மதுரை மக்களின் கால் நூற்றாண்டு கனவு திட்டமான ரூ.1,295 கோடி முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு முதல்வர் கே.பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
மூவாயிரம் ஆண்டிற்கு மேற்பட்ட வரலாறு கொண்ட சிறப்புமிக்க பண்பாட்டு நகரம் மதுரை. ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடிய வைகை ஆற்றால் மதுரையில் விவசாயமும் செழிப்பாக நடந்தது.
நகர்ப்பகுதியிலும் வண்டியூர் கண்மாய், செல்லூர் கண்மாய், வில்லாபுரம் கண்மாய், தல்லாகுளம் கண்மாய், உலகனேரி, தத்தனேரி கண்மாய், மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் என ஏராளமான நீர்நிலைகள் இருந்ததால் குடிநீருக்கும் சிக்கல் ஏற்பட்டதே இல்லை.
காலப்போக்கில் கண்மாய்கள் அழியத்தொடங்கி வைகை ஆறும் தண்ணீர் வராமல் வறண்டது. வைகை அணையை நம்பியே மதுரையின் குடிநீர் ஆதாரம் இருந்து வருகிறது.
வைகை அணையில் நீர் இருப்பு இல்லாமல் மதுரையில் கோடையில் நிரந்தரமாகவே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுபாட்டின் உச்சமாக கோடை காலத்தில் ஒரு குடம் தண்ணீர் ரூ.8-க்கும், ரூ.10-க்கும் விலை கொடுத்து வாங்கிம் குடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
அன்றாட வீட்டு உபயோகத்திற்கு லாரி தண்ணீர், டிராக்டர் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இப்படியாகக் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் மதுரை மக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் மதுரையின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.1,295 கோடியில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை, கடந்த 2 ஆண்டிற்கு முன் இதே டிசம்பர் மாதத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவித்தார்.
தற்போது இந்தத் திட்டம் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் கே.பழனிசாமி, நாளை இந்த திட்டத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இந்தத் திட்டம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் போல் பிரம்மாண்ட குடிநீர் திட்டமாகும். இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் மதுரையில் 24 மணி நேரமும் மக்களுக்கு மாநகராட்சியால் குடிநீர் வழங்க முடியும் என சொல்லப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மதுரை மக்களுக்கு முதன்முதலாக குடிநீர் 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. வைகையில் கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கு கிணறுகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறிப்பாக மதுரை மாநகரில் தென்பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
1904-ம் ஆண்டு ஆரப்பாளையம் பகுதியில் குடிநீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு சுற்றுப்புறப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
அடுத்தபடியாக 1970-ம் ஆண்டு வடபகுதிகள் முழுவதும் லாரிகள் மூலமும் விநியோகம் செய்யப்பட்டது. 1980-ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மேற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகுதான் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் முறையினை வடபகுதி, தென்பகுதி ஆகிய பகுதிகளுக்குத் தீர்வு காணப்பட்டது.
அதன் பின்னர் உயர்மட்ட தொட்டிகள் கட்டப்பட்டு மாநகராட்சியின் மேடு பகுதிகள், பள்ளமான பகுதிகள் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது அந்தப் பழைய குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. வைகை அணையில் குடிநீர் இல்லாதபோது தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
மதுரை மாநகரில் சுமார் 17 லட்சம் மக்கள் தொகை உள்ளனர். அவர்களுக்கும், எதிர்கால மக்கள் தொகை அடிப்படையிலும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை வராத வகையில் ரூ.1295 கோடி மதிப்பீட்டில் முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு லோயர் கேம்பிலிருந்து 125 எம்.எல்.டி. குடிநீர் குழாய்கள் மூலம் வைகை அணைக்கு அருகாமையில் உள்ள பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளுக்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யப்படுகிறது.
முல்லைப்பெரியாறு தண்ணீர் வைகை அணையில் இருந்து ஏறத்தாழ 152 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மதுரை மக்களுக்கு குடிநீர் கொண்டு வரப்படவுள்ளது.
42 உயர்மட்ட தொட்டிகள் உள்ளன. இன்னும் 40 உயர்மட்ட தொட்டிகள் கட்டப்பட உள்ளன. மதுரை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளில் உள்ள பழைய குழாய்கள் அகற்றப்பட்டு புதிய குழாய்கள் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கு வழி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago