கனமழையால் நிரம்பி வழியும் பழமை வாய்ந்த படுகை அணை: திடீர் சுற்றுலாத் தலமாக மாறிய புதுவை, செல்லிப்பட்டு கிராமம்

புதுச்சேரி அருகே கனமழையால் நிரம்பி வழியும் பழமை வாய்ந்த படுகை அணையைக் காண, பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் செல்லிப்பட்டு கிராமம் திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

நிவர் மற்றும் புரெவி புயலால் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. புதுச்சேரியில் உள்ள 84 ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன.

குறிப்பாகப் புதுச்சேரியின் பெரிய ஏரியான ஊசுட்டேரி, இரண்டாவது பெரிய ஏரியான பாகூர் ஏரி ஆகியவை நிரம்பிக் கடல் போல் காட்சியளிக்கின்றன. மேலும் படுகை அணைகள், அணைக்கட்டுகள், நீர்வரத்து வாய்க்கால்கள் நிரம்பி வழிகின்றன. நிரம்பி வழியும் அணைகள், வாய்க்கால்களில் கிராமத்து இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தும், மீன்கள் பிடித்தும் வருகின்றனர். மேலும் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்தும் வருகின்றனர். குறிப்பாக புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சியில் 1906-ம் ஆண்டு கட்டப்பட்ட படுகை அணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடுகிறது.

இந்த அணையில் தண்ணீர் சீறிப் பாயும் அழகிய தோற்றம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இதனை அறிந்த உள்ளூர் மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குடும்பத்துடன் செல்லிப்பட்டு அணைக்கு பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து ரசிப்பதுடன் செல்ஃபியும் எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் குடும்பத்துடன் குளித்தும் மகிழ்கின்றனர்.

இயற்கையின் கொடையால் செல்லிப்பட்டு படுகை அணைப் பகுதி திடீர் சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது. அதே நேரத்தில் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பழமை வாய்ந்த அணையில் ஏற்கெனவே நடுப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைப் பராமரித்து, பாதுகாப்பதும் அவசியம் என பொதுமக்கள், விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கையும் எழுந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE