சிலிண்டர் விலை 15 நாள் இடைவெளியில் 100 ரூபாய் உயர்வு; தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது: பழைய விலைக்கு விற்பனை செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

15 நாள் இடைவெளியில் 100 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 16) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா ஏற்படுத்திய பெரும் தாக்கத்தால் ஏறத்தாழ 9 மாதங்களுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். 2020-ம் ஆண்டு முழுவதும் கரோனா பாதிப்பினால் பொருளாதார முடக்கம், அன்றாட வாழ்க்கைக்கே சிக்கல் என ஏழை, எளிய, நடுத்தர வகுப்பினர் கடும் பாதிப்படைந்த நிலையில், பிறக்கின்ற புத்தாண்டிலாவது இயல்பு வாழ்க்கை வேகமாகத் திரும்பும் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய, மாநில அரசுகளுக்கு நிரம்ப உண்டு.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களோ, அப்படியெல்லாம் எங்களை முழுதும் நம்பிவிடாதீர்கள்; நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டமாட்டோம்; உங்கள் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்வதுதான் எங்களின் ஒரே நோக்கம் என்பதுபோல செயல்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகள் தொடங்கி ஒவ்வொரு குடிமகன் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

ஏழை, நடுத்தர வகுப்பினர் உள்பட அனைத்துத் தரப்பு மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் பாஜக ஆட்சியில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப இவற்றின் விற்பனை விலை மாற்றப்படும் நிலையில், இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டு, மிகப்பெரிய அளவில் விலையேற்றத்தைக் கண்டுள்ளது. இதனால் தனிநபர்களின் அலுவலக, வணிகப் பயன்பாடு, சரக்குப் போக்குவரத்துப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்புகள் ஏற்பட்டு, அனைத்துப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாகிவிட்டது.

வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் இந்த கரோனா காலத்தில் மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. 2020 மே மாதம் ரூ.599.50 என உயர்ந்த சிலிண்டர் விலை, ஜூன் மாதத்திலும் ஜூலை மாதத்திலும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் 50 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டு, ரூ.660 என விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்களின் விலையை 15 நாட்களுக்குள்ளாக இரண்டாவது முறை மீண்டும் உயர்த்தி, கூடுதலாக ரூ.50 விலையில், ரூ.710-க்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகமாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக, இல்லத்தரசிகளான பெண்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். பழைய விலை இருந்த போது, சிலிண்டருக்குப் பதிவு செய்தவர்களுக்கும் புதிய விலைப்படியே சிலிண்டர் விநியோகம் என்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கரோனா காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பதுடன் மட்டும் ஆட்சியாளர்களின் கடமை முடிந்துவிடுவதில்லை. பேரிடர் சூழலில் புதிய புதிய விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்புமாகும்.

எனவே, மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்