மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்துள்ள பனகல் சாலையில், ஒரு டீக்கடை முன் அதிகாலை நேரத்தில் தினமும் ஏகப்பட்ட கூட்டம். டீ வாங்கத்தான் இவ்வளவு கூட்டமா எனச் சென்று பார்த்தால், எல்லோரும் இலவசமாக அந்தக் கடையில் பாட்டில், பாட்டிலாக சுடுதண்ணீர் வாங்கிச் செல்கின்றனர். பேரல் பேரலாகக் கொண்டு வரப்படும் தண்ணீரை ஒரு ஊழியர் கேஸ் அடுப்பில் சூடுபடுத்திக் கொண்டிருக்க, மற்றொரு ஊழியர் அந்த சுடு தண்ணீரை வாளியில் வருகிறவர்களுக்கெல்லாம் இலவசமாக வழங்குகிறார்.
நம்மூரில் குடிதண்ணீருக்கே குழாயடிச் சண்டை நடப்பது வழக்கம். ஆனால், இந்த டீக்கடையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏழை நோயாளிகளுக்காக சுடுதண்ணீர் வழங்கும் சேவையை வெளியே தெரியாமல் செய்து வருகின்றனர்.
இந்த டீக்கடை உரிமையாளர் பி.சி. தங்கம். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலரான இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி ஆனந்தவள்ளிதான், தற்போது இந்தக் கடையை நடத்துகிறார். இவரும் கவுன்சிலராக உ ள்ளார். ஆனந்தவள்ளியின் கணவர் பி.சி. தங்கம் இந்தக் கடையைத் தொடங்கும்போது, மருத்து வமனைக்கு வரும் நோயாளிகள் குடிக்க, மருந்து, மாத்திரைகள் சாப்பிட அவர்களுடைய உறவி னர்கள், அப்பகுதி டீக் கடைகளில் சுடுதண்ணீர் கேட்டு வருவார்களாம். அவர்களிடம் கடைக்காரர்கள் ‘டீ வாங்கினால் ஒரு டம்ளர், 2 டம்ளர் சுடுதண்ணீர் தருகிறோம் எனப் பேரம் பேசுவார்களாம். சிலர் சுடுதண்ணீரெல்லாம் தர முடியாது என விரட்டுவார்களாம். அதனால், சுடுதண்ணீர் வாங்குவ தற்காகவே கடைகளில் பார்சல் டீ வாங்குவா ர்களாம். சுடுதண்ணீருக்கு அவர்கள் திண்டாடுவதைப் பார்த்த பி.சி.தங்கம், தனது கடை ஊழியர்களிடம் நோயாளிகளுக்காக யார் வந்து கேட்டாலும் எந்நேரத்திலும் இலவசமாக சுடுதண்ணீர் போட்டுக் கொடுங்கள் என்றாராம்.
அன்று முதல் இன்று வரை, நோயாளிகளுக்கு இலவசமாக சுடுதண்ணீர் வழங்கி வருகின்றனர். கணவர் இறந்தபின், அவரது மனைவி ஆனந்தவள்ளியும் இந்த சேவையைத் தொடர்ந்து வரு கிறார்.
தினமும் 2 வணிக சிலிண்டர்கள்
இதுகுறித்து கடை ஊழியர்கள் அழகுசுந்தரம், திருமலை ஆகியோர் ‘தி இந்து’ விடம் கூறுகையில், “அறுவை சிகிச்சை செய்தவர்கள், கட்டு போட்ட வர்களுக்கு மருத்துவர்கள் சுடுதண்ணீரால் உடம்பை துடைத்துவிடச் சொல்வார்கள். சுடு தண்ணீரைதான் குடிக்கச் சொல்வார்கள். நோயாளிகளுக்கு மருத்துவமனையில் சுடுதண்ணீர் வசதியில்லை. அதனால், நோயாளி யின் உறவினர்கள் வீட்டில் இருந்து சுடுதண்ணீர் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், டீக்கடைகளில்தான் வாங்க வேண்டும்.
டீ வாங்கினால் மட்டுமே கடைகளில் பாட்டிலில் ஒன்று, இரண்டு டீ டம்ளரில் மட்டும் சுடுதண்ணீர் கொடுப்பார்கள். சுடு தண்ணீர் வாங்குவதற்காக ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை டீ வாங்க வருவார்கள். அதனாலே, மருத்துவமனையை சுற்றி டீ கடைகள் ஏராளம். மதுரை அரசு மருத்துவமனைக்கு தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து நோயாளிகள் வருவார்கள். அவர்கள் சுடு தண்ணீரை வீட்டிலிருந்து எடுத்து வர முடியாது. சுடு தண்ணீருக்காக அவர்கள் தடுமாறுவார்கள். அவர்களுக்காக தினமும் சுடு தண்ணீர் வழங்குகிறோம். தினமும் 6 பேரல் சுடுதண்ணீர் கொடுக்கிறோம். இதற்காக தினமும் இரண்டு வணிக சிலிண்டர்கள் செலவாகிறது. ஒரு சிலிண்டர் விலை ரூ. 1900-க்கு மேல் விற்கிறது. டீக் கடையில் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை சுடு தண்ணீர் வழங்குவதற்காக செலவிடுகிறோம் டீக்கடை முன் சுடுதண்ணீர் வாங்க கூட்டம் குவிவதால், காலை நேரத்தில் வியாபாரம் பாதிக்கும். அதனால், அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரையும், மாலை 3 மணி முதல் 7 மணி வரை மட்டுமே சுடு தண்ணீர் வழங்குவோம். அந்த நேரத்தில்தான் நோயாளிகளுக்கும் தண்ணீர் தேவைப்படும் என்றனர். இவர்களைப் பார்த்து, தற்போது மற்ற டீக்கடைக்காரர்களும், தினமும் குறிப்பிட்ட சிறிது நேரம் இலவசமாக சுடுதண்ணீரை வழங்கத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago