந்துரையாடல் கூட்டம் இன்று (டிச.20) நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்தவர்களை தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.இளங்கோ வரவேற்றார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்டப் பார்வையாளர் பி.எல்.அண்ணாமலை, மன்னார்குடி 'காவிரி' ரெங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் பேசியதாவது:
"தமிழ் மொழியும், பண்பாடும் வரலாற்றில் நிலைத்து நிற்கக்கூடிய அளவுக்குப் பெருமைப்படக்கூடியது. ராஜேந்திர சோழனின் சாம்ராஜ்ஜியம் மிகப்பெரியது.
நமது நாட்டு ராணுவ வீரர்கள் 96 சதவீதம் பேர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். ராணுவப் பணி முடிந்ததும், விவசாயத்தை மேற்கொள்கின்றனர். ராணுவ வீரர்களும், விவசாயிகளும் ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்தவர்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகப் போற்றப்படுகிறது. முன்பெல்லாம் இங்குள்ள காவிரி பிரச்சினையைப் பற்றிப் பேசி வந்தார்கள், ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு முன்பு வரை எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையைப் பரிந்துரை செய்ய வேண்டும் எனப் பலர் கூறி வந்தாலும், அதை யாரும் அமல்படுத்தவில்லை. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்ததும் அந்த அறிக்கையை கவனமாகப் பரிசீலித்து ஒவ்வொரு திட்டமாக அறிவித்து வருகிறார்.
அதன்படி, முதலில் விவசாயிகளுடைய நிலங்களில் மண் பரிசோதனை திட்டம், இந்தத் திட்டத்தின் மூலம் மண் வளம் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்றவாறு பயிர்கள் சாகுபடி செய்வது, உரம் இடுவது என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடர்ந்து, திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம். இந்தத் திட்டத்தில் விவசாயிகளின் பயிர்கள் பாதித்தாலும், மகசூல் பாதித்தாலும், இருப்பு வைக்கப்பட்ட தானியங்கள் பாதித்தாலும் இழப்பீடு வழங்கப்படுகிறது.
2009-2014 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 1,700 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் 3,069 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல விலை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பருப்பு 1.52 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், பாஜக ஆட்சியில் 112.06 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் இருப்பு வைத்து, கிடங்குகளில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.
தற்போது விவசாயிகளை எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரத்தால் ஏமாற்றி வருவது துரதிர்ஷ்டமானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களால் நன்மைதான். வெளிச்சந்தையில் என்ன விலை இருக்கிறதோ அங்கு விற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த சட்டத்தில் ஒப்பந்தத்தில் பிரச்சினை என்றால் நீதிமன்றம் செல்ல வேண்டியதில்லை, அந்தந்த மாவட்ட ஆட்சியரே பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒப்பந்த விவசாயம் என்பது புதிதல்ல, இந்தியாவில் பல மாவட்டங்களில் இந்த முறை நடைமுறையில் உள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் சட்டத்தில் நிலம் பறிபோகும் என்ற அச்சம் தேவையில்லை. எதிர்க்கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தச் சட்டங்களில் உள்ள நன்மைகளைத் தமிழக விவசாயிகளும், குறிப்பாக டெல்டா விவசாயிகளும்தான் இந்தியாவில் உள்ள பிற விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்".
இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்தார்.
கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்புகையில், "மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கவே விவசாயிகள் முடியாத நிலை உள்ளபோது, எப்படி இந்தச் சட்டத்தில் பிரச்சினையைத் தீர்க்க முடியும்? எனவே, இதற்கென தனியாக ஒரு தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டப் பணிகளை இதர பணிகளுக்குப் பயன்படுத்தாமல், விவசாயப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்" எனக் கூறினர்.
அதற்கு வி.கே.சிங் பதிலளித்து விளக்கமளித்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் வி.கே.சிங் கூறியதாவது:
"மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவில் பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள். சட்டத்தினால் குறைந்தபட்ச ஆதார விலை என்பது பாதிக்கப்படாது. ஏற்கெனவே உள்ள மண்டியில் பாதிப்பு இருக்காது.
வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் செய்யப்படுகிறது. விவசாய நிலங்களுக்குக் கிடையாது. சட்டத்தின் மூலம் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கும்.
இச்சட்டத்தின் நோக்கம் விவசாயிகள் பயனடைய வேண்டும். விவசாயிகளின் பக்கம்தான் அரசு உள்ளது. இந்தச் சட்டம் விவசாயிகளுக்குப் பாதுகாப்பானது. ஏற்கெனவே இடைத்தரகர்கள்தான் பயன் அடைந்தார்கள். தற்பொழுது இச்சட்டத்தின் மூலம் நேரடியாக இந்தப் பலனை விவசாயிகளே அடைய முடியும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago