போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.5-ல் திமுக கருப்புக்கொடி போராட்டம்: மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிவு

By செய்திப்பிரிவு

வேளாண் விரோதச் சட்டங்களை ஆதரித்து, அதற்கு முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவில் உண்டு என்றால், அது அதிமுக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் எனத் தெரிவித்துள்ள திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத் தீர்மானம், விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை, காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்ட நிலையில், புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.05 அன்று திமுக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

“உழுவார், உலகத்தார்க்கு ஆணி”; மக்களின் பசிப் பிணித் துயர் போக்கும் தோணி; நாட்டின் வளர்ச்சிக்கு ஏணி என்ற முதன்மையையும், முக்கியத்துவத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும். நாட்டின் விவசாயப் பெருமக்கள் முன்வைத்த, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட, எந்தக் கோரிக்கையையும் ஏற்காமல், எல்லா வகையிலும் அவர்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

“அன்று நஞ்சை உழுது சாகுபடி ஆனது, இன்று நஞ்சை உண்டு சாகும்படி ஆனது” என்று, கவிஞன் வடித்த கையறுநிலைக் கண்ணீர் இன்னும் வற்றிய பாடில்லை. அனைத்து வகைகளிலும் வஞ்சிக்கப்பட்டிருப்பவர்கள் நமது விவசாயிகள். அவர்கள் எத்தனை அடிகளைத்தான் தாங்குவார்கள்? பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்கள்; இப்போது பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார்கள்.

“டெல்லி சலோ” என்ற செயல் முழக்கத்துடன், பல மாநிலங்களிலிருந்து பல நூறு மைல் தூரத்தைக் கடந்து, இந்திய நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு; பசியும், பட்டினியுமாகக் காத்துக் கிடந்து; தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏறக்குறைய ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட விவசாயப் பெருமக்கள், எஞ்சியிருக்கும் தங்கள் வாழ்வாதாரத்தையும், நாட்டின் முதுகெலும்பான வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, தீரத்துடன் போராடி வருவது கண்டு பெரிதும் வியந்து, திமுக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம், மனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் 62 கோடி விவசாயிகளின் சார்பில் நடத்தப்பட்டு வரும் மாபெரும் இந்தப் போராட்டம், தான் ‘கண்டதே காட்சி, கொண்டதே கோலம்’ என்று பிடிவாத ஆணவம் கொண்ட மத்திய பாஜக அரசை அசைத்து அதிர்வடையச் செய்து கொண்டிருக்கிறது.

போராட்டத்தின் தொடக்கத்தில், புழுக்கள்தானே இவர்கள் எல்லாம் என்றெண்ணி, ஏளனம் பேசியவர்கள் - எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் இது என்று எள்ளி நகையாடியவர்கள் போலீஸை வைத்துப் ‘ பூச்சாண்டி’ காட்டியவர்கள்- கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, கூட்டங்களைக் கலைத்துக் குலைக்கப் பார்த்தவர்கள் - தற்போது, உப்பரிகையிலிருந்து சற்று இறங்கி வந்து, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் கட்ட வெற்றி என இக்கூட்டம் கருதுகிறது.

“குறைந்தபட்ச ஆதாரவிலை” என்ற சொற்றொடரே இல்லாத வேளாண் சட்டங்களை, நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமாக விவாதமே இன்றி அவசரம் அவசரமாக ஏன் நிறைவேற்றுகிறீர்கள்? இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார திருத்தச் சட்டத்தையும் கொண்டு வரத் துடியாய்த் துடிப்பது ஏன்? “விவசாய மண்டிகள்”, “வேளாண் விளைபொருட்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்” போன்ற எல்லாவற்றையும் அழித்தொழித்துவிட வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் இப்படியெல்லாம் சட்டம் கொண்டு வருவது ஏன் என்று, திமுக தலைவரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேள்வி எழுப்பி - போராடி - கண்டனக் கணைகளைத் தொடுத்த போதெல்லாம், சிறிதும் செவிமடுக்காத மத்திய பாஜக அரசு, அடாவடியாக, கார்ப்பரேட்களுக்கு உதவிடும் தொலைநோக்குத் தந்திரத்துடன், இந்த வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.

விவசாயிகளின் வயிற்றில் அடித்து, அவர்தம் வேதனைகளைப் பன்மடங்கு பெருக்கி, காவிரி டெல்டாவைப் பாலைவனமாக்கும் இந்த வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து, தனது விவசாயிகள் விரோதப் போக்கையும் - மத்திய பாஜக அரசுக்கான காரியக் கூத்தாடும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தி - “அரசியல் கூட்டணிக்காக” இங்குள்ள அதிமுக அரசு பெருமைப்பட்டுக் கொண்டதை, இந்தக் கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது.

இந்தியாவே இன்றைக்கு எழுந்து நின்று, இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, டெல்லி செங்கோட்டை சிம்மாசனத்தில் வீற்றிருப்போரின் செவிகள் கிழியும் அளவிற்கு இடியென முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறது. எஃகு போன்ற உறுதியுடன் விவசாயிகள் அடக்குமுறைக்கு அஞ்சாது - துப்பாக்கிக் குண்டுகளுக்கும் துவளாது, மைதானத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தை - அறவழியில் நடத்தி வருகிறார்கள்.

ஆனால், இந்த வேளாண் விரோத சட்டங்களை ஆதரித்து, அதற்கு முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கிய ஒரே முதல்வர் இந்தியாவில் உண்டு என்றால், அது அதிமுக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் போட்டி போட்டுக் கொண்டு பாஜகவை விட ஒரு படி மேலே சென்று ஆதரித்த கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான்.

மாதிரி (Model) வேளாண் சட்டம் ஒன்றை, கருத்துக் கேட்பிற்காக மத்திய பாஜக அரசு அனுப்பியவுடன், விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக்கும் அந்த மாநில அளவிலான சட்டத்தை, மத்திய பாஜக அரசுக்கு முன்பே இயற்றி, விவசாயிகளை வஞ்சித்தவரும் அதிமுக முதல்வர்தான்.

விவசாயி என்று போலி வேடம் தரித்து , விபரீதமாக மக்களை ஏமாற்றி, விவசாயிகளின் கவலைகள் - இன்னல்கள் - ஏதும் அறியாதது போல், கபட நாடகம் நடத்தி - பதவி சுகத்திற்காகவும், சுய பாதுகாப்புக்காகவும், பாஜகவிற்கு எதிலும் எப்போதும் பல்லக்குத் தூக்கி; தமிழக விவசாயிகளுக்கும், தமிழக வேளாண் முன்னேற்றத்திற்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ள முதல்வர் பழனிசாமிக்கும், அதிமுக ஆட்சிக்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

விவசாயிகளின் உணர்வுக் கொந்தளிப்பான வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்; விவசாயிகளின் ஜீவாதார உரிமைகளைப் போற்றவும், இந்திய வேளாண்மைத்துறை வீழ்ந்து விடாமல் காப்பாற்றவும், தலைநகராம் டெல்லியில் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வரும் விவசாயிகளின் மகத்தான போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் வருகின்ற டிசம்பர் 5 (சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், திமுக சார்பில், கரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அற வழியில், ஜனநாயக முறையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி ஏந்தி, “ஆர்ப்பாட்டம்” நடத்துவது என்று, திமுக மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து விவசாய அமைப்புகளும் - விவசாயிகளும் - பொதுமக்களும் பெருமளவில் ஆதரவு தெரிவித்து, பங்கேற்றிட வேண்டுமென இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு திமுக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்