கரோனா தொற்றால் விவசாயத்துக்குப் பாதிப்பில்லை என்றும், சாகுபடி பரப்பளவு 59 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளதாகவும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 41-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (டிச.17) நடைபெற்றது. விழாவிற்குத் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமை வகித்து, 1,385 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். துணைவேந்தர் என்.குமார் வரவேற்றார். உயர் கல்வித்துறை அமைச்சரும், இணை வேந்தருமான கே.பி.அன்பழகன், தமிழகக் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது:
''விவசாயம் நம் நாட்டின் அவசியத் தேவை. எல்லாக் காலநிலைகளிலும் தாக்குப் பிடிக்கக்கூடிய, அதிக விளைச்சலைக் கொடுக்கக்கூடிய பயிர் ரகங்களை உற்பத்தி செய்வது அவசியமாகும். பல கோடி மக்களுக்கு உணவளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதற்கு நவீன விவசாயத்தைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. விவசாயத்தில் புதிய உத்திகள், புதிய பயிர் ரகங்களைத் தமிழக விவசாயிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கரோனா பரவலால் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 2021-ல் இந்த வீழ்ச்சியிலிருந்து மீண்டு, வளர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் வலிமையான நாடாக இந்தியா மாறும்.
கரோனா தொற்று பல துறைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதேவேளையில் விவசாயத்திற்குப் பெரிதளவில் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. விவசாயம் செய்யும் நிலப்பரப்பு, 59 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. விவசாயிகளுக்கு விதைகள், பூச்சிக்கொல்லி மருந்து, விவசாயக் கருவிகள், விவசாயக் கடன் ஆகியவற்றைக் கரோனா ஊரடங்கு காலத்திலும் வழங்கி, விவசாயம் பாதிக்காத வகையில் மத்திய அரசு தடுத்துள்ளது.
காரிஃப் பருவத்தில் கடந்த 2019-20 ஆம் ஆண்டில் 143.38 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, 2021-ல் 144.52 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, நகர மயமாக்கல், புவி வெப்பமடைதல், குறைந்த மழைப்பொழிவு போன்றவை விவசாயத்திற்குச் சவாலாக உள்ளது.
புதிய தொழில்நுட்பம் மற்றும் மரபணு ஆராய்ச்சி காரணமாக விவசாய உற்பத்தி 30 சதவீதம் உயர்ந்துள்ளது, செலவும் 20 சதவீதமாகக் குறைந்துள்ளது. எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள சூரிய சக்தியை அதிகம் பயன்படுத்துவது, நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதே சிறந்ததாகும். இதேபோல் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. குறிப்பாகத் தமிழகம் போன்ற நீர்வளம் குறைந்து வரும் மாநிலத்தில் நிலத்தடி நீர் மாசடைவது வருத்தமளிக்கிறது.
இந்நிலையில் வறட்சியை எதிர்கொள்ளும் விதைகள், தண்ணீர் சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை விவசாயத்தில் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். இச்சூழலிலும் நீர் மேலாண்மையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இதற்காக 2019-ம் ஆண்டு நீர் மேலாண்மைக்கான 'ஜல்சக்தி' விருதைப் பெற்றுள்ளது.
மத்திய அரசு விவசாயிகளுக்காகப் பல்வேறு நன்மைகளைச் செய்து வருகிறது. பிரதமரின் கிசான் திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் உதவித்தொகையாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இத்திட்டம், 72 சதவீத விவசாயிகளைச் சென்றடைந்துள்ளது. உதவித்தொகை மற்றும் மானியம் நாடு முழுக்க உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். உற்பத்திக்கான விலை, சந்தைப்படுத்துதல், பொருளாதார உதவியால், விவசாயத்தை வளர்க்க உதவி வருகிறது''.
இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
விழாவில் தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வேளாண்மைப் பல்கலைக்கழகப் பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.