மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும்: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் வரையில் போராட்டம் தொடரும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் உண்ணாநிலை அறப்போராட்டம் இன்று (டிச. 18), காலை 8 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கியது.

இந்த போராட்டத்தைத் தொடங்கி வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

"மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு ஒட்டுமொத்த மக்களுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறது. அந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வற்புறுத்தி, கோரிக்கையை வைத்து தலைநகர் டெல்லியில், இந்தியா முழுவதும் இருக்கும் விவசாயிகள், குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றுதிரண்டு, மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, இன்றோடு 23 நாட்கள் தொடர்ந்து அந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அந்த விவசாயிகளுக்கு, தமிழகத்தின் சார்பில் நாமும் நம்முடைய ஆதரவைத் தெரிவித்திட வேண்டும் என்று முடிவு செய்து தொடர்ந்து நாம் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தாலும், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உண்ணா நோன்பு என்கிற அறப்போராட்டத்தை அறிவித்து, நாம் இன்று நடத்தவிருக்கிறோம்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கரோனா என்ற நோய்த் தொற்றில் இந்தியா முழுவதும் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதைப்பற்றி மத்திய பாஜக அரசும் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசும் சிந்தித்துப் பார்க்காமல், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், சுகாதாரப் பணியில், பொருளாதார உதவியில் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், தாங்கள் போகிற போக்கில் மக்களுக்கு எதிரான உணர்வுகளை எண்ணங்களை சட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, கரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்தியில் இருக்கும் பாஜக அரசு மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், மூன்று வேளாண் சட்டங்கள், நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை, புதிய மின்சார திருத்தச் சட்டம். இந்த நான்கு சட்டங்களும் மக்களுக்கு விரோதமான சட்டங்கள் என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் பெருநிறுவனங்களுக்குத் துணை நிற்கும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை மத்திய அரசு கண்மூடித்தனமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக இந்தியாவே இன்று கொந்தளித்துப் போய் இருக்கிறது; தலைநகர் டெல்லி இன்று கொதித்துப் போய் இருக்கிறது. வட மாநிலங்களில் இருக்கும் விவசாயிகளெல்லாம் கும்பல் கும்பலாக, குடும்பம் குடும்பமாகத் தலைநகர் டெல்லியை நோக்கி வருகை தந்து அங்கேயே தங்கி கடுமையான குளிரைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல், அங்கேயே உறங்கி, அங்கேயே சமைத்து உணர்வுப்பூர்வமான ஒரு போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயத்தைப் பாழடிக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டும்; விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அல்லது இது குறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதத்தை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும்.

ஆனால், இது எதையும் இந்த மத்திய அரசு செய்திடவில்லை. எதற்காக இவ்வளவு அவசரம்; யாரைப் பாதுகாக்க இந்தச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்? இதை மக்கள் மன்றத்திற்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசு பேச்சுவார்த்தை என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, வாழ்க்கைப் பிரச்சினையாக இதைக் கையில் எடுத்து வைத்துக்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் அவர்கள் டெல்லியை நோக்கி வரும் காட்சிகளை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், மத்திய அரசு அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதனைக் கண்டிக்கும் வகையில் தான் நாம் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்ல, போராடக் கூடியவர்களை மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், தேசவிரோதிகள், அந்நியக் கைக்கூலிகள் என்று சொல்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். தீவிரவாதிகள் என்று விமர்சிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட முத்திரை குத்தி கொச்சைப்படுத்தக்கூடிய சூழ்நிலையைத் தான் நாம் என்று இந்த உண்ணாநிலைப் போராட்டத்தின் மூலமாகக் கண்டித்துக் கொண்டிருக்கிறோம். வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்விதப் பயனும் இல்லை.

ஆகவே, அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை; நம்முடைய கோரிக்கை; மக்களுடைய கோரிக்கை என்பதையும் எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறுகிற வரையில் நம்முடைய போராட்டங்கள் தொடரும்; வேறு கட்டங்களில் அவற்றை முடிவு செய்து அறிவித்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்.

எனவே, இன்றைக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக வருகை தந்திருக்கும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளினுடைய தலைவர்களை எல்லாம் நான் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல், நமது கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அத்தனைப் பேரையும் நான் இந்த நேரத்தில் வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளைச் சேர்ந்த நம்முடைய தோழர்கள் இதுவரையில் 21 பேர் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்து கொண்டும் மாண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்திய அளவில் இருக்கக்கூடிய விவசாய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வருகிற 20-ம் தேதி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். இன்று நாம் இந்தப் போராட்டத்தை நடத்துகின்ற காரணத்தால், நாமும் அதில் பங்கேற்றிட வேண்டும். அனைவரும் அமைதியாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த அந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்