தொழில் நிறுவனங்களை மீட்க ரூ.20 லட்சம் கோடி அறிவித்துவிட்டு ரூ.3 லட்சம் கோடி மட்டுமே ஒதுக்கீடு: மீதி ரூ.17 லட்சம் கோடி எங்கே?- கே.எஸ்.அழகிரி கேள்வி

By செய்திப்பிரிவு

தொழில் நிறுவனங்களை மீட்க மத்திய நிதியமைச்சர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதியில், ரூ.3 லட்சம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதும், ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.1.20 லட்சம் கோடி வரை, பல மாநிலங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது, மீதமுள்ள ரூ.17 லட்சம் கோடி என்ன ஆனது? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கடந்த 9 மாதங்களில் இந்தியாவின் குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்கள் மட்டுமே மேலும் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். மக்களோ, இருப்பதையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மோடி அரசு யார் பக்கம் நின்று கொண்டிருக்கிறது?

கரோனா பாதிப்புக்குப் பின்னர், மோடி அரசு திடீரென அறிவித்த பொது முடக்கத்தால் நாடே பாதிப்புக்குள்ளானது. திட்டமிடல் ஏதும் இல்லாத இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் 50 லட்சம் பேர் வேலையிழந்தனர். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொல்லொணாத் துயருக்கு ஆளானார்கள்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தியதால் மீள முடியாமல் தவித்தன. இந்நிலையில், இந்த தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான தொகுப்பு நிதி குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அறிவிப்பு வரும்போது, சிறு தொழில் நிறுவனங்களின் நிலை உடனே மாறிவிடும் என்பது போன்ற தோற்றத்தை ஊடகம் வழியாக மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்படுத்தியது. இத குறித்து சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்துள்ள பதில் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதியில், ரூ.3 லட்சம் கோடி நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதும், ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.1.20 லட்சம் கோடி வரை, பல மாநிலங்களுக்குக் கடனாக வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம், 130 கோடி இந்தியரின் ஒவ்வொருவரின் தலையிலும் கடன் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் கடன் தொகையை மக்களிடமிருந்தே எப்படியாவது திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயம். அதன்படி பார்த்தால், ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்காக வெறும் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடியை மட்டும் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பில், மீதமுள்ள ரூ.17 லட்சம் கோடி என்ன ஆனது? தொடர்ந்து இந்திய மக்களை ஏமாற்றி வரும் மோடி அரசு, கரோனா பாதிப்பில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களை 8 மாதமாக மோசடி செய்ததைத் தானே இது காட்டுகிறது.

கடந்த 4ஆம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் 80 லட்சத்து 93 ஆயிரம் வங்கி கணக்குகளுக்கு, ரூ.2.05 லட்சம் கோடி செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், 40 லட்சத்து 49 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் ரூ.1.58 லட்சம் கோடிகள் மட்டுமே கடனாகச் செலுத்தப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பினர் மொத்தம் 1.39 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு ரூ.3.18 லட்சம் கோடி கடனாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அறிவித்த தொகையிலும் நிலுவை வைத்து அவர்களையும் ஏமாற்றுகிறது மோடி அரசு. சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசும் பிரதமர் மோடியின் குரல், மனசாட்சியின் குரலாக ஒலிக்கவில்லை. அறிவித்த தொகையை வழங்காமல் போலி வேடம் போடும் மோடியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், ஏற்கெனவே நமக்கு நாடாளுமன்றக் கட்டிடம் இருக்கும்போது, ரூ.20 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்றக் கட்டிடம் கட்ட வேண்டியது அவசியம் என்ன? உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்து வருகிற மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரைச் சிறுமைப்படுத்துகிற வகையில் பல நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது.

இதையொட்டி நாடாளுமன்ற ஜனநாயகம் செழித்தோங்கிய சிறப்பும், அழகுமிக்க நாடாளுமன்ற வளாகத்தையே காட்சிப் பொருளாக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். இதைப் பார்க்கிறபோது துக்ளக்கின் ஆட்சிதான் நினைவுக்கு வருகிறது. கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் எல்லாத் தரப்பு மக்களும் முடங்கிவிட்டனர். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு ரூ.20 லட்சம் கோடி வரை தொகுப்பு நிதி ஒதுக்கியதாக மோசடி அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, ரூ.20,000 கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாகாதா ?

ரோம் நகரம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தது போல், நாடே பரிதவித்துக் கொண்டிருக்கும்போது, இவ்வளவு செலவு செய்து புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டத் துடிக்கிறார் பிரதமர் மோடி.

அம்பானி, அதானிக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் மக்கள் விரோத அரசை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அதனால்தான் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 19 நாட்களாகப் போராடி வருகிற விவசாயிகளை அழைத்துப் பேசுகிற குறைந்தபட்ச ஜனநாயக உணர்வு இல்லாதவராக இருக்கிறார்.

கடந்த 9 மாதங்களில் இந்தியாவின் குறிப்பிட்ட சில கோடீஸ்வரர்கள் மட்டுமே மேலும் கோடீஸ்வரர்களாக உயர்ந்திருக்கிறார்கள். மக்களோ, இருப்பதையும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், மோடி அரசு யார் பக்கம் நின்று கொண்டிருக்கிறது என்பதை நாம் சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்