விவசாயிகள் வருமானத்தை பெருக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடியை நம்பி வாக்களித்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று ‘ஏழைத் தாயின் மகன்’ என்பதை பிரதமர் நரேந்திர மோடி நிரூபித்தாக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் உரை:
டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து, திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார்.
கூட்டத்தில் திமுக தலைவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
» தமிழ் கல்வெட்டுகளுக்கான இயக்குநரகத்தை சென்னையில் அமைத்திட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
“இன்று திமுக சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராடும் வகையில், அதற்கு வலுசேர்க்கும் வகையில், அவர்களது நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்கு வாழ்த்து சொல்லும் வகையில், இந்தப் போராட்டத்தை நேற்றைய முன் தினம் அறிவித்து இன்று நாம் தமிழகம் முழுவதும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கூட்டம் அதிகளவில் வந்து விடக்கூடாது என்கிற ஓரவஞ்சனையோடு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதிலும் முதல்வருடைய சொந்த மாவட்டமாக இருக்கின்ற காரணத்தால், இந்தப் போராட்டத்தை எப்படியாவது தோற்கடித்து விடவேண்டும் என்று திட்டமிட்டு அந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்தப் போராட்டம் என்பது ஏதோ அரசியல் நோக்கத்திற்காக அல்ல, எங்களுடைய சொந்த பிரச்சினைக்காக அல்ல, கட்சியின் வளர்ச்சிக்காக நடத்துகிற போராட்டமல்ல. இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக விளங்கிக் கொண்டிருக்கும் விவசாய பெருங்குடி மக்களுக்காக நாம் நடத்துகிற போராட்டம் என்பதை ஆளும்கட்சிக்காரர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆளும்கட்சியின் பொறுப்பில் இருக்கக்கூடிய முதல்வரும் இதனை அறிந்து கொண்டாக வேண்டும்.
ஆளும்கட்சி சொல்வதையெல்லாம் அப்படியே கை கட்டி கேட்டுக்கொண்டிருக்கும் காவல்துறை, இது எதற்காக நடைபெறுகிற போராட்டம் என்பதை தயவுசெய்து நினைத்து பார்த்திட வேண்டும். விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராடக்கூடிய விவசாயிகளை மத்திய அரசே அழைத்துப் பேசி ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து, வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கும் உழவர்களைக் காப்போம்.
உழவை மீட்போம், மண்ணைக் காப்போம், மக்களைக் காப்போம் என்ற உறுதியோடு போராடிக்கொண்டிருக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்காக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்தை எடுத்துச்சொல்லி, இந்தப் போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று நாம் சேலத்தில் கருப்புக் கொடியோடு இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
சேலத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டத் தலைநகரங்களில் முக்கிய தலைவர்கள், அதேபோல் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இருக்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள், நம்முடைய சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியினுடைய முன்னோடிகள் பங்கேற்கக் கூடிய வகையில் ஆங்காங்கே திமுக சார்பில் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் எழுப்பும் குரலானது டெல்லிப் பட்டணத்தில் போராடிக் கொண்டு இருக்கக் கூடிய விவசாயிகளின் காதில் ஒலித்தாக வேண்டும். மண்ணையும், மக்களையும் காக்கும் பணியில் என்றைக்கும் திமுக துணை நிற்கும் என்பதற்கு அடையாளம் தான் இந்த ஆர்ப்பாட்டம் - இந்தப் போராட்டம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அனைத்துச் சாலைகளும் ரோமானிய சாம்ராஜ்யத்தை நோக்கி என்று சொல்வதைப்போல, இன்று அனைத்துச் சாலைகளும் டெல்லியை நோக்கி என்கிற அளவுக்கு தலைநகர் டெல்லியில் விவசாயிகள் திரண்டுக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் முதலில் விவசாயிகள் புறப்பட்டார்கள். அரியானா விவசாயிகளும் உத்தரப் பிரதேச விவசாயிகளும் அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.
டெல்லிக்குள் இவர்களை நுழைய விடக்கூடாது என்று அரியானா அரசு தடுத்துள்ளது. அந்தத் தடையை மீறி, தலைநகர் டெல்லிக்கு விவசாயிகள் வந்து, போராட்டத்தில் பங்கேற்றார்கள். லட்சக்கணக்கான விவசாயப் பெருங்குடி மக்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் டிராக்டர்கள் அங்கு வருகின்றன என்று செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது.
சுதந்திர இந்தியாவில் இந்தளவுக்கு விவசாய எழுச்சி இதற்கு முன் வந்ததில்லை என்று சொல்லத் தக்க எழுச்சியோடு டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை இந்த மேடையில் நின்று கொண்டு ‘சல்யூட்’ என்று அடிக்கக்கூடிய வகையில் என்னுடைய பாராட்டைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதில் பங்கெடுத்து இருந்தாலும் - அதிகமான அளவு பஞ்சாப் விவசாயிகள் அதில் பங்கெடுத்துள்ளார்கள்.
விவசாயிகளை மதிக்காமல், விவசாயத்தைப் பற்றி கவலைப்படாமல், ஜனநாயகத்தை மதிக்காமல், நாடாளுமன்ற நெறிமுறைகளை கிஞ்சித்தும் சிந்தித்துப் பார்க்காமல், மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியது.
இந்தச் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டபோதே, மத்திய அமைச்சராக இருந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போதே மத்திய அரசு விழித்துக் கொண்டு இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. அப்போதாவது மத்திய அரசு பின்வாங்கியிருக்க வேண்டும்.
வடக்கே பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களும் தெற்கே நாமும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த போதாவது மத்திய அரசு பரிசீலனை செய்திருக்க வேண்டும். ஆனால் அவசர அவசரமாக கரோனா காலத்தை பயன்படுத்தி நிறைவேற்றினார்கள். மூன்று மாத காலம் மத்திய அரசாங்கத்துக்கு அவகாசம் கொடுத்த விவசாயிகள், இன்றைக்கு பாஜக அரசை நோக்கி படையெடுத்து விட்டார்கள். போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
'நான் ஏழைத்தாயின் மகன்' என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடிய பிரதமர் மோடி ஆட்சியில், ஏழைகள், ஏழைத்தாயின் பிள்ளைகள் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றால், இது, இந்த நாட்டின் பிரதமருக்கு தெரியாது. இது அவருக்கு ஏற்பட்ட அவமானம் அல்லவா?
விவசாயிகள் வீதியில் படுத்திருக்கும் நாளன்று வானொலியில் பேசிய பிரதமர் மோடி, 'வேளாண் சட்டத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன' என்றார். ஏராளமான நன்மைகள் உள்ளன என்று சொன்னாரே தவிர - அதில் என்ன நன்மைகள் இருக்கின்றன என்பதைச் சொல்லவில்லை, இருந்தால் தானே சொல்வார்.
இன்று விவசாயிகள் வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும், நம்மைப் போன்ற அரசியல் கட்சிகள் எழுப்பும் முழக்கமாக இருந்தாலும், அதுதான் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என்பதாகும்.
பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று சட்டத்திலும் அந்த வார்த்தைகள் இல்லை. இன்றைக்கு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் மிகப் பெரிய போராட்டத்தை விவசாயிகள் நடத்துகிறார்கள் என்றதும், ஆதார விலை விவசாயிக்கு கிடைக்கும் என்றும் பிரதமர் மோடி சொல்லி இருக்கிறார். இன்றைக்கு வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லும் பிரதமர், அந்த உத்தரவாதத்தை ஏன் சட்டமாக கொண்டு வரவில்லை? இதுதான் இந்தக் கூட்டத்தின் வாயிலாக நாம் எழுப்பும் கேள்வி.
சட்டத்தில் இருந்தாலே அது நடைமுறையில் வருவது சிரமம். பிரதமரின் வாக்குறுதியை நம்பி யாராவது குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவார்களா? ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் பிரதமர் என்ன சொன்னார்? விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்றார். விவசாயிக்கு இருந்த வருமானமும் போய்விட்டது. அதுதான் உண்மை.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் தற்கொலை தடுக்கப்படும் என்றார். கடந்த ஆண்டு மட்டும் 10,281 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் தற்கொலை செய்வது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துவோம் என்றார். அதனை அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மோடியின் வாக்குறுதியை நம்பி, விவசாயிகள் வாக்களித்தார்கள். அப்படி வாக்களித்த விவசாயிகளுக்கு மோடி அளித்த பரிசுதான் இந்த விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்கள்.
அதனால் தான் விவசாயிகளைக் காப்பாற்று, விவசாயம் காப்பாற்று- என்று விவசாயிகளோடு சேர்ந்து நாமும் முழக்கமிடுகிறோம், வாழும் தெய்வங்களாம் விவசாயிகளை வேதனைப்பட வைக்கலாமா? மக்களைக் காக்கும் விவசாயிகளை மரணக்குழிக்குள் தள்ளலாமா? - என்ற கேள்வியை எழுப்புகிறோம்.
இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்கிறோம். இந்தியா விவசாய நாடு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் விவசாயிகளையும் கிராமங்களையும் சிதைக்கும் சீரழிக்கும் திட்டங்கள், சட்டங்களைத் தான் மத்திய அரசு நிறைவேற்றுகிறது.
இதனை இப்படியே அனுமதிக்க முடியாது. முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். நேற்று கரோனா குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காணொலி வாயிலாகக் கூட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களை எல்லாம் அழைத்து இந்தக் கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய நம்முடைய நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவரும் கழகப் பொருளாளருமான டி.ஆர்.பாலு அவர்கள் இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் பிரச்சினை குறித்து பிரதமருடைய கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன் என்று ஒரு வார்த்தையை சொல்லி இருக்கிறார். அதை பேச விடாமல் தடுத்து இருக்கிறார்கள். துணிச்சலோடு தைரியத்தோடு நம்முடைய பாலு அவர்களும், மாநிலங்களவை சார்பில் திருச்சி சிவா அவர்களும் பேசியிருக்கிறார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுகிற வரையில் போராட்டம் தொடர வேண்டும். போராடும் விவசாயிகளை உடனடியாக அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டி, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். ஜனநாயகத்துக்கு கட்டுப்பட்ட ஆட்சி இது என்பதை பாஜக நிரூபிக்க வேண்டும். ஏழைத் தாயின் மகன் என்பதை பிரதமர் மோடி மெய்ப்பித்தாக வேண்டும். அதுவரை இந்தப் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும். இந்தப் போராட்டம் தொடரும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago