சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் அதிக கட்டணத்தைக் கட்ட வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது மாணவர்களின் மருத்துவப் படிப்பைப் பாழ்படுத்தாமல் கல்விக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.14) முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதம்:
"சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு 2013-2014ஆம் ஆண்டில் அதிக கட்டணம் (ரூ.5.54 லட்சம்) தீர்மானிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு நியமித்த கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழுக் கட்டணங்களை தீர்மானித்திட வேண்டுமென 13.07.2018 அன்று உத்தரவிட்டது.
இத்தீர்ப்பின்படி, கல்விக் கட்டணம் தீர்மானிக்கும் குழு தீர்மானித்த கட்டணம் ஏற்கெனவே, பல்கலைக்கழகம் தீர்மானித்த கட்டணங்கள் அடிப்படையிலேயே இருந்தது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குத் தீர்மானித்த கட்டணங்களை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. இதுமட்டுமின்றி, தனியார் சுயநிதிக் கல்லூரிகள் கட்டணத்தை விடவும் அதிகமாக இருந்தது.
» மெரினா கடற்கரை திறப்பு; கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்
» அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: விசிக தீர்மானம்
உதாரணமாக, எம்பிபிஎஸ் கட்டணம் 2018-19ஆம் ஆண்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.13 ஆயிரத்து 600, தனியார் சுயநிதிக் கல்லூரிக்கு ரூ.3.55 - 4 லட்சம் வரை தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 370 எனத் தீர்மானிக்கப்பட்டது.
மருத்துவ முதுநிலைப் படிப்புக்கு இதே ஆண்டுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.30 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிக்கு ரூ.2 - 3.50 லட்சம் வரை தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் எனத் தீர்மானிக்கப்பட்டது. இதேபோன்று, பல் மருத்துவப் படிப்புக்கும் பாரபட்சமான அதீதமான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டன.
இக்கட்டண உயர்வை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தபோது, இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களை விட, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கு அதிக கட்டணங்களை தீர்மானித்தது நியாயமற்றது என அழுத்தமாகக் கூறியது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தீர்மானிக்கப்பட்ட அதே கட்டணத்தை ராஜா மருத்துவக் கல்லூரிக்கும் தீர்மானித்ததோடு இறுதித் தீர்ப்பு வரும் வரை அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் தீர்ப்பளித்தது. அத்துடன், கூடுதலாகக் கட்டணங்கள் பெற்றிருப்பின் அத்தொகையினை மாணவர்களுக்கு திருப்பியளிக்க வேண்டுமெனவும் 10.12.2018 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இறுதியாக, நவம்பர் 6, 2020 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்குப் புதிய கட்டணங்களைத் தீர்மானிக்க, மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் மூன்று வாரங்களுக்குள் மனு செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும் கட்டணமே இறுதியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்பே, எம்பிபிஎஸ் மாணவர்கள் ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 370, பிடிஎஸ் மாணவர்கள் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம், முதுநிலை மருத்துவ மாணவர்கள் ரூ.9 லட்சத்து 60 ஆயிரம், முதுநிலை எம்டிஎஸ் மாணவர்கள் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் எனக் கட்டணம் கட்ட வேண்டுமெனவும் கட்டாயப்படுத்துவதுடன், கட்டணம் செலுத்தவில்லையெனில் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாது என மாணவர்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால், கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர். இவர்களது பெற்றோர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு, சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி பல்கலைக்கழகத்தின் முழு நிர்வாகத்தையும் 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அண்ணாமலைப் பல்கலைகழகத்தோடு இணைந்த ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரியும் இணைந்தே கையகப்படுத்தப்பட்டது.
தற்போது, அரசு பல்கலைக்கழகமாக உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தனியார் கல்லூரிகளை விட இரண்டு மடங்கு கட்டணங்கள் கூடுதலாகத் தீர்மானித்துக் கட்ட வேண்டுமென கட்டாயப்படுத்துவது நியாயமற்றதாகும். இதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளை விட தனியார் மருத்துவக் கல்லூரிகள் மேலானவை என்ற கருத்து ஏற்படுவது அரசுத்துறைக்கு நல்ல பெயரை ஈட்டித் தராது.
எனவே,
1. சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் அதிக கட்டணத்தைக் கட்ட வேண்டுமென கட்டாயப்படுத்தக் கூடாது எனவும், இக்கட்டணம் கட்டவில்லை என்பதற்காக மாணவர்களின் மருத்துவப் படிப்பைப் பாழ்படுத்தக் கூடாது எனவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
2. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை என மாற்றப்பட்டு முழுமையும் அரசு மருத்துவக் கல்லூரியாகவே செயல்படும் நிலையில், இதர அரசு மருத்துவக் கல்லூரி தீர்மானிக்கும் கட்டணங்களையே இக்கல்லூரிக்கும் தீர்மானித்திட தமிழக அரசு உத்தரவு வழங்கிட வேண்டும்.
3. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியைத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டிலிருந்து, மருத்துவத்துறை கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
மேற்கண்டவற்றை தாங்கள் அவசரமாக நிறைவேற்றி, சிதம்பரம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களது நலன்களையும், அவர்களது பெற்றோர்களது நலன்களையும் பாதுகாத்திட வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago