வன்னியர் 20% இட ஒதுக்கீடு கோரிக்கை; டிச.14-ல் மீண்டும் மாநிலம் தழுவிய போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

வன்னிய மக்களின் சமூக நீதிக்காகவும், சமூக உரிமைக்காகவும் நாம் நடத்தும் போராட்டம் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏராளமான சமுதாய அமைப்புகள் நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் நமது அறப் போராட்டத்திற்கு எதிரான விமர்சனங்களையும் நான் அறிவேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் இன்று எழுதிய கடிதம்:

“பாட்டாளி மக்கள் கட்சி என்பது சமூக நீதிக்கான கட்சி. பாட்டாளி மக்கள் கட்சி என்பது மக்களின் உரிமைகளுக்காகப் போராட, ஒரு போராளியால் போராட்ட குணம் கொண்டவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அதன்படிதான் அனைத்துச் சமுதாய மக்களின் நலன்களுக்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட பாட்டாளி மக்கள் கட்சி, இப்போது சமூகத்தில் மிக மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய சமூகத்தினருக்கு கல்வி/ வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கோரும் அறப்போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் எந்த அளவுக்குப் பின்தங்கியிருக்கின்றனர் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சமுதாயத்தின் அடிமட்டத்தில்தான் வன்னியர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பெரும்பான்மையான வன்னியர்கள் இன்னும் குடிசைகளில்தான் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர். உயர்கல்வி கற்கும் வன்னிய மாணவர்களின் விகிதமும், அரசு வேலைகளுக்குச் செல்லும் வன்னியர்களின் விகிதமும் இன்னும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. அரசு வேலைகளில் எழுத்தர்கள், உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விரல் விட்டு எண்ணும் அளவில் வட்டாட்சியர்கள் என்ற அளவில்தான் வன்னியர்கள் உள்ளனர்.

கோட்டாட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில் வன்னியர்களைத் தேடினாலும் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. மருத்துவம் உள்ளிட்ட உயர்தொழிற்கல்விகளில் பயிலும் வன்னியர் சமுதாய மாணவர்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு மேலும் குறைந்து வருகிறது.

இந்த நிலையை மாற்ற வேண்டும்; உயர்கல்வியிலும், உயர்நிலைப் பணிகளிலும் வன்னியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் வன்னியர்களுக்காக 20% தனி இட ஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நாம் அறிவித்திருக்கிறோம். முதற்கட்டமாக சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் டிசம்பர் 1ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை பெருந்திரள் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினோம்.

அடுத்தகட்டமாக வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் 16,743 வருவாய் கிராமங்களை நிர்வகிக்கும் 12,621 கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகம் முன் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்த உள்ளோம். தொடர்ந்து பேரூர், நகரம், ஒன்றியம், மாவட்டம் என அடுத்தடுத்து நமது போராட்டங்கள் தொடரும்.

வன்னிய மக்களின் சமூக நீதிக்காகவும், சமூக உரிமைக்காகவும் நாம் நடத்தும் போராட்டம் சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏராளமான சமுதாய அமைப்புகள் நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் நமது அறப் போராட்டத்திற்கு எதிரான விமர்சனங்களையும் நான் அறிவேன்.

ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு அனைவரின் நலனுக்காகவும் போராடாமல், சொந்த சாதியின் இட ஒதுக்கீட்டுக்காகப் போராட்டம் நடத்துகிறாரே? எனச் சில மேதாவிகள் எழுப்பும் வினாக்களும் எனது செவிகளுக்கு வந்துள்ளன.

அவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா அல்ல... ஆனால், செலக்டிவ் அம்னீஷியா வந்ததைப் போல நடிக்கிறார்கள். அவ்வளவுதான். வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை அனைத்துச் சாதிகளுக்காகவும்தான் இந்த ராமதாஸ் போராடிக் கொண்டிருக்கிறேன். இனியும் அனைத்துச் சாதிகளின் நலன்களுக்காகவும் போராடுவேன். ஆனால், தமிழ்நாட்டில் எந்த அமைப்பாவது வன்னியர்களின் நலன்களுக்காக முழக்கம் எழுப்பியிருக்கின்றனவா? இல்லை. இல்லவே இல்லை.

வன்னியர்கள் ஊமை சனங்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க எவரும் இல்லாத நிலையில், என்னைத் தவிர வேறு யார் குரல் கொடுப்பார்கள்? தமிழகச் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 உறுப்பினர்களில் 125க்கும் மேற்பட்டவர்கள் வன்னியர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றவர்கள். அவர்களில் எவரேனும் இதுவரை வன்னியர்களின் 20% தனி இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுத்திருப்பார்களா? மறந்தும் கூட அதற்காக குரல் கொடுத்ததில்லை.

அதனால்தான் சொல்கிறேன். அன்புமணியின் தம்பிகளே, தங்கைகளே, இளைஞர்களே, பாட்டாளிகளே, ‘‘உங்களையே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்’’ என்று. நமது சமூக, கல்வி நிலை என்ன? நமது முன்னேற்றத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு எந்த அளவுக்கு அவசியம்? என்பதை மட்டுமின்றி, நமக்காக உழைப்பவர்கள் யார்? என்பதையும் அறிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும்.

அதற்கு கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் கூறியதைப் போல உன்னையே நீ அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். அதை உணர்ந்தால்தான் எக்காலத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை வென்றெடுக்காமல் இந்த முறை நாம் ஓயப் போவதில்லை. இந்த உறுதியும், தெளிவும் பாட்டாளிகள் அனைவரிடமும் இருப்பதை நாம் நன்கு உணர்ந்திருக்கிறேன்.

நாம் உழைக்கும் வர்க்கம். நாம் நமது உரிமைகள் அனைத்தையும் போராடித்தான் வென்றெடுத்திருக்கிறோம். இம்முறை நமது போராட்டம் நமக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துத் தரும். எனவே, எந்தக் கவலையும் இன்றி அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் திரட்டி 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் போராட்டத்தை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இந்தப் போராட்டத்திற்குத் தயாராவது குறித்தும், ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் கடந்த 3ஆம் தேதி பாட்டாளி சொந்தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்திலும், கடந்த 10ஆம் தேதி ‘‘உன்னையே நீ அறிவாய்’’ என்ற தலைப்பில் உங்களிடையே நிகழ்த்திய உரையிலும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக கிராம அளவிலும், குக்கிராம அளவிலும் குழுக்களை அமைப்பது, ஒன்றிய அளவில் பொறுப்பாளர்களை நியமிப்பது, காவல்துறையிடம் கடிதம் கொடுப்பது உள்ளிட்ட பணிகளைச் செய்து முடித்திருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

போராட்டம் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். துண்டறிக்கைகளை வீடு வீடாகச் சென்று மக்களுக்கு வழங்கிப் போராட்டத்திற்கு அழைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டும்.

மக்கள் கூடும் இடங்களில் பதாகைகளை அமைக்க வேண்டும். 14ஆம் தேதி போராட்ட நாளில் அனைவரும் ஊர்க்கோவிலில் கூடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு கட்டுப்பாட்டுடன் சென்று வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரும் மனுவை அளித்து, அதை மாவட்ட ஆட்சியர் வழியாக முதல்வருக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டத்தில் கட்சிகளைக் கடந்து அனைத்து வன்னியர்களையும், சகோதர சமுதாயங்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். நமது போராட்டம் நிச்சயம் வெல்லும். நமது இட ஒதுக்கீட்டு வெற்றியைச் சரித்திரம் சொல்லும்”.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்