மாயமந்திரம் போல் உடனடியாக முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

‘‘ஜீ பூம் பா, சூ மந்திரக்காளி எனக்கூறி மாயமந்திரம் போல் உடனடியாக முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மேலும் ரஜினி அரசியலை விமர்சித்தவர், யோகிபாபுவுக்கு கூட அவர் ரசிகர்கள் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகின்றனர். அதனால் ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டரால் தவறில்லை என்றும் கிண்டல் செய்தார்.

மதுரை வைகை ஆற்றில் ஏவி மேம்பாலம் கீழ் பகுதியில் கட்டப்பட்ட தடுப்பணையில் இருந்து தெப்பக்குளத்திள்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய்களையும், மதுரை தெப்பக்குளத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது குறித்தும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் விசாகன், நகரப்பொறியாளர் அரசு ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு சிறிது நேரத்திற்கு முன்பு வைகை ஆற்றில் அமைச்சர் வர இருப்பதால் மாநகராட்சிப் பணியாளர்களைக் கொண்டு அவசர அவசரமாக எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஆகாயத்தாமரைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆய்வுக்குப்பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை அருகே பனையூர் கால்வாயில் இருந்து தெப்பக்குளத்திற்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு தூய்மையான தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது தெப்பக்குளம் மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளது. மதுரையின் மெரினாவாக பொழுதுபோக்கு இடமாக தெப்பக்குளம் மாறியுள்ளது.

திருமலை நாயக்கர் காலத்தில் பொறியாளர்கள் இல்லாத போதே மிகச்சிறப்பாக தெப்பக்குளம் கட்டப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுரையின் நூறு வார்டுகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட ஊருணிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

டி ஆர் பாலு அமைச்சராக இருந்தபோது சாலை பணிகளுக்காக பழமையான மரங்கள் வெட்டப்பட்டன. ஆறுவழிச்சாலை திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நிலையில், ஜெயலலிதா எதிர்க்கவில்லை. எதிர்கால திட்டம் என்பதால் ஜெயலலிதா அப்போது போராட்டம் நடத்தவில்லை.

ஆனால் தற்போது அதுபோன்ற பொது நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை. ஜீ பூம்பா, சூ மந்திரகாளி எனக்கூறுவது போல உடனடியாக முதல்வராக நினைக்கிறார் ஸ்டாலின். ஆனால், அது ஒரு போதும் நடக்காது. சைக்கிளில் போன ஆ.ராசா தற்போது வெளிநாட்டுக் காரில் செல்கிறார்.

உலகெங்கும் தமிழன் பெயரைக் கெடுத்தவர் ராசா. எங்களைப் பற்றி பேச ஆ.ராசாவுக்கு தகுதி இல்லை. தமிழனின் மரியாதையை கெடுத்தவர் வேட்டி கட்டிய ஆ.ராசா.

ஆனால், வேட்டி கட்டிய முதல்வர் கே.பழனிசாமி தமிழனின் பெருமையை நிரூபித்தவர். திஹார் வா வா என்பதால் ஆ.ராசா அதிமுகவைப் பற்றி ஏதாவது சொல்லி விமர்ச்சிக்கிறார்.

ரஜினிகாந்திற்கு முதல்வர் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டுவது, அவர்களுடைய ரசிகர்களுக்கு விருப்பம். யோகிபாபுவுக்கு கூட அவர் ரசிகர்கள் முதல்வர் என போஸ்டர் ஒட்டுகின்றனர். அதனால் ரஜினி ரசிகர்கள் ஒட்டும் போஸ்டரால் தவறில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE