மாற்றுத்திறனாளிகளுக்கான அரசுப் பேருந்து; தமிழக அரசின் பதிலால் உயர் நீதிமன்றம் அதிருப்தி: ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளி உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுப் போக்குவரத்தில் வசதிகள் ஏற்படுத்தப்படாதது குறித்த அரசின் பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

கல்வி நிறுவனங்கள், அரசுக் கட்டிடங்கள், ரயில்கள், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த 2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது தொடர்பான வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்ததுபோது, கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த வழக்கில் பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும், தமிழக அரசு இதுவரை செயல்படுத்தாதது குறித்துக் கேள்வி எழுப்பி, தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஆகியோர் காணொலி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலமாக ஆஜராகினர்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தலைமைச் செயலாளரின் அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் மேம்படுத்தும் வகையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும், கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளில் 10 சதவீதப் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுக் கொள்முதல் செய்யப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

நிதிச் சுமை காரணமாக தாழ்தளப் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்த அவர், மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசுடன் கலந்து பேசி முடிவைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை நகரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாழ்தளப் பேருந்துகளை இயக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சென்னையில் தற்போது 10 பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க ஏதுவாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும், 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றும், இது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்றும் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து நீதிபதிகள், மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு நிதிப் பற்றாக்குறை என்றால் பொருளாதார நெருக்கடி நிலையைப் பிறப்பிக்கலாமா? போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது கட்டாயம்தான். ஆனால், கருணைத் தொகை வழங்குவது கட்டாயமா, கருணைத் தொகை வழங்கக் கூறியது யார் என்று கேள்விகளை எழுப்பினர்.

சட்டங்கள் உள்ளபோது அவற்றை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்த நீதிபதிகள், தலைமைச் செயலாளரின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

சென்னையில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக இல்லாததால் தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூறப்படுவதால், தரமான சாலைகளை அமைக்க வேண்டியது மாநகராட்சியின் கடமை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

மாற்றுத்திறனாளிகளுக்குப் பயணம் செய்ய ஏதுவாக தற்போது இயக்கப்படும் 10 பேருந்துகள் போதுமானவை அல்ல எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிவரும் என்றும், அந்த நிலை உருவாகாது என நம்புவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து மாற்றுத்திறனாளி உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுப் போக்குவரத்தில் அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 26-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்