"எனக்கு விவசாயம் தெரியுமா என்று கேட்கிறார் முதல்வர் பழனிசாமி, அவசியமில்லை, 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த தலைவர் கருணாநிதி அவரது மகன் நான், விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் தந்தாரே தலைவர் கருணாநிதி, அவருடைய பிள்ளை நான்" என ஸ்டாலின் பேசினார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடந்தது.
அதில் கலந்துக்கொண்ட ஸ்டாலின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து, பேசியதாவது:
இந்தp போராட்டம் நடைபெறுமா, இங்கு நடைபெறுமா அல்லது இந்தp போராட்டத்தை நடைபெற விடாமல் தடுத்து, அதை மீறி நடத்துகின்ற நேரத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் சென்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப் போகிறோமா என்று நான் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
» தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு டிச. 21-ல் சென்னை வருகை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து 2 நாள் ஆலோசனை
“தடை போட்டு இருக்கிறார்களே என்ன செய்யப் போகிறோம்?” என்று அண்ணன் வைகோ அவர்கள் கூட நேற்று மாலை என்னிடம் தொலைபேசியில் பேசினார். “கவலைப்படாதீர்கள் அண்ணா! தடையை மீறி நடத்துவோம். நிச்சயம் போராட்டம் உண்டு” என்று சொன்னேன். நடத்தி முடித்து விட்டோம். வழக்கு வரும். என்ன வழக்கு? நாங்கள் பார்க்காத வழக்குகளா!
போராட்டம் 5 மணி வரையில் நடைபெறும் என்று சொன்னோம் இப்போது ஐந்து மணியைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் சேர்த்து வழக்கு வரும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள். அதனைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
எங்களுக்காக அல்ல, டெல்லியில் 23 நாட்களாக கடும் குளிரிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்காகத் தயாராக இருக்கிறோம். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை.
இந்தப் போராட்டத்தை இன்று ஏதோ திடீரென்று நாம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு முடிவுசெய்து நடத்துகின்ற போராட்டம்தான், இந்தப் போராட்டம். இந்த கொடுமையான மூன்று வேளாண் சட்டங்களை எப்போது அரசு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார்களோ, மறுநாளே தமிழகத்தில் உள்ள நம்முடைய கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து, அண்ணா அறிவாலயத்தில் நாம் ஒரு கூட்டத்தைக் கூட்டினோம்.
உடனடியாகக் கண்டித்துத் தீர்மானம் போட்டோம்; நம்முடைய கண்டனத்தை, எதிர்ப்பைத் தெரிவித்தோம். உடனடியாக இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என எடுத்துச் சொன்னோம். பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தினோம். அதன்பிறகும், கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்தும் தனித்தனியாகவும் சூழ்நிலைக்கேற்ப போராட்டங்களை நடத்தின.
கடந்த 5-ஆம் தேதி, திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தினோம். கையில் கருப்புக் கொடி ஏந்தி அந்தப் போராட்டத்தை நடத்தினோம். நான் சேலம் சென்றிருந்தேன்; அங்கு நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் நான் விளக்க வேண்டியதில்லை; உங்களுக்கே தெரியும்.
தொடர்ந்து இப்படி போராட்டங்கள் நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சகித்துக்கொள்ள முடியாமல், தாங்கிக்கொள்ள முடியாமல் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஆத்திரத்தோடு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். ஒரு முதல்வர் என்பதை மறந்து அவர் பேசக்கூடிய பேச்சுகளைப் பார்க்கிறோம். ஊர் ஊராகச் சென்று பார்க்கிறாராம்? மக்களையா? மக்களைப் பார்த்தால் உங்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும்.
ஆய்வு என்ற பெயரில் அரசு அதிகாரிகளை - கட்சிக்காரர்களை அழைத்து உட்கார வைத்து, ஒரு ஷோ’ நடத்திவிட்டு, கரோனா ஆய்வு என்ற பெயரில் சென்று, பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு, இவராகவே பதில் சொல்கிறார். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற எனக்கு வேலையே இல்லை என்கிறார்.
உங்களது வண்டவாளங்களைத் தண்டவாளத்தில் ஏற்றுவதுதான் என்னுடைய வேலை, அதுதான் எதிர்க்கட்சித் தலைவருடைய வேலை. எப்போதும் அறிக்கைவிட்டுக் கொண்டே இருக்கிறேன் என்கிறார். ‘அறிக்கைவிடாமல் அவியலா செய்ய முடியும்’ என்று நான் கேட்டேன். ‘அறிக்கை நாயகன்’ என்ற பட்டத்தையும் அவர் எனக்கு அளித்தார்.
முதல்வரே அந்தப் பட்டத்தைத் தருகிறார். நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்தப் பட்டத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் நான் உங்களுக்குக் கொடுத்த பட்டம்தான் ‘ஊழல் நாயகன்’. அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.
எப்போதும், “நான் விவசாயி… நான் விவசாயி…” என்று சொல்வதோடு “எனக்கு என்ன விவசாயம் தெரியும்” என்று கேட்கிறார். தலைவர் கருணாநிதி 1957-ஆம் ஆண்டு முதன்முறையாக குளித்தலையில் வெற்றி பெற்ற அவர், நங்கவரம் விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்தியது பற்றி இங்கே டி.ஆர்.பாலு அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார். ஒரு வரலாற்றை நினைவுபடுத்துகிறேன், “சட்டமன்ற உறுப்பினராகப் அவர் பேசிய முதல் கன்னிப்பேச்சே, விவசாயிகள் போராட்டம் பற்றியதுதான்”. அவருடைய மகன் நான்!
“7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்த தலைவர் கருணாநிதி” என்று வைகோ பேசுகிறபோது சொன்னாரே, அவருடைய பிள்ளை இந்த ஸ்டாலின். விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் தந்தாரே தலைவர் கருணாநிதி, அவருடைய பிள்ளை இந்த ஸ்டாலின்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் மூலமாக நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புவது, எல்லோரும் சொன்னதுபோல், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. உள்ளபடியே மகிழ்ச்சி. ஆனால், டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் என்றைக்கு வெற்றி பெறுகிறார்களோ, அதுவரையில் நம்முடைய போராட்டமும் ஓயாது.
அதற்கான வியூகங்களை நம்முடைய கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, கலந்துபேசி முடிவெடுத்து, அவ்வப்போது அந்தப் போராட்டத்தை நாங்களும் நடத்துவோம்… நடத்துவோம்… என்று சொல்லி விடைபெறுகிறேன்”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago