புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல்: கடைகள் அடைப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று நாடு தழுவிய பந்த் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கம், தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமப்புறங்களைத் தவிர ஏனைய பகுதிகளில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகக் கழகத்தினரும் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே எல்பிஎப், சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி போன்ற தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் அருகே வழக்கறிஞர்களும், புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை உழவர் சந்தை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சார்பில் ஏர் கலப்பையுடன் சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை உழவர் சந்தை அருகே சங்கு ஊதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்.

கீரமங்கலத்தில் ஆலங்குடி திமுக எம்எல்ஏ சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கொத்தமங்கலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கொத்தமங்கலத்தில் ஏர் கலப்பையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.

இதேபோன்று அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர், விராலிமலை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருமயம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி என 25க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதுதவிர, ரயில் நிலையம் அருகே ரயில்வே தொழிலாளர்களும், திருமயம் அருகே பெல் நிறுவனத்தின் ஊழியர்களும், புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE