வேளாண் சட்டம் குறித்து விவாதிக்கத் தயாரா?- முதல்வர் பழனிசாமியிடம் பி.ஆர்.பாண்டியன் கேள்வி

By கரு.முத்து

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திட்டங்களால் தமிழக விவசாயிகளுக்குப் பாதிப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கும் நிலையில் அது குறித்துத் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு வருகிறார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பிஆர்.பாண்டியன் பார்வையிட்டபின் கச்சனம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால் வரலாறு காணாத பெரும் மழைப் பொழிவைத் தமிழகம் சந்தித்து இருக்கிறது. குறிப்பாக கடலூர் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் வரையிலும் மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

ஓரிரு மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாட்களில் கொட்டித் தீர்த்து இருக்கிறது. இதனால் கிராமங்களில் விளை நிலங்கள் முற்றிலும் நீரால் சூழப்பட்டன. சுமார் பதினைந்து நாட்கள் நீரில் மூழ்கி இருந்ததால் பயிர்கள் அழிந்து போய்விட்டன. இனி மறு உற்பத்திக்கு வாய்ப்பில்லை. குறிப்பாக 20 லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள், நீரால் சூழப்பட்டு தற்போது ஓரிரு நாட்களாக வடியத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் 6 லட்சம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

பயிர்கள் நீரால் சூழப்பட்ட நிலையிலேயே பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைந்து முதல்வர் பார்வையிட்டதால் விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் இதுவரையிலும் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 867 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லிவிட்டு முழுக் கணக்கெடுப்பு நடத்துவதாகத் தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்ட நிலையில் 1.32 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கணக்கெடுப்புக்கு முன்னதாகவே இலக்கைச் சொல்லிக் கணக்கெடுப்பு செய்வது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை மறுபரிசீலனை செய்து சிறிய, பெரிய விவசாயிகள் என்ற பாகுபாடின்றி முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். இழப்பீடு தொகை குறித்து முதல்வர் அறிவிக்காதது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனை உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. கார்ப்பரேட்டுகளுக்க் ஆதரவானவை என்று விவசாயிகள் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடி, சட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்துத் தெளிவுபடுத்த வாய் திறக்க மறுக்கிறார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எழுத்துபூர்வமான உத்தரவாதம் தரப்படும், பாதிக்கும் விஷயங்கள் குறித்து சில மாற்றங்களைச் செய்து சட்டத்தைக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தான் ஆதரித்த ஒரே காரணத்துக்காக ஒட்டுமொத்தத் தமிழக விவசாயிகளும் பாதிக்கக்கூடிய சட்டத்திற்குத் தொடர்ந்து ஆதரவாகப் பேசுவது விவசாயிகள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் உடனடியாக அந்தக் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் இதுகுறித்து முதல்வரோடு நேரடியாக விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.

எந்த இடத்திலும், பொது மேடையிலோ அல்லது அவரது அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் முன்னிலையிலோ, அல்லது அவர் விரும்புகிற ஊடகத்தில் அவர் விவாதிக்கத் தயார் என்றால், நான் அவரோடு உட்கார்ந்து சட்டம் குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்."

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்