புதிய துறை உருவாக்கப்பட்டு செம்மொழித் தகுதி பெற்றுள்ள மொழிகளை துறைகளாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது, தனி ஆய்வுத்துறை இல்லாத தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு இது சாதகம் ஏற்படக் கூடும், ஆனால், தனி நிறுவனமாக இயங்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதிலொரு துறையாக இணைக்கப்பட்டால் பாதகமே ஏற்படுமென கி.வீரமணி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைக்கப்பெற்ற நிலையில், அரசியல் நோக்கோடு தொடர்ந்து சிறுமைப்படுத்தப்பட்டு, கடைசியாக ஒரு மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையாகக் குறுக்கும் மத்திய பிஜெபி ஆட்சியின் முடிவு கண்டிக்கத்தக்கது, தமிழ்நாடு இதனை ஒருபோதும் ஏற்காது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும்.
2005-ல் அரும்பாடுபட்டு - மத்திய அரசில் திமுக இடம்பெற்ற வாய்ப்பை நன்கு பயன்படுத்தி, கருணாநிதி, தமிழினமும், தமிழ் அறிஞர்களும் நீண்ட காலமாகக் கண்ட கனவான தமிழை செம்மொழியாக அறிவிக்கும் நல்வாய்ப்பைப் பெற்று, அதன் வளர்ச்சிக்காக மைசூரிலிருந்த செம்மொழி நிறுவனத்தை தமிழ்நாட்டிற்கே அந்நிறுவனம் கொண்டு வரப்பட்டு, பரந்து விரிந்த ஆலமரம்போல உலகெங்கும் தமிழ் பரவிட, தமிழ் இலக்கிய ஆய்வும், வளமும் பெருகிடத் தேவையான அத்துணை முயற்சிகளையும் மேற்கொண்டு வரலாறு படைத்தார்.
ஜெயலலிதா தலைமையிலான அரசின் விபரீதம், அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சி, அதன் வளர்ச்சி வேரில் வெந்நீர் ஊற்றுவதுபோல அலட்சியம் காட்டியது - காரணம், தமிழ் மொழி வளர்ச்சிக் கண்ணோட்டமின்றி அரசியல் கண்ணோட்டத்தோடு நடந்ததால், அது ஊட்டச்சத்து மறுக்கப்பட்ட குழந்தைபோல ஆகியது.
அதற்கு அடுத்து மத்தியில் ஏற்பட்ட முந்தைய காங்கிரஸ் அரசும், அதற்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியும் அந்த நிறுவனத்திற்குரிய வகையில் தனித் தன்மை காக்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்காமல், நாளும் அதன் வளர்ச்சி குன்றும் வகையில், தமிழே தெரியாத மத்திய அரசு அதிகாரியைப் போட்டும், அவ்வை நடராசன் போன்ற தமிழறிஞர்களின் மனம் வெந்து வெளியேறும் சூழ்நிலை அமைந்து, பிறகு அதனை ஒரு மத்திய பல்கலைக் கழகத்தின் துறை போல் இணைக்கப்பட்டு ஆக்கும் முயற்சியில் இறங்கினர்.
செம்மொழி தமிழின் தனித்தன்மை பறிமுதல் அதன் பணியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஏதோ தினக்கூலிகள்போல் அமைந்த நிலைதான், மிச்சமான கொச்சைப்படுத்தப்பட்ட நிலை - அந்த செம்மொழி நிறுவனத்திற்கு பிறகு ஏதோ ஒரு வகையில் பாஜக ஆதரவாளர் ஒருவர் இயக்குநராக - கூடுதல் தகுதியுள்ளோர் போட்டி போட்டும், நியமிக்கப்பட்டு, அது எதற்காக அரும்பாடுபட்டு கருணாநிதியால் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதோ, அதன் நோக்கம் தோற்கடிக்கப்பட்டு முடக்கப்பட்ட ஒரு அமைப்பாகியுள்ள நிலையில், மேலும் ஒரு சம்மட்டி அடி அதன்மீது விழுவது போன்ற ஒரு தந்திர ஏற்பாடு பற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் அறிஞர்களும், தமிழ் உணர்வாளர்களும், உண்மை திராவிடர் இயக்கத்தாரும் இதற்கு விரைந்து தமது எதிர்ப்பைக் காட்டி, அதன் தனித்துவ அடையாளத்தையே ‘‘பறிமுதல்’’ செய்யும் மத்திய பாஜக அரசின் செம்மொழி தமிழ் விரோதப் போக்கை மக்கள் மன்றத்துக்கு அம்பலப்படுத்த முன்வரவேண்டும்.
தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு,
தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் முக்கிய கவனஞ்செலுத்தி, நம் உரிமை காக்க ஆயத்தமாகவேண்டும். அந்த சூழ்ச்சிமிகுந்த ஆபத்தான மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதான். (இது நேற்று வெளியாகி உள்ளது).
1. மைசூரில் உள்ள இந்திய மொழிகள் நிறுவனத்தை ஒரு பல்கலைக் கழகமாக மேம்படுத்துகிறது மத்திய அரசு. மத்திய பல்கலைக் கழகமாக மாற்றிய பிறகு, ‘பாரதீய பாஷா விஷ்வ வித்யாலாயா’’ (பி.பி.வி) எனப் பெயரிடப்பட உள்ளதாம்.
செம்மொழித் தகுதி பெற்றுள்ள மொழிகளை இதன் துறைகளாக (Departments)இணைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெற்றுள்ள போதிலும், தமிழைப் போல அவற்றிற்குத் தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படாததால், அவற்றுக்கு இதனால் சாதகம் ஏற்படக் கூடும்.
ஆனால், தனி நிறுவனமாக இயங்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் (13 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் தனி ஒருவர் பொறுப்பேற்றார்) இருந்த நிலையில் மற்ற மொழிகளுடன் தமிழும் இணைக்கப்பட்டால், செம்மொழி தமிழாய்வு நிறுவனமும் அதில் இணைக்கப்பட்டு, அதன் தனித்தன்மை புறக்கணிக்கப்பட்டு, ‘‘கரைந்து’’ போகும் நிலை ஏற்படக்கூடும் - (அது மிகவும் தந்திரமானது) ‘பத்தோடு பதினொன்று அத்தோடு அது ஒன்றாக’ ஆக்கப்படும் பேரபாயம் கருக்கொண்டுள்ளது.
இதுபற்றி பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய 11 அறிஞர்கள் கொண்ட குழுவை மத்திய அரசின் - மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளதாம். இந்த முடிவை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - ஏற்கவே ஏற்காது.
என்.கோபால்சாமி தலைமையில் குழு
இக்குழுவுக்குத் தலைவராக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தலைமையேற்றுள்ளார். இவர் சமஸ்கிருத்ததை எப்படி பரப்புவது என்பதற்கான குழுவின் தலைவராக இருந்து பரிந்துரைத்தவர். இவருக்கும், தமிழாய்வுக்கும் என்ன தொடர்பு என்பது புரியவில்லை. மொழிகளுக்கான வல்லுநரும் அல்லர். புதிய கல்விக் கொள்கை என்பதிலும் இவரது பங்களிப்பு இருந்ததை எவரும் மறுக்க முடியாது.
இக்குழுவின் இதர 10 உறுப்பினர்கள் பெயர் வெளிவரவில்லை - தேடவேண்டும்.
என்.கோபால்சாமி கூறுகிறார், “‘தற்போது இந்திய மொழிகளை மொழி பெயர்க்கும் வல்லுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இது கவனிக்கப்படாமலேயே உள்ளது. இதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சி.அய்.அய்.எல். நிறுவனம் ஒரு மத்திய பல்கலைக் கழகமாக மேம்படுத்தப்பட உள்ளது”’’ என்று கூறியுள்ளார்.
தேன் தடவப்பட்ட விஷ உருண்டை, எச்சரிக்கை
மத்திய பல்கலைக் கழகமாக மேம்படுத்துவது வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம் செம்மொழிகளை அதன் துறைகளாக கொண்டு வரும் திட்டத்தால், தமிழ் உள்ளிட்ட மொழிகளின் சுதந்திரமான வளரச்சிக்கு இது தடையாக அமைந்துவிடும். இதன்மீதான நிலைப்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் தெளிவுபடுத்தவேண்டும் என்று சி.அய்.அய்.எல். (central institute of indian languages) அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராமசாமி கூறியுள்ள கருத்து மிகவும் ஆராயப்படவேண்டியது.
எனவே, இது ஒரு தேன் தடவப்பட்ட விஷ உருண்டையாகும். எச்சரிக்கை, எச்சரிக்கை”.
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago