டிச. 8-ம் தேதி 'பாரத் பந்த்' முழு அடைப்பை வெற்றியடையச் செய்வோம் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் இன்று (டிச. 06) வெளியிட்ட கூட்டறிக்கை:
"அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் (AIKSCC) செயலாக்கத்தில் பத்தாவது நாளாக, இந்திய விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டம் டெல்லிப் புறநகரின் சாலைகளில் விஸ்வரூபம் எடுத்து நடந்து கொண்டிருக்கிறது; அகில உலகக் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எங்கு பார்த்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிலடங்காத் தலைகள், எத்திசை நோக்கினும் விவசாயிகளின் எழுச்சிமிகு அணி வகுப்புகள், எல்லா இடங்களிலும் டிராக்டர்கள் எனத் தலைநகர் டெல்லி அறவழிப் போராட்டத்தின் மூலமாகவே புதுமையான போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
இதுவரை விவசாயிகளுடன் மத்திய பாஜக அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஆக்கப்பூர்வமாக எதையும் சொல்ல மறுக்கிறது என்ற கோபம், விவசாயிகளிடம் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது. அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலேயே விவசாயிகளின் பிரதிநிதிகள் 25 நிமிடம் அமைதி காத்து, உள்ளிருப்புப் போராட்டத்தை அறவழியில் நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என்றும், அதற்கு அரசு 'ஆம்' என்று ஏற்றுக் கொள்ளப் போகிறதா, 'இல்லை' என்று நிராகரிக்கப் போகிறதா எனப் பதாகைகளை ஏந்தியது, அரசுகளுடனான பேச்சுவார்த்தைகளில் இதுவரை நடைபெற்றிராத அரிய வகை ஜனநாயக ரீதியிலான போராட்டமாகும்!
» புதுச்சேரியில் புதிதாக 35 பேருக்கு கரோனா தொற்று; உயிரிழப்பு இல்லை: 97.30 சதவீதம் பேர் குணமடைந்தனர்
» தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கரோனா தொற்று உறுதி
ஆனாலும், மாநில உரிமைகளைப் பறிக்கும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் மானியம் ஆகியவற்றைப் பறிக்கும், நெல்கொள்முதல் நிலையங்களை மூட வைக்கும், ஏன், இந்திய உணவுப் பாதுகாப்பின் உயிர் மூச்சைப் பறித்து வேளாண்மையை அடியோடு அழிக்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ, அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றோ, மத்திய பாஜக அரசு கொள்கையளவில் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.
கடும் குளிரிலும், ஆறு மாதத்திற்குக் கூட உணவுகளைத் தயார் செய்து கொண்டும், தங்களின் வாழ்வுக்குத் துணை நிற்கும் உபகரணமான டிராக்டர்களுடன் தினமும் விவசாயிகள் மனத் திடத்துடன் டெல்லியில் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.
ஆனாலும் மத்திய பாஜக அரசு கோரிக்கைகளுக்கு, 'பேச்சுவார்த்தை' என்று இழுத்தடிக்கிறதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில், அவையில் நடைபெறும் வாக்கெடுப்பு முறைக்கே விரோதமாகச் சட்டங்களைக் கொண்டு வந்து விட்டு, 'விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குள் கலந்து ஆலோசிக்க வேண்டும்' என்று இன்னமும் மத்திய பாஜக அரசு சொல்லி இழுத்துக் கொண்டிருப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி, கரோனா நோய்த் தொற்று இருக்கின்ற இந்த நேரத்தில் அவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது.
ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் எல்லாம் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகளின் பிரதிநிதிகள் டெல்லி சென்று போராட்டத்திற்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.
நான்கு முறை அரசுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தும், இதுவரை மத்திய பாஜக அரசு எவ்வித நம்பிக்கைக்குரிய வார்த்தைகளையும் விவசாயிகளுக்குத் தெரிவிக்கவில்லை. பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அதன் தலைமையில் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் நடத்தியும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து, தங்கள் கோபத்தைத் தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையிலேயே மவுன விரதமிருந்து, டிசம்பர் 8-ம் தேதி 'பாரத் பந்த்' அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
விவசாயிகள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம், விவசாயத் தொழிலாளர்கள் சமூகக் கட்டமைப்பின் அசைக்கமுடியாத அஸ்திவாரம். இவர்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து, நம்பிக்கையூட்டி, உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் தளபதிகள்!
ஆகவே அவர்கள் 'மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள்' என்று முன்வைக்கும் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று, தொடர்ந்து இந்தச் சட்டங்களை எதிர்த்து வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களாகிய நாங்கள் அனைவரும் உறுதியாகக் கருதுகிறோம்.
மூன்று சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற்று, தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் சார்பாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, மத்திய அரசின் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவளித்து, டிசம்பர் 8-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மனமார்ந்த ஆதரவு அளிக்கிறோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல், அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்!
ஆகவே, தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, 'பாரத் பந்த்'தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago