எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் கொடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு: முதல்வர் பழனிசாமி விளக்கம்

By செய்திப்பிரிவு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் கொடுக்கவில்லை என்ற விமர்சனம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச.17), அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதற்குப் பிறகு முதல்வர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சென்னை ஐஐடி, அதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதே?

அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றினால் கரோனா தொற்று ஏற்படாது. அந்தக் கல்லூரிகளில் அரசு அறிவித்த வழிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால்தான் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கிருக்கின்ற மாணவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு நிலம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்களே?

அதில் சில வகைமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. விரைந்து செயல்பட்டு அதைக் கொடுத்துவிடுவார்கள். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. நிலம் கொடுக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. நிலத்தில் எந்தவித இடர்ப்பாடும் இல்லை. அரசு உடனடியாக கொடுப்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதில் சில பிரச்சினைகள் உள்ளன. அதையும் சரி செய்து உரிய நேரத்தில் வழங்கப்படும்.

மினி கிளினிக் மக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கிறது, கிராமப்புற மக்களுக்கும் பயனாக இருக்கிறது. இதற்குத் தமிழில் பெயர் வைக்காததன் காரணம் என்ன?

மினி என்றால் மக்களுக்கு உடனடியாகத் தெரியும். எளிதாக இருக்கும், மக்களுக்குப் புரியும். அதற்காகத்தான் வைத்தோமே தவிர, தமிழ்ச் சொல்லை மறைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தமிழ்ச் சொல்லில் 'சிறு' என்று வரும், 'சிறு' என்று வந்தால் அது மருத்துவமனைக்குப் பொருத்தமாக இருக்காது. அதனால்தான் நம்முடைய அதிகாரிகள், மினி கிளினிக் என்றால் மக்களிடத்தில் ஒரு நல்ல இடத்தைப் பெறும் என்றார்கள். அதை வைத்துப் பெயர் வைத்தோம்.

அரசு கலைக் கல்லூரிகளில் 3,544 நபர்கள் கவுரவ விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்கள். அவர்களைப் பணி நியமனம் செய்வது தொடர்பாக...

சட்ட விதிகளுக்குட்பட்டு தான் நியமிக்க முடியும். நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள். நீதிமன்றம் சில அறிவிப்புகளைக் கொடுக்கிறது. ஏற்கெனவே, மத்திய அரசாங்கத்தின் வழிமுறைகள் இருக்கின்றன. சட்டத்திற்குட்பட்டு இருந்தால் நியமனம் செய்யப்படுவார்கள்.

ராஜேந்திர சோழனுக்கு ஒரு மணிமண்டபம்?

அதுகுறித்து கொறடாவும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்திருக்கின்றார்கள். அது அரசின் பரிசீலனையில் உள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக?

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தான் ஆதனூர்-குமாரமங்கலத்தில் ஏறத்தாழ ரூபாய் 365 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், அண்மையில் கரூர், நஞ்சை புகளூரில் கதவணை கட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். அந்தப் பணியும் தொடங்கியுள்ளது.

நிதி ஆதாரத்தைப் பெருக்கி, நீரைத் தேக்கி வைக்க முடிகின்ற இடங்களிலெல்லாம் நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீர் மேலாண்மைத் திட்டத்தில் இந்த வருடம் தேசிய அளவில் விருதைப் பெற்றிருக்கிறோம்.

ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையம்?

இது ஒரு நீண்டகால பிரச்சினை. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி திட்டத்திற்காக அரசின் ஆணைப்படி 13 வருவாய் கிராமங்களில் 8,373 ஏக்கர் 2003 வரை கையகப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு 2005-ல் பழுப்பு நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்திற்காக ஒப்படைக்கப்பட்டது. மேற்படி திட்டத்தை என்.எல்.சி. மூலம் செயல்படுத்த அரசாணை பிறப்பித்து எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை, நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். அதில், நிலத்தினுடைய மதிப்பை 43 சதவீதம் உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள்.

மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு காண வேண்டுமென்று நீதிபதி குறிப்பிட்டார். அதன்படி, 23 மடங்கு சேர்த்துக் கொடுக்க வேண்டுமென்று உத்தரவு வழங்கினார். அதன்படி, கூளத்தூர், காட்டாத்தூர் என்ற 2 கிராமங்களில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எஞ்சிய 11 கிராமத்தில் இருக்கும் நிலம் கொடுத்த விவசாயிகளையும் சந்தித்துப் பேசவிருக்கிறார்கள்.

ஆகவே, அரசைப் பொறுத்தவரை, அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது எண்ணம். அதன் அடிப்படையில் செயல்படுத்துவதற்குண்டான அனைத்து நடவடிக்கைகளையும் TIDCO மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது.

எட்டுவழிச் சாலை?

ஏற்கெனவே இருக்கும் சாலைகளில் பெரிய பிரச்சினைகள் உள்ளன. சேலத்திலிருந்து சென்னை வரை பிரம்மாண்டமான சாலை அமைக்க மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். சுமார் 92 சதவீதம் பேர் சென்னை முதல் சேலம் வரையுள்ள 8 வழிச் சாலைக்கு இசைவு கொடுத்திருக்கின்றார்கள். 8 சதவீதம் பேர் வேண்டுமென்றே திட்டமிட்டு தடை செய்து கொண்டிருந்தார்கள். அந்தத் திட்டம் நீதிமன்றம் வரை சென்று இப்போதுதான் நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. அது மத்திய அரசின் திட்டம். நமக்கு 50 கி.மீ. தூரம் மீதமாகிறது, எரிபொருள் மீதமாகிறது, விபத்து குறைகிறது, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைகிறது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நாம் நிலம் மட்டும்தான் எடுத்துக் கொடுக்கிறோம். நிலம் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. விவசாயிகள் நிலங்களைக் கொடுக்கலாம் என்று எண்ணினால்தான் எடுக்க முடியும். நாங்கள் நிறைய புறவழிச்சாலைகளை அமைத்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக, அரியலூரில்கூட புறவழிச்சாலை அமைப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. ஆனால், நிலம் கொடுக்க மறுக்கிறார்கள். அதுதான் பிரச்சினையே. நிலம் கொடுக்க முன்வந்தால், அரசு, சாலை அமைக்கத் தயாராக இருக்கிறது.

அரியலூர் அரசு சிமென்ட் ஆலைக்கான சாலை விரிவாக்கம்?

எந்தெந்தச் சாலைகள் நிலம் எடுக்காமல் விரிவுபடுத்த முடியுமோ, அந்தச் சாலைகளை அரசு விரிவுபடுத்தும். ஏற்கெனவே அதிகமாக நிதி ஒதுக்கி, இங்குதான் அதிக சாலைகளைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறோம்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்