தேர்தலை மையமாக வைத்து ஸ்டாலின் எங்களை வசைபாடாத நாளே கிடையாது: மதுரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து எங்களை வசைபாடாத நாளே கிடையாது, அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். நாங்கள், மக்களை நேரடியாகச் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் எவ்வாறு நிலைமை இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிறோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து முதல்வர் பழனிசாமி இன்று பேசியதாவது:

“இன்றைக்கு மதுரை மாநகர மக்களின் நீண்டகாலக் கனவை அரசு நனவாக்கியுள்ளது. மக்கள்தொகை பெருகி வருகின்ற இந்தச் சூழ்நிலையில், மதுரை மாநகர மக்களுக்குத் தங்கு தடையில்லாமல் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் தொடர்ந்து அரசுக்கு வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழக அரசால், சுமார் ரூபாய் 1,296 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்குக் குடிநீர் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம். அரசு அறிவிக்கும் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி, மக்கள் மனதில் நிலை பெற்றிருக்கின்றோம். தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2011ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது, தமிழகம் முழுவதும் மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீரின் அளவு 4,900 MLD ஆகும்.

அவர் இருந்தபோதும், அவர் மறைவிற்குப் பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இன்றைய தினம் 7,600 MLD குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகிறோம். இந்த ஒன்றரை ஆண்டுகளில் கூடுதலாக சுமார் 2,700 MLD தண்ணீர் தடையில்லாமல் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய துணைக் கண்டத்தில், குறுகிய காலத்தில் இந்த அளவு குடிநீர் கொடுத்த வரலாறு கிடையாது. அந்த வரலாற்றைப் படைத்ததும் தமிழக அரசுதான்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல 76 கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் முன்னுரிமை வழங்கி படிப்படியாக நிறைவேற்றுகின்றபோது, தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையே இல்லையென்கிற நிலையை உருவாக்குகின்ற அரசாக இந்த அரசு திகழும். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மூலம் வழங்க, மத்திய, மாநில அரசுகள் இணைந்து சுமார் 40 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டு, ரூபாய் 3,600 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இதுவரை 7 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பல ஆண்டுகாலமாக குடிநீருக்காகப் போராடுகின்ற நிலையை மாற்றி, தமிழகம் முழுவதும் நிலையான, பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டுமென்ற லட்சியத்தை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவேற்றப்படும். இத்திட்டத்தின் வாயிலாக சுமார், கூடுதலாக, 1 லட்சத்து 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கி, மதுரையிலுள்ள 100 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்கக்கூடிய நிலையை அரசு உருவாக்கி வருகிறது. ஏற்கெனவே பல்வேறு திட்டங்களின் வாயிலாக மதுரை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால், இடவசதி போதாமல் உள்ளது என்ற அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, அரசு கூடுதல் கட்டிடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வழங்கி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சீர்மிகு திட்டத்தின் கீழ், மதுரை மாநகரத்தில் ரூபாய் 974.86 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாட்டுத்தாவணி பகுதியில் ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் பழச்சந்தை, பெரியார் பேருந்து நிலையத்தை ரூபாய் 167 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், புராதான சின்னங்கள் மற்றும் தெருவிளக்குகளை ரூபாய் 73 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல், மீனாட்சி அம்மன் கோயில் அருகில் சுமார் ரூபாய் 42 கோடி மதிப்பீட்டில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைத்தல், மதுரை மாநகருக்கு அழகு சேர்க்கும் விதமாக அதிகமான பூங்காக்கள் என அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.

விளக்குத் தூண் மற்றும் பத்துத் தூண் பகுதிகளைப் புனரமைத்தல், திருமலை நாயக்கர் மஹாலைச் சுற்றியுள்ள பகுதிகளை அழகுபடுத்துதல், சுற்றுலாப் பயணிகளுக்கான தகவல் மையம் அமைத்தல், நான்கு மாசி வீதிகளில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சிறப்புச் சாலை அமைத்தல், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வைகை வடகரைப் பகுதிகளில் ரூபாய் 276 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடை அமைத்தல், தமுக்கம் மைதானத்தில் சுமார் ரூபாய் 47.7 கோடி மதிப்பீட்டில் கலாச்சார மையம் கட்டுதல், பொதுப்பணித் துறை மூலம் சுமார் ரூபாய் 84 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் மற்றும் இரு கரையோரப் பகுதிகளில் தலா சுமார் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டுதல், நான்கு வழிச்சாலை மற்றும் பூங்காக்கள் அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் மூலமாக சுமார் ரூபாய் 303 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் இரு கரையோரப் பகுதிகளில் தலா 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு தடுப்புச் சுவர் கட்டி, நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி நிதியின் கீழ், சுமார் ரூபாய் 32 கோடி மதிப்பீட்டில் வைகையாற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. ரூபாய் 23.17 கோடி மதிப்பீட்டில் குருவிக்காரன் சாலைப் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வருகின்றது.

மதுரை மாநகரில் பாரத்மாலா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரை-செட்டிக்குளம் உயர்மட்டப் பாலம் ரூபாய் 544.23 கோடி மதிப்பீட்டிலும், செட்டிக்குளம்-நத்தம் நான்கு வழிச்சாலை ரூபாய் 345.54 கோடி மதிப்பீட்டிலும், மதுரை வெளிவட்டச் சாலை வாடிப்பட்டி முதல் திருமங்கலம் வரை ரூபாய் 493.02 கோடி மதிப்பீட்டிலும், மேலூர்- காரைக்குடி நான்கு வழிச்சாலை ரூபாய் 659 கோடி மதிப்பீட்டிலும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகரில், தேசிய நெடுஞ்சாலை 49 நீட்சியில் பல்வழி மேம்பாலம் மற்றும் மைய தடுப்புச்சுவர் அமைத்தல் மற்றும் வடிகால் அமைக்கும் பணி ரூபாய் 52.04 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்பொருட்டு, மீனாட்சி மருத்துவமனை முதல் கப்பலூர் வரை ரூபாய் 209 கோடி மதிப்பீட்டில் மதுரை சுற்றுச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

மதுரை மாநகரில் ரூபாய் 55 கோடி மதிப்பீட்டில் காலவாசல் சந்திப்பு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதன் காரணமாக, விமான நிலையம் அருகேயுள்ள சுற்றுச் சாலையை, விமான ஓடுதளத்திற்கு, சாலை கீழ்ப்பாலமாக அமைக்க ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

தமிழக அரசால் நிறைவேற்றப்படும் இத்தனை திட்டங்களும் எதிர்க்கட்சியினர் கண்களுக்கு மட்டும் தெரியவில்லை. என்ன காரணமென்று தெரியவில்லை, பார்க்கின்ற பார்வையில் கோளாறா? மனதில் கோளாறா? என்று தெரியவில்லை. இந்தத் திட்டங்களை யாரும் மறைக்க முடியாது. ஆனால், இந்த ஆட்சியில் ஒன்றுமே நடைபெறவில்லை, இந்த ஆட்சி ஒரு தண்ட ஆட்சி என்று திமுக தலைவர் சொல்கிறார். அவர் வெளியில் வந்து பார்த்தால்தானே இங்கே நடைபெறுகிற பணிகள் தெரியும்.

அறையின் உள்ளே அமர்ந்து பார்த்தால் அறைதான் கண்ணுக்குத் தெரியும். எனவே, அறையிலிருந்து வெளியில் வந்து பாருங்கள், மதுரை மாநகரத்தில் நான் அறிவித்த பணிகளெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. ஒரு அரசு எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

வேண்டுமென்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு அவதூறு செய்தியைச் சொல்லி, எப்பொழுதும் எங்கள் மீது பழி சுமத்துவதுதான் இவர்களுடைய வாடிக்கை. இவர்கள் என்ன செய்வோம் என்று இதுவரை எதுவும் சொல்லவில்லை. ஆனால், நாங்கள் செய்ததையும் பாராட்ட மனம் கிடையாது. ஒரு அரசாங்கம் அமைப்பது என்றால், அந்த அரசாங்கத்தில் என்னென்ன திட்டங்கள் நிறைவேறுகிறது என்பதை நாங்கள் புள்ளிவிவரங்களோடு கூறுகிறோம். இதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள், அதற்கு நாங்கள் பதில் சொல்லத் தயாராக இருக்கின்றோம். ஒன்றுமே செய்யவில்லை என்றால், இவை எல்லாம் இந்த மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட திட்டங்கள்.

இன்றைக்குக்கூட, சுமார் 1,296 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அடுத்த சந்ததியினருக்கு குடிநீர் பிரச்சினை வரக்கூடாது என்ற அளவிற்கு தொலைநோக்குப் பார்வையோடு இந்தத் திட்டத்தை உருவாக்கியிருக்கின்றோம். இங்கே மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் 76 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே பல கூட்டுக் குடிநீர் திட்டங்களை நான் திறந்து வைத்திருக்கின்றேன்.

தமிழக அரசைப் பொறுத்தவரை, குடிநீர் பிரச்சினை இருக்கக்கூடாது என்பதைப் பிரதான கொள்கையாகக் கொண்டு எங்கு குடிநீர் பிரச்சனை இருந்தாலும், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குண்டான நடவடிக்கைகளை எடுத்து விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நகரப்பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்புற மக்களுக்கும் குழாயின் மூலமாகப் பாதுகாக்கப்பட்ட குடிநீரைக் கொடுக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம்.

40 லட்சம் குடிநீர் இணைப்புகள் கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. ரூபாய் 3,600 கோடி மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து இந்தத் திட்டத்தை நாங்கள் வகுத்துக் கொடுக்கின்றோம்.

ஆகவே, எங்கள் அரசைப் பொறுத்தவரை, இரவு, பகல் பாராமல் எங்களுடைய அமைச்சர்கள் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு செயலாக்கத்திற்குக் காரணம் துணை முதல்வர். அவர் நிதி அமைச்சராக இருக்கின்றார். எந்தத் திட்டத்தை அறிவித்தாலும், அதற்கேற்றவாறு நிதியை உருவாக்கி எங்களுக்கு வழங்கிக் கொண்டேயிருக்கின்றார். நான் முதல்வராக இருந்தாலும், ஓபிஎஸ் நிதி அமைச்சராகப் பல ஆண்டுகாலம் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம் பெற்று, மிகுந்த அனுபவம் இருப்பதால் இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் கொண்டுவந்து கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவையான நிதி ஆதாரத்தைப் பெருக்கி, அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறார் துணை முதல்வர் என்பதை இந்த நேரத்தில் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இதுபோன்று, எல்லாத் துறைகளிலும் தேசிய விருதுகளை குவித்த அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த் துறை என்று அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துக் கொண்டிருக்கின்றோம்.

கூட்டுறவுத் துறையை எடுத்துக் கொண்டால், ஏழை, எளிய விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வேளாண் பெருமக்களுக்குக் கடனுதவி வழங்கும் அரசாக எங்களது அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. உரிய காலத்தில் கடனுதவி வழங்குகின்ற காரணத்தால், என்றைக்கும் இல்லாத அளவிற்கு தற்பொழுது டெல்டா பகுதியில் அதிக விளைச்சலைக் கண்டிருக்கின்றோம். அதேபோல, வருவாய்த் துறையில் தகுதியான ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கி ஏழை, எளிய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுகின்ற ஒரே அரசாக இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சிக்காலத்தில்தான், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். விரைவாக அந்தத் திட்டம் தொடங்கவிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையும் மதுரையில் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.

அதேபோல, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர வரலாற்றுச் சிறப்புமிக்க 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திக் காட்டியிருக்கின்றோம். சேலம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் நிலை பற்றி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கிராமப்புறத்தில் படிக்கின்ற மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்று அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். அப்படி அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற 41 சதவீதம் மாணவர்களில் கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலமாக 6 மாணவர்களுக்குத்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால், இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. இந்த உள் ஒதுக்கீட்டின் மூலமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் 3 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 13 மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், 10 ஆதிதிராவிட மாணவர்கள், என 26 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கின்றது. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியர்களின் மருத்துவக் கல்லூரிக் கனவை நனவாக்கிய அரசு எங்களுடைய அரசு.

சிறப்பான சாலைகள் அமைத்துக் கொண்டிருக்கின்றோம், ஏராளமான தடுப்பணைகள் கட்டிக் கொண்டிருக்கின்றோம், நீண்ட காலமாக தூர்வாரப்படாத ஏரிகளெல்லாம் விவசாயப் பிரதிநிதிகளைக் கொண்டு தூர்வாரி, பருவகாலங்களில் பெய்கின்ற மழைநீர் ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேமித்து வைக்கக்கூடிய ஒரு திட்டத்தை எங்களுடைய அரசுதான் உருவாக்கித் தந்திருக்கின்றது. இப்படி பலவேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தலை மையமாக வைத்து எங்களை வசைபாடாத நாளே கிடையாது, அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார். நாங்கள், மக்களை நேரடியாகச் சந்தித்து அந்தந்த மாவட்டங்களில் எவ்வாறு நிலைமை இருக்கின்றது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு திட்டங்களைத் தீட்டி, மக்களுடைய எண்ணங்களை நிறைவேற்றுகின்ற அரசாக எங்களுடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கண்ட கனவை தமிழக அரசு நனவாக்கிக் கொண்டிருக்கின்றது. மதுரை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, மதுரை புறநகர் பகுதிகளுக்கும் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கிய அரசு இது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்