விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு; ஓஎம்ஆர் சாலையில் மறியல் போராட்டம்

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று (டிச. 08) பாரத் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேருந்து நிலையம் அருகே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணை செயலாளர் ஜெகதீசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, விவசாயிகள் சங்கம், இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஜெனரல் ஒர்க்ஸ் யூனியன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை மற்றும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மற்றும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், ரவுன்டானா பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே ஓஎம்ஆர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஓஎம்ஆர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் சமாதானம் ஏற்படாததால், மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE