தனியார் மயமாக்கலை எதிர்த்து புதுவை மின் ஊழியர்கள் போராட்டம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு 

By செய்திப்பிரிவு

புதுவையில் மின்துறையைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து மத்திய அரசை எதிர்த்து மின் ஊழியர்கள் நடத்தும் போராட்டத்துக்கு எதிராக புதுவை எம்எல்ஏ தொடர்ந்த பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின் விநியோகத்தைத் தனியாருக்கு வழங்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர்கள், கடந்த 4-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரியும், போராட்டத்தைக் கைவிடாவிட்டால் ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில், “நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மின் கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் விழுந்துள்ளன. மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக, இவை சரி செய்யப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் தன்னிச்சையான முடிவுக்கு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், மக்கள் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, தனது மனுவின் அடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களைப் பணிக்குத் திரும்பும்படி முதல்வர் வேண்டுகோள் விடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்” என எம்எல்ஏ தரப்பில், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் முறையிடப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நாளை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE