ஒரே பாடத்திட்டம், பாடநூல், மதிய உணவு, மடிக்கணினி, பொருளாதார நிலை என அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இருந்தும், அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் மட்டும் ஒன்றுபோல் கிடைக்கவில்லை.
மருத்துவப் படிப்பில் தமிழக அரசு வழங்கிய உள் ஒதுக்கீடு பரவலான பாராட்டைப் பெற்றது. ஆனால், நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றும் பல மாணவர்கள் மருத்துவ இடங்களை இழந்துள்ளார்கள்.
கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவம் படிக்க அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வு ஆரம்பம் முதலே தமிழகத்தில் எதிர்ப்புக் குரலை எதிர்கொண்டது. அது சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்து, இட ஒதுக்கீட்டை அழித்து மருத்துவக் கல்வியில் கோச்சிங் சென்டர், கார்ப்பரேட்டுகளின் லாபத்தை ஊக்குவித்து, சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மருத்துவக் கல்வியை விட்டு அகற்றியதே எதிர்ப்புக்குக் காரணம்.
உள் ஒதுக்கீடு
இந்த நிலையில், ஆண்டின் தொடக்கம் முதலே கரோனா பாதிப்பால் உலகமே முடங்கியிருந்தாலும், மாணவர்களைத் தேர்வு மையத்துக்கே வரவழைத்து நீட் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து, நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாமல் அவர்களின் கனவு பறிபோகிறது. அப்படியே ஓரிருவர் தேர்ச்சி பெற்றாலும், அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என்ற விவாதம் எழுப்பப்பட்டு வந்தது. அதனையொட்டிய போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
அதன் விளைவாக, நீதிபதி கலையரசன் தலைமையில் 'மருத்துவ இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு' குறித்து ஆய்வதற்காக கலையரசன் கமிட்டி கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின்படி, 10% இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்று பரிந்துரையும் செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஜூன் மாதம் தமிழக சட்டப்பேரவையில் அவசரச் சட்டமாக 'அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் 7.5% இட ஒதுக்கீடு' என்று சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ஆளுநரோ ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தினார். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தின. பிறகு தமிழக அரசே அரசாணையை வெளியிட்டது. பின்னர்தான் ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
அதன்படி, 2020-க்கான மருத்துவக் கலந்தாய்வு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. முன்னதாக, 8 மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 7.5% இட ஒதுக்கீட்டினால் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன. அதிலும் பல மாணவர்களுக்குத் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் பணம் கட்ட முடியாமல் வெளியேறினர். அதற்குப் பின்பே தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாக, தனியார் கல்லூரிகளில் இடத்தைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்கும் என அறிவித்தது. இதைக் கண்டு வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுவதை தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தோம்.
உதவிபெறும் பள்ளி மாணவர்கள்
இந்த நிலையில்தான் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவ இடங்கள் கிடையாது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் 8,409 அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,173 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள். இந்த முறை நீட் தேர்வுக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 617 மாணவர்கள் பதிவுசெய்து 99 ஆயிரத்து 610 பேர் தேர்வை எழுதியிருந்தார்கள். அவர்களில் 57 ஆயிரத்து 215 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். அதிலும் 6,692 அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களில் 1,633 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தார்கள். நான்கு அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 14 அரசு உதவிபெறும், ஒரு அரசுப் பள்ளி மாணவர் ஆகியோர் 400-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டுகளில் ஓரிரு அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெறும் சூழல் இருந்தது. இந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் அதிகப்படியான மாணவர்கள் அந்த வாய்ப்பைப் பெற்றிருந்தனர். ஆனால், அதில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் இல்லை.
இந்தக் குளறுபடிகளுக்கு காரணம் கலையரசன் கமிட்டி உருவாக்கப்பட்டபோதே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு குறித்த ஆய்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. அதன்படியே அந்த கமிட்டியின் பரிந்துரைகளும் அமைந்தன. இதில், பெரிய முரணாக கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் எட்டாம் வகுப்பு வரை பயின்று அதற்குப் பிறகு அரசுப் பள்ளியில் சேர்ந்து இருந்தால்கூட 7.5% இட ஒதுக்கீட்டில் பயன்பெற முடியும். ஆனால், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு மட்டுமே பயின்று அதன்பின் அரசுப் பள்ளியில் சேர்ந்து இருந்தால்கூட, அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. சொல்லப்போனால் கலையரசன் கமிட்டியின் பரிந்துரைகளில் அரசு உதவிபெறும் பள்ளி என்ற பெயர்கூட இடம் பெறவில்லை.
தீர்வு என்ன?
இதுகுறித்து, ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களான கனகராஜ், சுரேஷ் ஆகியோரிடம் கேட்டபோது, "எல்லா வகையிலும் அரசின் சலுகைகளைப் பெறும் அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களைப் போன்றே சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். கலையரசன் கமிட்டியின் பரிந்துரைபடி 10% இட ஒதுக்கீடு என்பதை அமல்படுத்தி, அதில், அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை, அரசுப் பள்ளி மாணவர்களைப் பாதிக்காத வகையில் அளிக்க வேண்டும்" என்கிறார்கள்.
"அரசின் நீட் கோச்சிங் சென்டர்கள் அதிகமாக அரசு உதவிபெறும் பள்ளிகளில்தான் அமைக்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகளுக்கு நிகராக அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் வகுப்பு எடுத்தனர். மாணவர்களும் வேற்றுமையின்றி வகுப்புகளில் பங்கேற்றனர். அப்படியிருக்க அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களை மட்டும் ஏமாற்றுவது மனிதாபிமானமற்ற செயல், சமூக அநீதி" என்கிறார், கனகராஜ்.
வஞ்சிக்கப்பட்ட மாணவர்களோ "நாங்கள் அரசின் பிள்ளைகள் இல்லையா? எங்கள் மீது அரசுக்குப் பொறுப்பு இல்லையா?" என்ற கவலையை வெளிப்படுத்துகின்றனர்.
இதுகுறித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், "நீட் என்பதே சமூக அநீதி. தமிழகத்தின் வளர்ந்த மருத்துவக் கல்வியை முழுவதுமாகக் கபளீகரம் செய்துகொண்டு, தமிழக மாணவர்களைப் புறக்கணிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கே புறம்பானது. என்னதான் இந்த இட ஒதுக்கீடுகள் தற்கால நிவாரணிகளைக் கொடுத்தாலும் நீட் அநீதி ஒழியாமல் தமிழக மாணவர்களுக்கு நிம்மதி இல்லை" என்கிறார்.
எனவே, தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று கட்டணச் சுமையால் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறு கலந்தாய்வின் மூலம் தமிழக அரசு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்தி அவர்களின் மருத்துவக் கனவை உயிர்பெறச் செய்ய வேண்டும்.
கட்டுரையாளர்: எஸ்.சுபாஷ்,
தொடர்புக்கு: sram72451@gmail.com
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago