பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு; கலால் வரி மூலம்  6 ஆண்டுகளில் ரூ.19 லட்சம் கோடி வருமானம் ஈட்டிய மத்திய அரசு: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசலுக்கு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கலால் வரியை உயர்த்தியே வந்துள்ள மத்திய அரசால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, எரிவாயு சிலிண்டர் ஒரு மாதத்தில் 100 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது, ஆறரை ஆண்டுகளில் இப்படி 19 லட்ச ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்தியில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில் கடந்த 19 நாட்களாக கடும் குளிரையும், கரோனா தொற்றுப் பரவலையும் பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி தயாராக இல்லை. ஆனால், குஜராத் மாநிலத்தில் கட்ச் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிற பிரதமர் மோடி, அங்கே விவசாயிகளை சந்தித்து உரையாட இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தலைநகருக்கு அருகில் போராடுகிற ஆயிரக்கணக்கான விவசாயிகளை சந்தித்து பேச மனமில்லாத பிரதமர் மோடி, குஜராத்திற்கு விமானத்தின் மூலம் சென்று கட்ச் பகுதி விவசாயிகளை சந்திப்பதை விட இரட்டை வேடம் வேறு எதுவும் இருக்க முடியாது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் விரோத அரசு என்று கூறுவதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

கடந்த ஆறரை ஆண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பாஜக அரசு, தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா கொடுமையின் காரணமாக மக்கள் வருமானத்தை இழந்து, வாங்கும் சக்தியை இழந்து, வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கிற நேரத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி ரூபாய் 50, தொடர்ந்து டிசம்பர் 15 ஆம் தேதி ரூபாய் 50 என ஒரே மாதத்தில் ரூபாய் 100 விலை ஏற்றப்பட்டிருக்கிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூபாய் 610 இல் இருந்து ரூபாய் 710 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய கொடுமையான விலையேற்றத்தை ஒரே மாதத்தில் பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. கடந்த மே மாதம் முதற்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தாமல் பாஜக அரசு தவிர்த்து வருகிறது. மானியத்தையும் பறித்துக் கொண்டு, கலால் வரியையும் உயர்த்துகிற நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது, அதற்கு ஈடாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தியதில்லை. மே 2014-ல் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 105 டாலராக இருந்தது. ஆனால், பெட்ரோல் விலை ரூபாய் 76.10 ஆகவும், டீசல் விலை ரூபாய் 52.54 ஆகவும் இருந்தது.

பெட்ரோல் விலையில் கலால் வரி ரூபாய் 9.48 ஆகவும், டீசலில் ரூபாய் 3.56 ஆகவும், மிகக் குறைவாகவே விதிக்கப்பட்டது. அந்த சுமையை மக்கள் மீது சுமத்தக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த விலையேற்றத்தை சரிகட்ட மத்திய காங்கிரஸ் அரசு ரூபாய் 2 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவிற்கு மானியங்களை வழங்கியது.

ஆனால், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூபாய் 32.98 ஆகவும், டீசலில் ரூபாய் 31.83 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் டீசலில் 820 சதவிகிதமும், பெட்ரோலில் 258 சதவிகிதமும் கலால் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆறரை ஆண்டுகளில் பாஜக அரசு ரூபாய் 19 லட்சம் கோடியை கலால் வரியின் மூலம் கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அதற்கு ஈடாக விலையை குறைத்து, மக்கள் சுமையை குறைக்காமல் கலால் வரியை பலமுறை உயர்த்தி கஜானாவை நிரப்புவதில் பாஜகவை விட கொடூரமான அரசு வேறு எதுவும் இருக்க முடியாது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 48 டாலராக இருக்கும் போது, அதன் மதிப்பு ரூபாய் 3,560. இதில் 159 லிட்டர் கச்சா எண்ணெய் கிடைக்கும். அதன்படி ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூபாய் 22.39 தான் இருக்க முடியும். ஆனால், பெட்ரோல் விலை ரூபாய் 86 ஆகவும், டீசல் விலை ரூபாய் 79 ஆகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 710 ஆகவும் உயர்த்தி, மக்களை வாட்டி வதைப்பதற்கு பாஜக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

எனவே, கரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சியினாலும், தவறான கொள்கை முடிவுகளாலும் நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில் ஒரே மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூபாய் 100 உயர்த்துவதை உடனடியாக மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிடப்படவில்லையெனில் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப பெண்களின் சார்பாக, பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் விரைவில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்