உயர் நீதிமன்றம் கண்டனம்; சென்னை - வாலாஜா நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா? - ராமதாஸ் கேள்வி

சென்னை - வாலாஜா நெடுஞ்சாலை சீரமைக்கப்படுமா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (டிச.10) வெளியிட்ட அறிக்கை:

"சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - வாலாஜாபேட்டை இடையிலான பகுதி ஆண்டுக்கணக்கில் சீரமைக்கப்படாமல் இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அப்பகுதியில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு 50% சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. சாலைகளை முறையாகப் பராமரிக்காத நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு இதைவிட மோசமான தண்டனை இருக்க முடியாது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சென்னை - வாலாஜாபேட்டை பகுதி மோசமாகப் பராமரிக்கப்படுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணா, ஹேமலதா அமர்வு முன் நேற்று (டிச. 09) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மதுரவாயல் - வாலாஜாபேட்டை நெடுஞ்சாலை நெடுங்காலமாக சீரமைக்கப்படாமல் இருப்பது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், அடுத்த 10 நாட்களில் சாலை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தது. அதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், அடுத்த இரு வாரங்களுக்கு சுங்கக் கட்டணத்தைப் பாதியாக வசூலிக்க ஆணையிட்டுள்ளனர்.

சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பராமரிக்கும் விதம் தொடக்கம் முதலே கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

பெங்களூரு முதல் வாலாஜா வரையிலான சாலை 6 வழிச்சாலையாக இருக்கும் நிலையில், அதன்பிறகு 4 வழிச்சாலையாக சுருங்கி விடுகிறது; ஸ்ரீபெரும்புதூருக்குப் பிறகு குண்டும் குழியும் நிறைந்த சாலையாகி விடுகிறது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் அங்கு வந்து செல்லும் கனரக வாகனங்களைத் தாங்கும் வகையில் தரமாக சாலை அமைக்கப்பட்டிருக்க வேண்டும்; சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலைகள் 100 ஆண்டுகள் வரை உழைத்தன. ஆனால், சென்னை - வாலாஜாபேட்டை சாலை பயணிக்கவே தகுதியற்ற சாலையாகவே உள்ளது.

சென்னை - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையின் மோசமான நிலை குறித்தும், அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் 25.07.2017, 17.07.2018 ஆகிய தேதிகளில் விரிவான அறிக்கைகளை வெளியிட்டேன். அத்துடன் நிற்காமல் அப்போதைய மத்திய நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்தவரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் பலமுறை வலியுறுத்திருக்கிறேன்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதி பாமக சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. எத்தனை போராட்டங்களைத்தான் நடத்துவது? எத்தனை வழக்குகளைத்தான் தொடுப்பது? எத்தனை அறிக்கைகளைத்தான் வெளியிடுவது? எதற்குமே பயனில்லை என்றால் என்னதான் செய்வது? இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செயல்பாட்டில் இருக்கிறதா... செயலற்றுப் போய் விட்டதா? என்பதே தெரியவில்லை.

சென்னை - வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலை சரியாக பராமரிக்கப்படாதது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாவதும் இது முதல் முறையல்ல. இதே வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், சாலை சரி செய்யப்படும் வரை 50% சுங்கக் கட்டணம் மட்டும்தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று ஏன் ஆணையிடக்கூடாது? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதன்பின் ஓராண்டாகியும் இந்த நெடுஞ்சாலை சீரமைக்கப்படாததால்தான், இப்போது சுங்கக் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதைத் தமக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே நெடுஞ்சாலைகள் ஆணையம் கருத வேண்டும்; அடுத்த இரு வாரங்களுக்குள் சென்னை - வாலாஜாபேட்டை நெடுஞ்சாலையைச் சீரமைக்க வேண்டும்.

சென்னை - வாலாஜா சாலை மட்டும்தான் என்றில்லை... மற்ற சாலைகளின் பராமரிப்பும் அப்படித்தான் உள்ளன. திண்டிவனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கப்படவில்லை. இந்தச் சாலையின் மோசமான நிலைக்குக் கண்டனம் தெரிவித்து, அதில் போக்குவரத்துக்குத் தடை விதித்து செஞ்சி நீதிமன்றம் 2015-ம் ஆண்டில் ஆணையிட்டது. இந்தச் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரே நாளில் இந்தச் சாலை செல்லும் 16 இடங்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன; நானே இந்தப் போராட்டத்திற்கு தலைமையேற்றேன். ஆனாலும் இந்தச் சாலை இன்னும் அமைக்கப்படவில்லை.

உளுந்தூர்பேட்டை - சேலம் இடையிலான 136 கி.மீ. நீள நான்குவழிச் சாலை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதுடன், எட்டு இடங்களில் புறவழிச்சாலைகள் முழுமையாக அமைக்கப்படவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழித்தடமாக உள்ள புறவழிச்சாலையில் ஏராளமாக விபத்துகள் ஏற்படுகின்றன. இந்தப் பிரச்சினைகள் குறித்து மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் ஆகியோருக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி கடிதம் எழுதினேன். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகள் வளர்ச்சிக்கான பாதைகள். அவை சேதமடைந்திருப்பது வளர்ச்சியைத் தடுக்கும். எனவே, சென்னை - வாலாஜா சாலையில் உள்ள குழிகளை அடுத்த இரு வாரத்திற்குள் சரி செய்ய வேண்டும்; ஆனால், இது மட்டுமே போதாது. சென்னை - வாலாஜா சாலையை 6 வழிச் சாலையாகவும், அதில் ஸ்ரீபெரும்புதூர் - மதுரவாயல் பகுதியை 6 வழி சிமென்ட் சாலையாகவும் விரிவாக்குவதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். திண்டிவனம் - கிருஷ்ணகிரி, உளுந்தூர்பேட்டை- சேலம் நெடுஞ்சாலைகளையும் உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்