தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 2500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று வந்தன. அவற்றை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் 24.05.2021-ம் தேதியோடு முடிவடைகிறது. அதற்கு முன்பாக அடுத்த சட்டப்பேரவைக்கான தேர்தலை நடத்தி உறுப்பினர்களைத் தேர்வு செய்ய வேண்டும். எனவே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021 ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
தேர்தலுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைப்பது, தேர்தல் பணியாளர்களைத் தேர்வு செய்தல் போன்ற பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் இன்று தூத்துக்குடி வந்து சேர்ந்தன.
அவை தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தில் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது:
''வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு, வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மகாராஷ்டிர மாநிலம் அகமத்நகர், ஒஸ்மனபாத், பீட் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இதில் 2,500 வாக்குப்பதிவு அலகுகள், 2,410 கட்டுப்பாட்டு அலகுகள், 2,670 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை வரப்பெற்றுள்ளன. இதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 700 வாக்குப்பதிவு அலகுகள், 300 கட்டுப்பாட்டு அலகுகள், 300 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரம் ஆகியவை நமது மாவட்டத்தில் தயாராக உள்ளன.
இவை அனைத்தும் காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நமது மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 1,603 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரப்பெற்றுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் போதுமானதாகும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி 140 சதவீதம் கட்டுப்பாட்டு அலகுகள், 140 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவையாகும். அதன்படி நமது மாவட்டத்தில் போதுமான அளவில் உள்ளன''.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த், வசந்தா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago