தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு நாளில் சபதமேற்போம் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் இருவரும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
“டிசம்பர், 5, அதிமுகவே உலகமென வாழும் கோடான கோடி தொண்டர்களுக்கும், அம்மா என்னும் மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து, அதனை உளமார நேசித்து வாழும் உலகத் தமிழர்களுக்கும், பெருந்துயர் தந்த பேரிடர் கருப்பு நாள்.
சிப்பிக்குள் தவமிருந்து முத்துக்குள் உதிப்பது போல், செந்தமிழ் பூமிக்கு சேவையாற்றி சந்தனமாய் கரைவதற்கே, சந்தியா தாய் வசத்தில் சங்கல்பம் வாங்கி வந்த சரித்திரமாய், நெருப்பாற்றில் நீந்தி, நித்தமும் பிறப்பெடுத்த பீனிக்ஸ் பறவையாய் தேசத்தின் பொது வாழ்வு முழுவதுமே ஆண் ஆதிக்கத்தால் நிரம்பி வழிந்த காலத்தில், பேரறிஞர் அண்ணா அமர்ந்த பெருமை மிக்க அதே மாநிலங்களவை இருக்கையில், தான் அமர்ந்து, பின்நாளில் அகவை நாற்பதில் அரசாள வந்து அரசியல் உலகையே தேனாதிக்கமாய் மாற்றிக் காட்டிய திறமைகளின் குவியலாக.
» முதுகலை தடயவியல் மருத்துவர்கள் தான் பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
» புரெவி புயல் பாதிப்பு: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை: அரசு அறிவிப்பு
இந்நாட்டு அரசியலை தென்நாட்டுப் பக்கம் திருப்பிக் காட்டி, 6 முறை தமிழகத்தை அரசாண்டு, தன் சிங்க நாதத்தை முடித்துக்கொண்டு வங்கத்துக் கடலோரம் துயில் கொண்டு, நம்மை வழிநடத்தும் தெய்வம் நம்மைவிட்டு விடைபெற்ற இந்நாளில் தான், அவர் தம் நீங்காத நினைவுகளில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் மட்டுமல்ல, உலக தமிழினமே ஆழ்ந்திருக்கிறது.
``மக்களால் நான், மக்களுக்காகவே நான்’’ என்னும் மாதவத்தால் வாழ்ந்து, எம் மக்கள் யாரிடத்திலும் எதற்காகவும் கையேந்தி நிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் லட்சியத்தைச் சுமந்த அவர் நம்மைவிட்டுப் பிரிந்தாலும், நம்மிடம் அவர் ஒப்படைத்துப் போன அரசாட்சியை இன்று இந்திய தேசமே புகழும் நல்லாட்சியாக நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கலை உலகில் அவதரித்து, தமிழ் உலகை இலை உலகாய் அலங்கரித்து, கம்பீரமாய் வலம் வந்த அந்த வாகைத் தாயை வாக்கால் வெல்ல முடியாமல் வழக்கால் வீழ்த்திட நயவஞ்சகக் கூட்டம் நரிசூழ்ச்சி செய்தது. இமயத்தை களங்கப்படுத்த கரையாண்கள் கூடி சதிவலை விரித்தது.
அன்னமிட்டே வளர்ந்த இயக்கத்தை, கன்னமிட்டு அழிக்கவே எண்ணம் கொண்டு அலைந்த தீய சக்திகளால், பொய் வழக்கால் வஞ்சிக்கப்பட்டபோதும்... உருகும் மெழுகாக உழைத்த அவரின் ஒப்பில்லா புகழும், இந்த தேசத்திற்கு அவர் ஆற்றிய அருந் தொண்டும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நீங்காத நிறையாசனமிட்டு அமர்ந்திருப்பது சத்தியமாகும்.
தொட்டில் குழந்தைத் திட்டம், மகளிர் காவல் நிலையம், பெண் கமாண்டோ படை, தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் ஸ்கூட்டி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி, விலையில்லா அரிசி, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்ட தனியறைகள், மாணாக்கர்களுக்கு மடிக் கணினி, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு, இப்படியாக புதுமைகளும், புரட்சிகளும் இத்தமிழ் மண்ணில் புரண்டோட தேன் தமிழ் அறப்பணிகளோடும், தெய்வத் திருப்பணிகளோடும், நல்லாட்சிக்கான இலக்கணத்தை இந்த நாட்டிற்கே உரைத்தவர் அவர்.
ஏழைகளின் சொர்க்கம் என்று அரசியல் உலகம் சுட்டிக் காட்டுகின்ற அதிமுகவை கட்டியெழுப்பிய எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா கட்சிக்கு தலைமையேற்று, பல்வேறு சோதனைகளையெல்லாம் தமது அறிவாற்றலால் வென்றெடுத்து, மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல்கள் மூலமாக, கழகத்திற்கான வெற்றித் தேரோட்டத்தை மீண்டும் கம்பீரமாய்த் தொடங்கி, அதனைத் தொடர்ந்து 1991 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுகவை அடியோடு ஒழித்துக்கட்டி, மீண்டும் தமிழ் மண்ணில் இரட்டை இலை ஆட்சியை மலர்வித்தவர்.
சட்டம்-ஒழுங்கில் சமரசம் செய்துகொள்ளாத ஆளுமைத் திறன், எதுவரினும் எதிர்கொள்ளும் நெஞ்சுரம், சாதி, மத அரசியலுக்கு இடம் கொடுக்காத தீர்க்கம், வானிடிப் பேச்சு, வளையாச் செங்கோல், ஏணிகளின் தயவின்றியே வான் தொடும் வல்லமை என, உலகமே போற்றும் உயரிய நிர்வாகப் புரட்சியால் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாய் உயர்த்தியவர் நம் தலைவி.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலீடுகளை தமிழகம் நோக்கி ஈர்த்தார். இல்லார்க்கு உதவ வேண்டும், ஈகைக்கும் வாகைக்கும் இலக்கணமாய் நடக்க வேண்டும், நீதிக்கு தலைவணங்க வேண்டும், நினைத்ததெல்லாம் முடிக்க வேண்டும் என்னும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வகுத்துக் கொடுத்த வழித் தடத்தில் அதிமுக அரசு வெற்றிநடை போட்டு வருகிறது.
வீதி வழி நடந்து போகும் சாமானியரையும், கோட்டை கொத்தளத்தில் அமர்த்தி பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை பாமரத் தொண்டனுக்கும் வழங்குகின்ற ஒரே இயக்கம், உலகம் வியந்து போற்றுகின்ற ஒப்பில்லா ஜனநாயகப் பேரியக்கம் அதிமுக தான். அத்தகைய பெருமை கொண்ட நமக்கு காத்திருக்கும் கடமை என்பது, "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என்று நம் அவர் புனித ஜார்ஜ் கோட்டையில் ஓங்கி ஒலித்திட்ட, அந்த கடைசி சூளுரை ஒன்று மட்டும் தான். அதனை கடுகளவும் குன்றாது காப்பாற்றுவது நம்மை வாழ்வித்த தாய்க்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடனாகும்.
பள்ளிகளில் பந்தியிட்டு, ஆலயத்திலும் அன்னமிட்டு பசிப் பிணி இல்லாத தமிழகத்தை உருவாக்கி, ``அமைதி, வளம், வளர்ச்சி’’ என்னும் உறுதிகொண்ட லட்சியத்தை வென்றெடுத்து, முக்கடல் சூழ்ந்த பாரதத்தில் முதலிடத்தைப் பிடித்த பொற்கால அரசு என்று ஜெயலலிதாவின் செங்கோல் செலுத்துதலை ஜனநாயகத்தின் வழியே ஒருநாளும் வெல்ல முடியாது என்பதனை உணர்ந்து கொண்டவர்கள் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் அலைய வைத்து, அவரது ஆரோக்கியத்தை குலைத்து, அவரது ஆயுளையே பறித்தவர்கள் தான், இன்று அதிகாரத்தை அபகரித்துவிடலாம் என்று வெறிபிடித்து அலைகிறார்கள்.
மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து, தான் ஓடி ஓடி உழைத்து சேர்த்த செல்வங்களைக் கூட, தேசத்திற்கு இன்னல் என்றதும், தான் அணிந்திருந்த பொன் நகைகளை புன்னகையோடு அள்ளிக் கொடுத்த அவரை வஞ்சகத்தால் வீழ்த்திய கும்பல் இப்போது அதிகாரப் பசியில் வாய் பிளந்த வண்ணம் வெறிகொண்டு அலைகிறது என்றால், அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு, தாய் வளர்த்த பிள்ளைகளாம் நமக்கே அது உரியதாகும்.
ஒட்டிய வயிறுகளுக்கெல்லாம் உணவிட்டு மகிழ்ந்து, ஓலை குடிசைக்கும் ஒரு விளக்கேற்றி, உலகத்தர கல்வி, உயரிய மருத்துவம், உழவினத்தின் நீரோட்டம் பெருக்கும் திட்டங்கள் என தாய் நாட்டில் தமிழகத்தை தலையாய மாநிலமாய் உயர்த்துவதையே லட்சியமாகக் கொண்டு உழைக்கின்ற இயக்கம் அனைத்திந்திய அதிமுக.
அதே வேளையில் அப்பனுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப் பேரன் என்று கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு அதிகார வெறிபிடித்து அலைகின்ற சதிகாரக் கூட்டத்தை வேரறுத்து வென்று காட்ட நம் தலைவி ஜெயலலிதா மறைவுற்ற இந்நாளில், அவர்தம் திருவுருவப் படத்திற்கு 5.12.2020 - சனிக் கிழமை மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி வைத்து, தமிழகத்து மக்களை நெஞ்சில் சுமந்து, நம் தன்னிகரில்லா தலைவி சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சத்தியமாக்கிட; சாத்தியமாக்கிட அகல் விளக்கு ஏற்றி வைத்து அவரின் திருவுருவ படத்தின் முன்னே வீர சபதம் எடுப்போம்.
"தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே" என்பதை நனவாக்கி முடிப்போம். பொதுவாழ்வு என்பது அதிகார நாட்களையே அபகரிப்பது அல்ல, வறியோரின் முகத்தில் வந்தமரும் புன்னகைக்காக நெறியோடு உழைப்பதும், நேர்த்தியோடு நடப்பதும், உத்தமர்கள் வழியில் ஓய்வின்றி உழைப்பதுமே, கழகத் தொண்டனின் கடமை என்பதனை வங்கத்துக் கடலோரம் துயில் கொள்ளும் நம் வழித்துணை தெய்வமாம் ஜெயலலிதா பெயராலே சபதம் எடுப்போம். சத்தியத்தில் ஜெயிப்போம்”.
இவ்வாறு ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிக்கைவிடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago