முதல்வர் பழனிசாமிக்கு நான் வழிகாட்டுகிறேன்: கொளத்தூரில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

திமுக எதிர்க்கட்சி. ஆனால், நாம் அறிவிப்பதைப் பார்த்துதான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக் கூடிய நிலைமை உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. முதல்வருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டு, பயிற்சி பெறும் மாணவியருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:

“கொளத்தூர் தொகுதி என்னுடைய மேம்பாட்டு நிதி மற்றும் என்னுடைய கோரிக்கையை ஏற்றுச் சென்னை மாநகராட்சி வழங்கிய நிதிகளையும் சேர்த்து இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்குக் கொளத்தூர் தொகுதியில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

மக்கள் பணியாற்றுவதில் கொளத்தூர் தொகுதி, மற்ற தொகுதிகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, திமுகவாக இருந்தாலும் சரி, நம்மைப் பார்த்துதான் மற்ற தொகுதியில் பணிகளைச் செய்வதாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம். 234 தொகுதிகளில் கொளத்தூர் தொகுதி ஒரு தொகுதியாக இருந்தாலும், அந்த 233 தொகுதிகளுக்கும் ஒரு வழிகாட்டும் தொகுதியாக இந்தத் தொகுதி உள்ளது.

மழை அடிக்கடி வருகிறது; வெள்ளம் அடிக்கடி வருகிறது. இப்படி இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்பட்டாலும் இந்தத் தொகுதி மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். நிவாரணப் பணிகள் மட்டுமல்ல, சேவைகளையும், உதவிகளையும், சில நலத்திட்ட உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறோம்.

கரோனா காலம் என்பது ஒரு கொடிய காலம். வீட்டை விட்டு வெளியே வர முடியாத நேரத்தில், லாக் டவுன் காலத்தில், தவித்துக் கொண்டிருந்த அந்த மக்களுக்கு, என்னென்ன பணிகள் எல்லாம் செய்து மற்ற தொகுதி மக்களுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நான் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், முதல்வருக்கு வழிகாட்டக்கூடிய ஒருவனாக நான் இருக்கிறேன். வழிகாட்டுவதை அவர் பின்பற்றுகிறாரா என்ற சந்தேகம் இருப்பது வேறு பிரச்சினை. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

திமுக எதிர்க்கட்சி. ஆனால் நாம் அறிவிப்பதை பார்த்துதான் ஆளுங்கட்சியினர் அவற்றைச் செய்யக்கூடிய நிலைமை உள்ளது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களைப் பொறுத்தவரையில் அதுதான் ஆளுங்கட்சி. அதுதான் உண்மை. இன்னும் மூன்று மாதம் அல்லது நான்கு மாதகாலத்தில் நாம்தான் ஆளுங்கட்சியாக வரப் போகிறோம். உங்களை எல்லாம் பார்த்த பிறகு எனக்கு அப்படிப்பட்ட நம்பிக்கையுடன் பேசத் தோன்றுகிறது.

அந்த அளவுக்கு மக்களிடத்தில் ஒரு எழுச்சியை நாம் காணுகிறோம். ஏனென்றால், மக்களுக்காக இருந்து, மக்களோடு வாழ்ந்து, மக்களுடைய பிரச்சினைகளுக்குப் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஏறக்குறைய 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களைப் பற்றிக் கவலைப்படுகிற ஒரு இயக்கம் திமுக என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்தாலும், ஏற்கெனவே ஐந்து முறை ஆட்சியில் இருந்துள்ளோம்.

ஐந்து முறை ஆட்சியில் இருந்தபொழுது மக்களுக்கு என்னென்ன திட்டங்களை உருவாக்கினோம், என்னென்ன தொழிற்சாலைகளை உருவாக்கினோம் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்றைக்குத் தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களில், வெளிநாடுகளில் இருந்து வருகிற தொழிலதிபர்கள் எல்லாம், இங்கு தொழில் தொடங்க அஞ்சி, பயந்து ஓடக் கூடிய நிலைமை இப்பொழுது உள்ளது.

அதற்குக் காரணம் கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் உடனடியாக ஈடுபடவேண்டும். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு 4 மாத காலத்தில் வருகிற தேர்தல்தான் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தத் தேர்தலை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆட்சியில் இல்லாத காலத்திலேயே இவ்வளவு செய்யும் பொழுது, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதை நீங்கள் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், உங்களது நண்பர்கள் உங்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், எல்லோரிடத்திலும் இதை எடுத்துச் சொல்லுங்கள்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்