எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தொடரத் தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து திட்ட இயக்குனர் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், கையகப்படுத்திய நிலத்தைத் திருப்பி அளிக்க உத்தரவிட்டு, உரிய நடைமுறைகளுடன் எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தொடரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழிச் சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டில் அறிவிப்பு, அரசாணை ஆகியவற்றை வெளியிட்டது.

ஆனால், இத்திட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பை மீறி, நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டது. இந்நிலையில் இந்தத் திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், காடுகள் அழிக்கப்படுவதாகவும் கூறி விவசாயிகள், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், எட்டுவழிச் சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு, அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்ட இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

அப்போது உச்ச நீதிமன்றம், ''இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி எந்த அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டது? சேலம் - சென்னை எட்டுவழிச் சாலைக்கு விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா? சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா?

இது பாரத் மாலா திட்டத்தின் கீழ் உள்ள திட்டமா? அல்லது முற்றிலும் புதிய திட்டமா? சுற்றுச்சூழல் அனுமதி பெற எத்தனை காலம் பிடிக்கும்? இந்தத் திட்டம் ஏற்கெனவே எந்த நிலையில் தடைப்பட்டுள்ளது? நிலம் கையகப்படுத்துவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி தேவையா?

திட்டம் குறித்து விவசாயிகளிடமும், நிபுணர்களிடமும் கருத்துக் கேட்கப்பட்டதா? திட்டம் குறித்த தேவைகளும் சாத்தியக்கூறுகளும் என்ன? சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி இல்லை என்பதற்காகவே திட்டம் தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய முடியுமா? என்பதற்கான விடையை நாம் கண்டறிய வேண்டும்'' எனத் தெரிவித்தது.

இதற்குப் பதிலளித்து வாதிட்ட எதிர்மனுதாரர் தரப்பு, ''சேலம்-சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு நிலங்கள் கையகப்படுத்தியபின், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்றால் நிலம் வழங்கியோரின் நிலை என்னவாகும்?'' என்ற கேள்வியை எழுப்பியது

அதேவேளையில் மத்திய அரசுத் தரப்பில், ''சென்னை- மதுரை இடையே இருப்பதுபோன்ற சாலை திட்டம், சென்னை-சேலம் இடையே இல்லை. எனவேதான், சென்னை- சேலத்தை நேரடியாக இணைக்கும் எட்டுவழிச் சாலை திட்டம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை- மதுரை இடையிலான சாலையில் வாகன நெரிசல் குறையும். காற்று மாசு குறையும். எரிபொருள் மிச்சமாகும்.

2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, நிலத்தைக் கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை. சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு, நிலம் முழுவதும் கையகப்படுத்த வேண்டும் என்ற முன் நிபந்தனை அவசியமில்லை. மாறாக நிலம் கையகப்படுத்துவதன் நிலை குறித்த நம்பத்தகுந்த ஆவணங்களே போதுமானவை.

மேலும், இதுபோன்ற திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்படும் நிலத்தைத் திட்டச் செயல்பாட்டுக்காகச் செப்பனிடுவது, கட்டுமானப் பணி ஆகியவை தொடங்கும் முன்புதான் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு , மாற்றம் உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டே இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்குரிய வல்லுநர்கள் ஆலோசனை பெற்றே தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, இவை அனைத்தும் முடிக்கப்பட்டதால் இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன் அனுமதி தேவையில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்த கொண்ட நீதிபதிகள், வழக்கின் மீதான தீர்ப்பை கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று வழங்கியது.

எட்டுவழிச் சாலை திட்டம் உரிய நடைமுறைகளுடன் தொடரலாம். எட்டுவழிச் சாலை தொடர்பாக நிலம் கையகப்படுத்தியது தவறு என்கிற சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில் வெளியான முன் தகவலில், “முதல் கட்டமாக சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் நிலத்தைக் கையகப்படுத்தியது தவறு. அரசு கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடம் வருவாய்த்துறை வழிகாட்டுதல்களுடன் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்கிற உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும்.

எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தொடரலாம். எட்டு வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த உரிய வழிமுறைகளையும், நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மத்திய அரசின் கோரிக்கை பகுதி அளவில் ஏற்பு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் என்னென்ன விதிமுறைகள் என்பது குறித்த தீர்ப்பின் சாரம் பின்னர் முழுமையாக வெளிவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE