சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களை அரசு மருத்துவக் கல்லூரிக்குரிய கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் இன்று (டிச.15) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாட்டில் உள்ள பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளதைப் போலவே, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அங்கு படிக்கும் மாணவர்களைத் தமிழக அரசு வஞ்சிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் அதன் ஒரு அங்கமாக இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும் தமிழக அரசால் 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு இப்போது அரசு பல்கலைக்கழகமாகவும் மருத்துவக் கல்லூரியாகவும் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அதற்கான நிதி நல்கையை வழங்கி வருகிறது.
2020 பிப்ரவரி மாதம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைக் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாகவும் மருத்துவமனையாகவும் தமிழக முதல்வர் அறிவித்தார். அனைத்து வகைகளிலும் அது அரசு மருத்துவக் கல்லூரியாகச் செயல்பட்டுவரும் நிலையில், மருத்துவப் படிப்புக்கான கட்டணம் மட்டும் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. சுயநிதி அடிப்படையில் அந்தக் கல்லூரி செயல்படுவதால் அப்படிக் கட்டணம் வாங்கப்படுவதாக அரசுத் தரப்பில் கூறப்படுவது ஏற்புடையதல்ல.
இந்த அநீதியை எதிர்த்து மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, கட்டணம் குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை மட்டுமே மாணவர்களிடம் வசூலிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
ஆனால், அதற்கு மாறாக முன்பு நிர்ணயித்த கட்டணத்தையே செலுத்த வேண்டும் என்று மாணவர்களைப் பல்கலைக்கழகம் வலியுறுத்தி வருகிறது. அவ்வாறு செலுத்தாவிட்டால் அவர்கள் வகுப்புக்கு வர அனுமதி இல்லை என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாகும். நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றமாகும்.
எனவே, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணத்தைத்தான் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியிலும் வாங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமது உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் மருத்துவ மாணவர்களின் வாழ்வில் விளையாட வேண்டாம் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago