சென்னை உயர் நீதிமன்றத்திற்கான நீதிபதிகள் நியமனத்தில் வன்னியர் சமுதாய வழக்கறிஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தகுதியும், திறமையும் இருந்தும்கூட தொடர்ச்சியாக வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:
“சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. காலியாக உள்ள 12 பணியிடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களைக் கொண்டும், 3 இடங்கள் மாவட்ட நீதிபதிகளைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும். வழக்கறிஞர்களைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய 9 நீதிபதிகள் பணியிடங்களில் 5 பணியிடங்களுக்கு வழக்கறிஞர்களின் பெயர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆனால், அந்த ஐவரில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமளிக்கும் உண்மையாகும். இப்போது மட்டுமல்ல. கடந்த சில வாரங்களுக்கு முன் மாவட்ட நீதிபதிகளுக்குப் பதவி உயர்வு வழங்கி 10 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்களிலும் ஒரு நீதிபதி கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை.
உயர் நீதிமன்றத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள், இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் ஆகிய 15 நீதிபதிகள் பணியிடங்களில் குறைந்து 3 இடங்களாவது வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற நீதிபதிகள் நியமனத்தில்தான் கடைசியாக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்பின், இப்போது பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளையும் சேர்த்து மொத்தம் 17 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கூட வன்னியர் இல்லை. இந்த அநீதியை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.
உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை என்றாலும் கூட, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்துச் சமூகங்களுக்கும், அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும், சட்ட ஆணையமும் பல்வேறு தருணங்களில் கூறியுள்ளன.
வன்னியர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்காக தகுதி மற்றும் திறமைகளில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று ஒருபோதும் நான் கோரியதில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளாகப் பல்வேறு காலகட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை விட தகுதியும், திறமையும் வாய்ந்த, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்கள் வன்னியர்கள் என்பதற்காகத் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதையே சமூக அநீதி என்கிறேன்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதற்காக கடந்த 2019ஆம் ஆண்டில் ஒரு பரிந்துரைப் பட்டியலை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் ஆய்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால், அந்தப் பட்டியலை உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு மாற்றாகவே இப்போது 5 பேர் கொண்ட பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முந்தைய பட்டியலில் எந்தெந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தனவோ, அந்தச் சமுதாயங்களுக்கு இப்போது அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய பட்டியலில் வன்னியர் ஒருவர் இடம் பெற்றிருந்த நிலையில், அவருக்குப் பதிலாக புதிய பட்டியலில் வன்னியர் எவரும் சேர்க்கப்படவில்லை என்பதே வன்னியர்கள் புறக்கணிக்கப்படுவதற்குச் சிறந்த உதாரணமாகும்.
75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் மட்டுமே நீதிபதிகளாக உள்ளனர். அவர்களில் இருவர் அடுத்த சில மாதங்களில் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், வன்னியர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு அளிக்காவிட்டால் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.
வன்னியர்கள் மட்டுமின்றி, மேலும் பல சமுதாயங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் நியாயமல்ல. இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்குப் பல்வேறு சமுதாயங்களைக் கொண்ட நாடு என்பதும் உண்மை. தகுதியின் அடிப்படையில் அனைத்துச் சமுதாயங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்கும்.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது காலியாக உள்ள 7 நீதிபதிகள் பணியிடங்களுக்குப் பரிந்துரைப் பட்டியலை அனுப்பும்போது அதில் வன்னியர்களுக்கும், புறக்கணிக்கப்பட்ட பிற சமுதாயங்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago