சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியின் மூன்று மாதக் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் உடனடியாகக் குழந்தை மீட்கப்பட்டது. பணத்திற்காக குழந்தையை விற்க முயன்ற 2 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருபவர் ரமேஷ் (34). விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், கரோனா தொற்று காரணமாக ஊரிலிருந்து மனைவியையும், 3 மாதக் கைக்குழந்தை உள்ளிட்ட 2 குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்து வந்து தான் வேலை செய்யும் கோயம்பேடு மார்க்கெட்டிலேயே தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
இரவில் பூட்டியிருக்கும் கடையின் வாசலில் தம்பதியர் குழந்தைகளுடன் படுத்து உறங்குவது வழக்கம். கடந்த நவ.9-ம் தேதி அதிகாலையில் அருகில் உறங்கிக் கொண்டிருந்த 3 மாதக் குழந்தை காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை அலட்சியமாகக் கையாண்ட எஸ்.ஐ. குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. உயர் அதிகாரிகள் தலையீட்டின்பேரில் உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு புதரில் குழந்தை கிடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் குழந்தையை மறுநாளே (நவம்பர் 10) மீட்டனர். குழந்தையைக் கடத்தியவர்களை போலீஸார் தேடி வந்தனர்.
குழந்தை கிடப்பது குறித்த தகவல் கொடுத்தவர்களின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து தொடர் விசாரணை நடத்தியதில் 6 பேர் கொண்ட கடத்தல் கும்பல் நேற்று இரவு போலீஸாரிடம் சிக்கியது. இதில் 2 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் பாபு, பாபுவின் மனைவி காயத்ரி, அவர்களின் 16 வயது மகன் ஆகியோர் குழந்தையை நோட்டமிட்டுக் கடத்தியது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலில் குழந்தைக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த செங்குட்டுவன், கணேஷ், மேலும் ஒரு 16 வயதுச் சிறுவன் ஆகிய 3 பேர் சிக்கினர்.
பாபு, காயத்ரி, அவர்களது 16 வயது மகன் ஆகியோர் குழந்தைகள் இல்லாத தம்பதிக்குக் குழந்தைகளைக் கடத்தி விற்பது விசாரணையில் தெரியவந்தது. லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட்டில் நோட்டமிட்டு ரமேஷின் 3 மாதக் குழந்தையைக் கடத்தியது தெரியவந்தது.
கடத்திய குழந்தையை கணேஷ், செங்குட்டுவன், 16 வயதுச் சிறுவன் ஆகியோர் மூலமாக 10 லட்ச ரூபாய் பணத்திற்கு விலை பேசி விற்பனை செய்ய முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குழந்தைக் கடத்தல் குறித்த செய்தி சமூக வலைதளத்தில் பெரிதானதால், குழந்தையை விற்க முடியாமல் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு புதரில் குழந்தையைப் போட்டுவிட்டு, கடத்தியவர்களே பொதுமக்கள்போல் போலீஸாருக்கு போன் செய்து தகவல் கொடுத்ததும் தெரியவந்தது.
அவ்வாறு பேசியதே அவர்கள் சிக்குவதற்குத் துப்பாக அமைந்துவிட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். பணத்துக்காக குழந்தையைக் கடத்தி விற்பவர்கள் என்பதால் இதற்கு முன்னர் எத்தனை குழந்தைகளைக் கடத்தி விற்றுள்ளனர் எனத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
மேலும் போலீஸார் காணாமல்போன குழந்தைகள் குறித்து சென்னையில் கொடுக்கப்பட்ட புகார்களைச் சேகரித்து அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்த உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago