முதியவர்கள் பலர் ‘முக்தி’ அடைவதற்கு முன்கூட்டியே தங்களது இறுதிச் சடங்குக்கு குறிப்பிட்ட தொகையை சேர்த்து வைத்துவிட்டு செல்லும் ‘கலியுகம்’ இது. இல்லையென்றால், பங்காளி தகராறு எழும் என்ற வேதனையால் இவ்வாறு செய்கின்றனர். பெற்றவர்களின் இறுதி யாத்திரைக்கு கூட கணக்கு போடும் பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், நிம்மதி தேடி வந்து அண்ணாமலையார் பூமியில் முக்தி அடையும் சாதுக்கள் உள்ளிட்டவர்களை தங்கள் பெற்றோராகவும், உடன் பிறந்தவர்களாகவும் கருதி நல்லடக்கம் செய்து, இறைவனுக்கு செய்யும் தொண்டு என்று கூறி தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர், ஓம் ஆத்மலிங்கேஸ்வரர் அறக்கட்டளை குழுவினர்.
இது குறித்து அறக்கட்டளை நிர்வாகி மோகன்சாது கூறுகையில், “எனது சொந்த ஊர் கடலூர். எம்.ஏ. பட்டதாரி. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, நிம்மதி தேடி திருவண்ணாமலைக்கு கடந்த 8 ஆண்டுக்கு முன்பு வந்தேன். அப்போது, 16 கால் மண்டபத்தில் உயிருக்கு போராடிய சாதுவின் நிலையைப் பார்த்து, அவரை தி.மலை அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். அவருக்கு சுயநினைவு திரும்பியதும், அவரது முகவரி பெற்று உரியவர்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தேன்.
அந்த காலக்கட்டத்தில், உயிரிழந்த சாதுக்களை குப்பைகளுடன் எடுத்துச் செல்வதை பார்த்தபோது, நாளை நமக்கும் இதே நிலைதான் என்ற எண்ணம் உருவானது. அப்போதுதான், சாதுக்களை அடக்கும் செய்யும் பணியை மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் அனுமதித்தார்கள். ஆம்புலன்ஸ் வாடகை மற்றும் குழி தோண்டும் நபருக்கு போலீஸாரே பணம் கொடுத்துவிடுவார்கள். மாலை, உதிரிப் பூக்கள், இளநீர், அபிஷேக பொருட்கள், வேட்டி, சேலை ஆகியவற்றை தொண்டுள்ளம் கொண்ட கடைக்காரர்கள் தருகின்றனர்.
நாங்கள், முக்தியடைந்த சாதுவின் உடலுக்கு அபிஷேகம் செய்து, ‘சிவ புராணம்’ பாடி நல்லடக்கம் செய்கிறோம். பிற சாதுக்கள் கொண்டு வரும் கங்கை நீரை, முக்தியடைந்தவர் மீது தெளிப்போம். கங்கை நீர் இல்லையென்றால், இளநீர்தான் எங்களுக்கு கங்கை நீர். காவல்துறை அனுமதி பெற்றுதான் எங்கள் பணி நடைபெறுகிறது.
எங்களது சேவையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இதுவரை சுமார் 300 சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளோம். இறுதிச் சடங்கு செய்யும்போது, அவ்வழியாக செல்லும் சாதுக்களும் வந்து பங்கேற்பார்கள். ஓரே நாளில் 4 சடலங்களை கூட நல்லடக்கம் செய்துள்ளோம். தி.மலை அரசு மருத்துவமனை கழிவறையில் வீசப்பட்ட ஆண் சிசுவையும் நல்லடக்கம் செய்துள்ளோம்.
சில ஆண்டுகளுக்கு பெரிய கோயிலில் யாசகம் கேட்டுக்கொண்டிருந்த பெண் சாது முக்தி அடைந்தார். அவரை தொட்டுத் தூக்கக்கூட ஆளில்லை. அடியார்கள் ஒன்றுகூடி அவரை நல்லடக்கம் செய்தோம். ஆதரவற்ற நிலையில் முக்தி அடைபவர்களை நல்லடக்கம் செய்வதும் இறைவனுக்கு செய்யும் தொண்டுதான்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago