மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016, டிச. 5-ம் தேதி காலமானார். அவரது 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர், ஜெயலலிதா நினைவுதின உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழி
"தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக்கும், ஜெயலலிதாவின் தியாக வாழ்வையும், அயரா உழைப்பையும் மனதில்கொண்டு, அவர் காட்டிய வழியில், அதிமுகவைக் கட்டிக் காத்திட உறுதி ஏற்கிறோம்.
ஜெயலலிதா தமது வாழ்வின் மிக அற்புதமான 34 ஆண்டுகளை, அதிமுகவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த, தியாகச் செம்மல். அவர், அதிமுகவுக்கு ஆற்றிய அரும்பணிகளை, எந்நாளும் நினைவில் கொண்டு, கடமை உணர்வோடு பணியாற்றிட, உளமார உறுதி ஏற்கிறோம்.
'அதிமுக என்பது ஆயிரம் காலத்துப் பயிர்; இது, தமிழ் நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம்' என்று உரைத்த ஜெயலலிதாவின் முழக்கத்தின்படி, கட்சியின் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம், உழைப்போம், என்று உறுதி ஏற்கிறோம்.
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் ஏற்றம் பெற்று, அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும் மாநிலமாகத் திகழ்வதை, தமது ஆட்சிக் காலத்தில் உறுதி செய்தார், ஜெயலலிதா. அவரின் உழைப்பால் உருவான அதிமுக அரசு, ஜெயலலிதா காட்டிய வழியில் நிறைவேற்றி வரும், எண்ணற்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அனைவருக்கும் சென்றடைவதை, உறுதி செய்வோம் என்று, உறுதி ஏற்கிறோம்.
தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், ஓடோடிச் சென்று உதவும் உற்ற துணையாகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் திகழ்கின்ற வகையில், அதிமுகவை உருவாக்கிய சிந்தனை சிற்பி, ஜெயலலிதா. அவர் வகுத்துத் தந்த அரசியல் பாதையில், அதிமுக வெற்றி நடைபோட, இயன்ற அனைத்தையும் செய்வோம், செய்வோம் என்று உறுதி ஏற்கிறோம்.
ஜனநாயகத்தின் பெயரில், ஒரு குடும்ப ஆட்சி நிலைபெற்றுவிட்டால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது என்பதை விளக்கிக் கூறிய அரசியல் ஆசான், ஜெயலலிதா. அவர் காட்டிய உண்மையான ஜனநாயகம் வேரூன்றவும், ஒரு குடும்பத்தின் ஏகபோக அரசியலும், ஆட்சியும் ஏற்படாத வண்ணம், மக்களாட்சியின் மாண்புகளைக் காப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.
இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட நேரங்களில், சுற்றிச் சுழன்று, அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா. அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கைப் பேரிடர் நேரங்களில், தமிழ்நாட்டு மக்களுக்காக அற்புதமாய் பணியாற்றும் அதிமுக அரசின் சிறப்பான பணிகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, உறுதி ஏற்கிறோம்.
ஏழை, எளியோருக்கு சமூகப் பாதுகாப்பு, பெண்களுக்கும், முதியவர்களுக்கும் முன்னுரிமை, கிராமப்புற மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள் என்று, ஜெயலலிதா, எம்ஜிஆர் வழியில் ஆட்சி நடத்தினார். நம் இருபெரும் தலைவர்களின் எண்ணப்படி, நடைபெறும் அதிமுக அரசின் சாதனைகள் தொடர, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.
'எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்தார் ஜெயலலிதா. அவரின் சபதத்தை நிறைவேற்றும் வகையில், 2021-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஜெயலலிதாவின் கடமை தவறாத பிள்ளைகளாக ஒன்றுபட்டு உழைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக, அதிமுகவை மகத்தான வெற்றிபெறச் செய்வோம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்.
'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்று, அதிமுகவின் வீர அணிவகுப்புகளைக் கண்டு, வெற்றி முழக்கம் செய்தவர், ஜெயலலிதா. நமது ஒற்றுமையே, நமது வெற்றிக்கு அடிப்படை. நமது முயற்சியே அதிமுகவின் வெற்றி. அதிமுகவின் வெற்றியே, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நாம் செலுத்தும் காணிக்கை என்பதை உணர்ந்து, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்".
இவ்வாறு அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
25 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago