புரெவி புயலால் பெய்துவரும் கனமழை காரணமாகத் தமிழகம் முழுவதும் 25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் காரணமாகக் காவிரி டெல்டா பகுதிகள் மட்டுமல்லாமல் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், சென்னை உள்படத் தமிழகம் முழுவதும் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் நேற்று காலை 8.30 மணிக்குத் தொடங்கி இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 36 செ.மீ. மழை பெய்துள்ளது.
11.30 மணி வரையிலான அடுத்த மூன்று மணி நேரத்தில் மேலும் 3 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துவிட்டது. இதனால் கொள்ளிடம் ஒன்றியப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வயல், வரப்பு, வாய்க்கால், குளம், குட்டைகள், சாலைகள் எல்லாம் தண்ணீரில் மூழ்கி ஒரே மட்டமாகத் தண்ணீராகக் காணப்படுகின்றன.
இந்த கனமழை காரணமாக காவிரி டெல்டா உட்பட தமிழகம் முழுவதிலும் சுமார் 25 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் நீரால் சூழப்பட்டு அழுகத் தொடங்கியுள்ளதாகத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் அவர் மேலும் கூறியதாவது:
"தமிழ்நாட்டில் புரெவி புயல் தாக்குதலால் கடலோர மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரை மூன்று நாட்களாக இடைவிடாது மழை பெய்து, பெரும் சேதத்தை விளைவித்து வருகிறது.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் உட்பட, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்படத் தமிழகம் முழுவதிலும் 25 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடிப் பயிர்கள் முழுமையும் மழை நீரால் சூழப்பட்டு அழுகத் தொடங்கியுள்ளன.
கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர் வகைகள் சாய்ந்து அழியத் தொடங்கிவிட்டன. கரோனா தாக்குதலால் பல இன்னல்களுக்கு ஆட்பட்ட விவசாயிகள் தற்போது புரெவி புயல் தாக்குதலால் பேரழிவைச் சந்தித்து வருகின்றனர்.
இதனால் உடனடியாகத் தமிழக அரசு உயர்மட்டக் குழுவை அனுப்பி வைத்து, பாதிப்பு குறித்து ஆய்வு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடாக வழங்க வேண்டும். காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை, உரிய காலத்தில் பெற்றுத் தருவதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களின் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க வேண்டும்.
இடி, மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்குத் தலா 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு கூரை வீடு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரமும், ஓடு வேய்ந்த வீடு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்குவதோடு, நிரந்தர கான்கிரீட் வீடுகள் கட்டித் தருவதற்கு உடனடி அனுமதி வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
பேரிடரில் இருந்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசாங்கம் 10 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக, முதற்கட்டமாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago