அதிமுக ஆட்சியில் தலித்துகளுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: விசிக தீர்மானம்

By செய்திப்பிரிவு

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நேற்று இணைய வழியில் நடைபெற்றது.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மதவாத, பிரிவினைவாத சக்திகளைத் தடுக்க வேண்டும்

தமிழகத்தில் காலூன்றுவதற்காக பாஜகவும் சங்கப் பரிவாரங்களும் கடுமையான முயற்சிகளைச் செய்து வருகின்றன. ஆட்சியில் உள்ளவர்களோடு சேர்ந்துகொண்டு பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகின்றன. சமூக நீதி மண்ணான தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுக் கடமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது.

எனவே, மதவாத, சமூகப் பிரிவினைவாத சனாதன சக்திகளைத் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தடுக்கும் வகையில், உரிய செயல் திட்டங்களையும் தேர்தல் வியூகங்களையும் வகுத்திட வேண்டும்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு

இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தற்போது இந்தியாவெங்கும் குறிப்பாக புதுடெல்லியில் மிகுந்த எழுச்சியோடு விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகளையும் அறவழிப் போராட்டத்தையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

வேளாண் துறையை முற்றாக ஒழிக்கவும், விவசாய நிலங்களையெல்லாம் அம்பானி, அதானி ஆகிய பாஜக ஆதரவு கார்ப்பரேட் கும்பலிடம் சட்டவழியில் ஒப்படைக்கவும் ஏற்றவகையில் பாஜக அரசு இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென இந்த உயர்நிலைக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

அத்துடன், விவசாய சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்க டிசம்பர் 14-ம் தேதி அதானி, அம்பானி நிறுவனங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என இந்த உயர்நிலைக் குழு முடிவு செய்கிறது.

தலித் மக்களுக்கு எதிரான போக்கு

எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித் மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அண்மையில், சென்னை- கல்லறை நகர் பகுதிவாழ் தலித் மக்களின் குடியிருப்புகளைக் கொட்டும் மழையிலும் கரோனா நெருக்கடியிலும் இடித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தலித் பெண்மணி நாகலட்சுமியின் பிணத்தைப் பொதுப்பாதையில் எடுத்துச்செல்ல விடாமல் சாதிவெறியர்கள் தடுத்தனர். பெரம்பலூர் மாவட்டம், சிறுகுடல் கிராமத்தில், தலித் சிறுவர்களைக் கையால் மனிதக்கழிவை அள்ள வைத்த கொடுமையை சாதிப்பித்தர்கள் அரங்கேற்றியுள்ளனர்;

மேலும், தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாத அவலம் அதிகரித்துள்ளது. இப்படியான வன்கொடுமைகளுக்கு எதிராகக் காவல்துறையினர் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் சாதியவாதிகளுக்குத் துணைபோவதால் அவை மென்மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

தலித் மக்கள் மீதான இத்தகைய வன்கொடுமைகளைத் தடுக்கத் தவறிய தமிழக அரசை இந்த உயர்நிலைக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அதேவேளையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாறு அதிமுக அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.

கரோனா தடுப்பூசி

கரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்போது அனைத்து மக்களுக்கும் அதை இலவசமாகவே அளிக்க வேண்டும் என்று இந்த உயர்நிலைக் குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

புதிய நாடாளுமன்றம் யாருக்கு லாபம்?

சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். ஒருபுறம் நாடாளுமன்ற ஜனநாயகத்தைத் தகர்த்து நொறுக்கிக் கொண்டிருக்கும் மோடி அரசு, புதிதாக நாடாளுமன்றத்தைக் கட்டுகிறோம் என்று சொல்வது வரலாற்று நகை முரணாக உள்ளது என்பதை இந்த உயர்நிலைக் குழு சுட்டிக்காட்டுகிறது.

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் பணிகளைத் தொடங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் புதிய நாடாளுமன்றம் என்பது தேவையற்றது. அந்தத் திட்டத்தைக் கைவிடவேண்டும் என இந்த உயர்நிலைக் குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

53 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்