மத்திய அரசு மழை பாதிப்புக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் புதுச்சேரி அரசின் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான பல்வேறு பயிற்சிகள் அளிக்கும் வகையிலான, 'தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் திறப்பு விழா இன்று (டிச.10) காரைக்காலில் நடைபெற்றது.
காரைக்கால் புதிய பேருந்து நிலையக் கட்டிடத்தின், முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி திறந்துவைத்துப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில், கிராமப்புற மக்கள் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாகவும், தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையிலும் தையல் பயிற்சி, கணினிப் பயிற்சி, குழுக்கள் அமைத்து அதன் மூலம் வாகனங்கள் வாங்கி சுயதொழில் செய்வது உள்ளிட்ட பல நிலைகளில் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்கிறது. வங்கிகள் மூலமும் கடன் உதவி பெற முடியும்.
புதுச்சேரி, காரைக்காலில் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. விளைநிலம், வாழை, கரும்பு, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்பு, நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் சுமார் 300 கி.மீ. தூரத்துக்கான சாலைகள் பாதிப்பு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 2,800 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிப்பு, குடிசைகள் பாதிப்பு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலை உள்ளிட்ட பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு மொத்தம் ரூ.400 கோடி இழப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ரூ.400 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், இடைக்கால நிதியாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று ஏற்கெனவே பிரதமர், உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். மத்தியக் குழுவினர், மாநில அரசு அதிகாரிகளுடன் சென்று புதுச்சேரியில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். அவர்களும் அறிக்கை சமர்ப்பிப்பதாகக் கூறியுள்ளனர்.
ஆனால், மத்திய அரசு ஒதுக்கும் தொகை குறைவாகவே உள்ளது. இடிந்த வீட்டுக்கு ரூ.4,000, சாலைகளுக்கு ரூ.1 லட்சம் என்பதெல்லாம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை, தற்போது ரூ.4 கோடி இல்லாமல் சாலை அமைக்க முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, விதிமுறைகளை மாற்றித் தொகையை உயர்த்தி, புதுச்சேரிக்கு கணிசமாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளோம். மத்திய அரசிடமிருந்து மிக விரைவில் பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.
கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வி.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், வட்டார வளர்ச்சி அலுவலர் டி.தயாளன், பயிற்சி நிறுவன திட்ட இயக்குநர் எஸ்.நெல்சன் ரிச்சர்டு, நிறுவன தலைவர் ஆர்.கார்த்திக்கேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.கே கல்வி அறக்கட்டளை மூலம், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஏழை, எளியோர் 400 பேருக்கு தையல், கணினிப் பயிற்சி 90 நாட்கள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெறுவோருக்கு பயிற்சி நாட்களில், தேநீர், மதிய உணவு, உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில், வேலை வாய்ப்பு, வங்கிக் கடன் உதவிக்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago