விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு; பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை: கடைகள் மூடல்

விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை தொடங்கியது. பேருந்துகள், ஆட்டோக்கள் முழுமையாக இயங்கவில்லை. கடைகளும் மூடப்பட்டிருந்தன.

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியள்ள 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் இன்று (டிச. 08) பாரத் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது.

புதுவையில் ஆளும் கட்சியான காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கம்யூனிஸ்ட் எம்-எல், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி, எஸ்யூசிஐ கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தன. அதோடு, ஏஐடியூசி, சிஐடியூ, ஐஎன்டியூசி, தொமுச, எல்எல்எப், எம்எல்எப், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, அரசு ஊழியர் சம்மேளனம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகியவையும் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதனால் புதுவையில் இன்று அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. டெம்போ, ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. புதுவை புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

நகரின் முக்கிய வியாபாரப் பகுதியான நேரு வீதியில் முழு அடைப்பு

தமிழகத்திலிருந்து புதுவைக்கு இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் காலையில் வந்தன. பின்னர், மாநில எல்லையான கோரிமேடு, கன்னியகோவில், மதகடிபட்டு, காலாபட்டு பகுதியில் பயணிகளை இறக்கிவிட்டுச் சென்றனர். புதுவை வழியாகச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

மார்க்கெட், கடைகள் மூடல்

புதுவையின் பிரதான சாலைகளான மறைமலை அடிகள் சாலை, அண்ணாசாலை, நேருவீதி, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, காந்தி வீதி, லெனின் வீதி, கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட சாலைகளில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டு இருந்தன. பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, சின்னமணிக்கூண்டு மார்க்கெட்டுகளும் மூடப்பட்டு இருந்தன. டீக்கடை, உணவு விடுதிகளும் மூடியிருந்தன.

வழக்கமாக நெரிசலாகக் காணப்படும் அண்ணாசாலையில் மூடியுள்ள கடைகள்

தொழிற்சாலைகள் மூடல், திரையரங்குகளில் பகல் காட்சி ரத்து

சேதராப்பட்டு, கரசூர், தட்டாஞ்சாவடி, திருபுவனை தொழிற்பேட்டைகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டு இருந்தன. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கினாலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்

பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்தது. இதேநிலை புறநகர், கிராமப் புறங்களிலும் நீடித்தது. பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE